லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு
பிரிவுகள்
Full Description
لمعة في ليلة القدر
லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு
<தமிழ் – تاميلية >
Author' name
திக்குவல்லை இமாம்
اسم المؤلف
سيد إسماعيل إمام بن يحيا مولانا
Reviser's name:முஹம்மத் அமீன்
مراجعة:محمد أمين
“லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு”
அளவற்ற அருளாளனும் நிகறற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதர் நமது நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.
வருடம் தோரும் ரமழான் மாதம் வருகின்ற போது, லைலதுல் கத்ர் - புனித இரவு பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. அது பற்றி நினைவூட்டப்படுகிறது. ஏனெனில் இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்று கின்றது என்பது பெரும் பாண்மை முஸ்லிம் அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். மேலும் இவ்விரவின் சிறப்புக் குறித்து அல்குர்ஆனில் ஒரு அத்தியாயம் அருளப் பட்டுள்ளதும், பல நபி மொழிகளில் அதன் சிறப்புக்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதும் இதற்குக் காரணமாக அமைகின்றன.
بِسمِ اللَّـهِ الرَّحمـٰنِ الرَّحيمِ
إِنّا أَنزَلنـٰهُ فى لَيلَةِ القَدرِ ﴿١﴾ وَما أَدرىٰكَ ما لَيلَةُ القَدرِ ﴿٢﴾ لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ ﴿٣﴾ تَنَزَّلُ المَلـٰئِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ ﴿٤﴾ سَلـٰمٌ هِىَ حَتّىٰ مَطلَعِ الفَجرِ ﴿٥﴾
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹவின் திருப்பெயரால்
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவில் இறக்கி வைத்தோம்.
அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும் தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
ஈடேற்றம் உண்டாகுக! அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும் (97; 1-5)
இப்படி இந்த இரவைப் பற்றி இந்த அத்தியாயம் சிலாகித்துக் கூறுகின்றது. மேலும் இந்த இரவின் கண்ணியம் குறித்துக் குறிப்பிடும் பல நபி மொழிகளில், சில ஏற்றுக் கொள்ளப் பட்டவையாகவும், இன்னும் சில மறுக்கத் தக்கனவாகவும் இருக்கின்றன.
பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர், (இன்னொரு அறிவிப்பின் படி நான்கு நபர்கள்) எந்தவொரு பாவ காரியத்திலும் ஈடுபடாமல் ஆயிரம் மாதங்கள் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். அது பற்றி தன் தோழர்களிடம் நபியவர்கள் ஒரு முறை குறிப்பிட்ட போது, தோழர்கள் வியப்படைந்தனர். அப்போது உங்களின் உம்மத்தினர் இதற்காக வியப்படைகின்றனரா? என்று அல்லாஹ் கூறினான். பின்னர் லைலதுல் கத்ர் என்ற இரவு அந்த ஆயிரம் மாதங்களை விட மேலானது என்று குறிப்பிட்டதுடன் القدر என்ற அத்தியாயத்தையும் அவன் இறக்கினான். என நபி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, புனித இரவில் புரியும் நல் அமல்களுக்கு ஆயிரம் மாதங்கள் செய்த நல் அமல்களுக்குரிய கூலியை விட சிறந்த கூலி கிடைக்கும் என்பது இந்த நபி மொழியிலிருந்து புலனாகிறது.
இது இவ்வாறிருக்க இஸ்லாமிய சமுதாயம் ஒன்று பட்ட சமுதாயமாகத் திகழ வேண்டுமென்ற நோக்கில் ஹஸன் இப்னு அலீ (ரழி) அவர்கள் தன்னுடைய கிலாபத்தை முஆவியா (ரழி) அவர்களுக்கு விட்டுக்கொடுத்தார்கள். மேலும் அவர்களின் ஆட்சியை அங்கீகரித்து அவரிடம் பைஅத்தும் செய்து கொண்டார்கள். இதன் மூலம் பெரும்பாலும் இஸ்லாமிய உலகில் ஒற்றை ஆட்சி முறை ஒன்று நிலவ வழி ஏற்பட்டது.
எனினும் ஹஸன் (ரழி) அவர்களின் இந்த நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்த ஒருவர் அவரிடம் “நீங்கள் முஸ்லிம்களின் முகத்தில் கரி பூசிவிட்டீர்கள்” என்றார். அதற்கு அவர் “அல்லாஹ் உங்களின் மீது அருள் புரிவானாக. நீங்கள் என்னை குறை கூற வேண்டாம். ஏனெனில் நபியவர்கள் ஒரு முறை மிம்பரில் இருக்கும் போது, அவர்களுக்கு பனூ உமையாக்களின் அதிகாரம் காட்டப்பட்டது. அதை கண்டதும் நபியவர்களுக்கு வெறுப்புண்டானது. அப்போது அவரிடம் “உங்களுக்கு நாங்கள். ஹவ்ழுல் கௌஸரை தந்துள்ளோம்” என்ற செய்தியைத் தாங்கிய அல்கவ்ஸர் அத்தியாயத்தையும் மற்றும் அல்கத்ர் அத்தியாயத்தையும் அல்லாஹ் இறக்கியருளினான்.” என்று ஹஸன் (ரழி) அவர்கள் கூறினார்கள்,
இதன் படி நபியவர்கள் மிம்பரில் இருக்கும் போது, உமையாக்களின் ஆட்சி தலை தூக்கும் என்ற செய்தியையும், அவர்களின் ஆட்சிக்காலம் ஆயிரம் மாதங்களைக் கொண்டது என்ற செய்தியையும்
ليلة القدر خير من ألف شهر“
லைலதுல் கத்ர் என்ற புனித இரவு ஆயிரம் மாதங்ளை விட சிறந்தது” என்ற வாசகம் அவர்களுக்குமுன்னறிவிப்புச் செய்கிறது. எனவே உமையாக்களின் ஆட்சி ‘ஆயிரம் மாதங்ளை விட, அதாவது 83 வருடம் நான்கு மாதங்களை விட ஒரு நாளேனும் கூடவோ குறையவோ மாட்டாது,’ என அவர்களின் ஆட்சியை இழிவு படுத்துவோர் கூறுவர். மேலும் அதனால் தான் உமையாக்களின் ஆட்சி, ஆயிரம் மாதங்களில் முடிவுற்றது என்றும் அவர்கள் கூறுவர். எனினும் இந்த சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள், “அல் கத்ர்” அத்தியாயத்தின் விரிவுரையில் விளக்கியுள்ளார்கள்.
முஆவியா (ரழி) அவர்களுக்கு ஹஸன் (ரழி) அவர்கள் தன்னுடைய ஆட்சியை ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டில் விட்டுக் கொடுத்தார்கள். அப்போது ஸுபைர் (ரழி) அவர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்த மக்கா, மதீனா, அஹ்வாஸ் மற்றும் மேலும் சில ஊர்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் யாவும் முஆவியா (ரழி) அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு ஒற்றை ஆட்சி முறை அமுலுக்கு வந்த அவ்வாண்டு عام الجماعة என அழைக்கப்பட்டது. அது முதல் ஹிஜ்ரி 132 வரை உமையாக்களின் ஆட்சி நிலவியது. பின்னர் ஹிஜ்ரி 132ல் அப்பாஸி பரம்பரையினர் ஆட்சியைக் கைப்பற்றினர். இதன் பிரகாரம் உமையாக்களின் ஆட்சிக் காலம் 92 வருடங்கள் ஆகின்றன. இது ஆயிரம் மாதங்களை விடவும் கூடியதாகும். ஆகையால் உமையாக்கள், ஆயிரம் மாதங்களை விட, அதாவது 83 வருடம் 4 மாதங்களை விட ஒரு நாளேனும் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆட்சி செய்ய மாட்டார்கள், அவர்களின் ஆட்சிக் காலம் 1000 மாதங்களே என்பதை வழியுறுத்தும் ஹதீஸ் ஆதரமற்றதாகும். மேலும் அல்கத்ர் அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதாகும். ஆனால் முன்னர் குறிப்பிட்ட மிம்பர் சம்பவம் மதீனாவில் நடைபெற்ற தாகும். இதன் படியும் இந்த ஹதீஸ் ஆதாரமற்றதாகும், என்பதை இப்னு கஸீர் (ரஹ்) தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும் லைலதுல் கத்ர் இரவின் சிறப்பினைப் புகழ்ந்துரைக்கும் இந்த வாசகம் உமையாக்களின் ஆட்சியை இழிவு படுத்துமாறு அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
லைலதுல் கத்ர் இரவின் சிறப்பு
அல் கத்ர், என்பதற்கு புனிதம் என்று ஒரு பொருள் உண்டு, அதன்படி லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ்களும் சாட்சி பகர்கின்றன. மேலும் இதன் சிறப்பைப் பறை சாட்டி அல் கத்ர் என்ற அத்தியாயமே அருளப்பட்டது. இவ்விரவானது ரமழான் மாதத்தின் இறுதி பத்துகளின் ஒற்றை நாளொன்றில் வரும் என்பதே பெரும் பாண்மை அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எனினும் வருடத்தில் எந்த மாதத்திலும் இந்த இரவு தோன்ற வாய்ப்புண்டு என சிலர் கருத்து தெரித்துள்ள போதிலும், அந்தக் கருத்து ஏற்புடையதல்ல. என்பதே பெரும் பாண்மையினரின் அபிப்பிராயமாகும்.
شَهرُ رَمَضانَ الَّذى أُنزِلَ فيهِ القُرءانُ هُدًى لِلنّاسِ وَبَيِّنـٰتٍ مِنَ الهُدىٰ وَالفُرقانِ ۚ
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர் வழிகாட்டும் திருக்குர்ஆன் இறக்கப் பட்டது” (2;185)
ரமழான் மாத்தில்தான் அல்குர்ஆன் அருளப் பட்டது என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது, மேலும்
إِنّا أَنزَلنـٰهُ فى لَيلَةِ القَدرِ
“நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை லைலதுல் கத்ர் எனும் ஓர் இரவில் இறக்கி வைத்தோம்” (97;1) என்ற வசனம், அல்குர்ஆன் லைலத்துல் கத்ர் இரவில் இறக்கப் பட்டதை உறுதி செய்கின்றது. எனவே இவ்விரு வசனங்களையும் தொடர்வு படுத்திப் பார்க்கும் போது, லைலதுல் கத்ர் என்ற புனித இரவு ரமழான் மாத்தில் தான் தோன்றும் என்பது நிரூபணமாகிறது. எனவே லைலத்துல் கத்ர் இரவில் அல்குர்ஆன் இறக்கப் பட்டதானது, அவ்விரவுக்குச் சிறப்பைத் தருகிறது. மேலும் அவ்விரவில் தான் குறித்த வருடத்தில் நடைபெற வேண்டிய சகல காரியங்களும் வகைப்படுத்தப்பட்டு பிரிக்கப்படுகின்றன. இதுவும் இந்த இரவுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு சிறப்பாகும். இதனை பின் வரும் திரு வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது,
فيها يُفرَقُ كُلُّ أَمرٍ حَكيمٍ ﴿٤﴾
“உறுதியான எல்லா காரியங்களும் அதில் (லைலத்துல் கத்ரில்) தான் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன.(44;4)
இதன் பிரகாரம் குறித்த வருடத்தில் நிகழ வேண்டிய பிறப்புக்கள், இறப்புக்கள், உணவின் பரிமாணங்கள், மற்றும் விபத்துகள், அனர்த்தங்கள் என்று சகல காரியங்களும் திட்டமிடப் பட்டு பிரிக்கப்படுகின்றன. பின்னர் பொருப்பு வாய்ந்த மலக்குகளிடம் அவை ஒப்படைக்கப் படுகின்றன. அதன்படி அதனை அவர்கள் அமுல் படுத்துவர். வருடம் தோறும் குறித்த வருடத்தில் நடை பெற வேண்டிய காரியங்கள் குறித்து திட்டமிடும் நிகழ்வு லைலதுல் கத்ர் இரவில் இவ்வாறு நிறைவேற்றப் படுகிறது.
தனிப்பட்ட இந்த பிரத்தியேகமான முன் தீர்மானத்தைத் தவிர, வானம் பூமி தோன்றுவதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், உலகில் நடை பெற வேண்டிய காரியங்கள் குறித்து பொதுவான செயற் திட்டம் ஒன்றை அல்லாஹ் அமைத்துள்ளான், என்பதை ஸஹீஹான ஹதீஸ்கள் எடுத்துரைக்கின்றன.
எவ்வாறாயினும் லைலத்துல் கத்ர் என்ற புனித இரவு ரமழான் மாத்தில் தான் என்பதில் ஐயமில்லை. ஆயினும் ரமழானின் எத்தனையாவது இரவில் அது தோன்றும் என்பதை உறுதியாக கூற முடியாது.
ஏனெனில் இவ்விரவு எப்பொழுது தோன்றும் என்பது குறித்து நபியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் எடுத்துக் கூறிய போது, அதனை தன் தோழர்களுக்கு எத்தி வைக்க நபியவர்கள் புறப்பட்டார்கள். அப்போது வீதியில் இருவர் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்ததை அவதானித்த நபியவர்களுக்கு லைலதுல் கத்ர் பற்றிய முக்கிய தகவல் மறந்து விட்டது. இதுவே அந்த இரவு எது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமைக்குக் காரணமாகும்.
எனினும் அந்த இரவு ரமழானின் இறுதி பத்துகளின் 21, 23, 25, 27, 29 ஆகிய ஒற்றை நாட்களில் ஏதாகிலும் ஒரு தினத்திலோ அல்லது ரமழானின் கடைசி இரவிலோ ஏற்படலாம் என்று ஹதீஸ்களில் வந்துள்ளன. இமாம் ஷாபிஈ (ரஹ்) இது பற்றிக் குறிப்பிடும் போது, “நபியவர்கள் இப்படிக் கூறக் காரணம், இத்தினத்தைப் பற்றி நபியிடம் யாரேனும் விசாரித்த போது, அவர்களுக்குப் பதிலளிக்கின்ற சமயத்தில் இப்படி பதிலளித்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். “அதாவது ஒருவர் “இவ்விரவை இன்ன தினத்தில் தேடட்டுமா?” என்று கேட்ட போது, அதற்கு நபியவர்கள், “ஆம் அதனை அன்றைய தினத்தில் தேடுங்கள்”, என்று கூறியிருக்க வேண்டும், என்று நினைக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் நபியவர்கள் ரமழானின் இறுதி பத்தைத் தாண்டும் போது
إلْتَمِسُوا لَيْلَةَ الْقَدْرِ في الْوِتْرِ مِنَ الْعَشْرِ الأوَاخِرِ مِنْ رَمَضَانَ (البخاري ومسلم)
“ரமழான் மாத்தின் இறுதி பத்துகளின், ஒற்றை நாளில் லைலதுல் கத்ர் என்ற இரவை தேடுங்கள்” என்று நபியவர்கள் கூறுவார்கள். என ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றாரகள். (புகாரி,முஸ்லிம்)
மேலும் இந்த இரவில் நின்று வணங்கி அதற்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதையும் அதனால் கிடைக்கும் பயன் யாதென்பதையும் பின் வரும் நபிமொழி தெளிவு படுத்துகின்றது.
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال مَنْ قَامَ لَيْلَةَ الْقدْرِ إيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَاتَقَدمَ مِنْ ذَنْبِهِ ( البخاري ومسلم)
“எவர் லைலதுல் கத்ர் இரவில் நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்தவராக நின்று வணங்குவாரோ அவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என நபியவர்கள் கூறினார்கள், என்று அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த இரவில் நின்று வணங்குகின்றவனின் பாவ மன்னிப்புக்கு இந்த ஹதீஸ் உத்தரவாதம் அளிக்கின்றது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை ஒவ்வொரு முஸ்லிமும் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் தலையாய கடமையாகும். ஏனெனில் நபிமார்ளை தவிர பாவங்களில் இருந்து பாதுகாப்புப் பெற்ற மனிதன் யாரும் இல்லை. ஆகையால் இந்த வாய்ப்பை யாவரும் பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் கருணை மிக்க அல்லாஹ் இவ்வாரான சந்தர்ப்பங்களை வழங்கி அதன் மூலம் அடியானின் கூலியை மாத்திரம் அதிகரிக்க வில்லை. அவனின் பாவங்களையும் குற்றங்களையும் அழித்து விடுகின்றான், என்பதை இது போன்ற ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. இனி பின்வரும் ஹதீஸைக் கவனிப்போம்.
عن عبد الله ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال إِلْتَمِسُوْهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِفَإنْ ضَعَفَ أحَدُكُمْ أوْعَجَزَ فَلاَ يُغْلبن عَلَى السبع الْبَوَاقِيْ (البخاري ومسلم)
“இறுதி பத்துகளில் அதனைத் தேடுங்கள். ஆனால் அவ்வமயம் உங்களில் யாருக்கேனும் பலவீனமோ இயலாமையோ ஏற்பட்டுவிட்டால், எஞ்சிய ஏழு நாட்களையும் அது மிகைத்து விடாமல் இருக்கட்டும்” என்று நபியவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)
இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரும் ஆய்வாளர்கள், லைலத்துல் கத்ர் - புனித இரவு எல்லா வருடங்களிலும் குறிப்பிட்ட ஒரே தினத்தில் நிகழாது, அது மாறி மாறி நிகழும் தன்மையுடையது என்பதை இந்நபி மொழி உணர்த்துகின்றது, ஆகையால் லைலத்துல் கத்ர் இரவு ஒவ்வொரு வருடமும் பிந்திய பத்துகளின் ஒற்றை நாளில் மாறிமாறி வரும் என்று விளக்கம் தருகின்றனர்.
எனவே எவ்வாராயினும் பிந்திய பத்துகளின் இரவுகளில் அதிக நேரம் நின்று வணங்கி அந்த இரவை அடைந்து கொள்ள முயல வேண்டும் என்பதே இந்த ஹதீஸ்களின் நோக்கம். மேலும் இதன் அரிய வாய்ப்பை ஒருவர் அடைந்து கொண்டாரா என்பதற்கு, ஏதேனும் ஸுஜூது செய்வதையோ அல்லது யாரேனும் ஸலாம் சொல்வது போன்று அல்லது இன்று லைலதுல் கத்ர் என்று கூறுவது போன்று அசரீரி எதனையும், அல்லது பிரகாசம் எதனையும் அவர் பார்க்கவோ கேட்கவோ வேண்டுமென்ற நிபந்தனை எதுவுமில்லை. ஆனால் சிலருக்கு அப்படியான நிகழ்வு ஏதும் சம்பவிக்கவும் கூடும். அப்படி நிகழ்ந்தால் அது “கராமத்” எனும் ஒரு வகை அற்புதம் எனப்படும். சிலருக்கு இப்படியான வாய்ப்பு கனவின் மூலமோ, அல்லது நிஜமாகவோ ஏற்படலாம் என்று இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இதனை ஒரு கராமத் என்றும், எனவே இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர் அதனை யாரிடமும் அம்பலப்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது இவ்வாறிருக்க லைலதுல் கத்ரின் அடையாளங் களில் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடும் போது நபியவர்கள், இவ்வாறு கூறினார்கள்,
تَطْلُعُ الشَمْسُ فِيْ صَبِيْحَةِ يَوْمِهَا بَيْضَاءَ لاَ شِعَاعَ فِيْهَا (مسلم)
“அதன் காலைப் பொழுதில் சூரியன் உதயமாகும் போது அது வெண்மையாக இருக்கும் ஆனால் அதில் ஒளி இருக்காது” என்று நபியவர்கள் கூறினார்கள். இந்த நபி மொழியை உபைய் இப்னு கஅஃப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்)
அன்றைய இரவை அடையாளப்படுத்தக் கூடிய அறிகுறிகளாகக் கூறப்படுகின்ற கீழ் வரும் சில அடையாளங்கள் ஆதாரமற்றவைகளாகும். உதாரணமாக அன்றைய இரவு உஷ்ணமோ குளிரோ இன்றி மிகவும் அமைதியாக இருக்கும், அன்று காலையில் ஷைத்தான் வெளியே வரமாட்டான், அன்றைய இரவில் நட்சத்திரங்கள் தென்படாது, நாய்கள் குரைக்காது, உப்பு நீர் மதுரமாக மாறிவிடும், எல்லா இடமும் ஒளிமயமாக இருக்கும் என்ற அடையாளங்களைக் கூறலாம். இவற்றை உறுதிப் படுத்தும் ஆதாரங்கள் இல்லை யென்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.
மேலும் லைலதுல் கத்ரின் பாக்கியம், தொழுகையாளி களுக்கு மாத்திரம் உரித்துடையதன்று. தொழுகையை நிறைவேற்ற முடியாத மாதாந்த ருது, பிரசவ ருதுவுள்ள பெண்களுக்கும், மற்றும் ஊரில் இருப்பவர்கள், பிரயாணிகள் என பொதுவாக இயலாத யாவருக்கும் இது உரித்துடையதாகும். எனவே இப்படிப் பட்டவர்கள் தஸ்பீஹ், தஹ்மீத், ஔராதுகள், துஆ பிரார்த்தனை செய்தல் போன்ற நல்ல காரியங்களில் நேரங்களை ஈடுபடுத்தி இந்த இரவின் பாக்கியத்தை அடைந்து கொள்ள முயற்சித்தல் வேண்டும். ஏனையோர் தங்களின் நேரத்தை அதிகமாக தொழுகையிலும். துஆவிலும் கழித்தல் வேண்டும். மேலும் லைலதுல் கத்ரின் இரவு காலத்தைப் போன்று, அதன் பகற் காலத்தையும் இபாதத்துகளில் செலவிடுவது சிறந்தது என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேஷமான துஆக்கள் எதுவும் இல்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எனவே நபியவர்கள் பொதுவாக ஓதி வந்த, சகல விடயங்களையும் உள்ளடக்கிய துஆக்களை அதிகமாக ஓதுவது சிறந்ததாகும். எனவே இந்த இரவின் பாக்கியம் நம்மனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
وصلى الله وسلم على رسولنا محمد وعلى اله وصحبه أجمعين
திக்குவல்லை இமாம் (ரஷாதீ\ பெங்களூர்)
سيد إسماعيل إمام ابن يحي مولانا
02\07\2015