நேர்ச்சை
பிரிவுகள்
Full Description
நேர்ச்சை
< தமிழ் - تاميلية >
Author's name
N.H.M.உஸாமா
اسم المؤلف
محمد أسامة نور الحمزة
Reviser's name:முஹம்மத் அமீன்
ترجمة:
مراجعة: محمد أمين
النذر
) Tamil –தமிழ் – ( التاميلي
الإعداد: محمد أسامة بن نور الحمزة
N.H.M.உஸாமா
بسم الله الرحمن الرحيم
புகழனைத்தும் ஏக வல்லவனாம் அல்லாஹ்வுக்கே உரித்தாகுக.
மனிதன் எப்போதும் தனக்கு நன்மை நடக்க வேண்டும் என எண்ணக் கூடியவனாக இருக்கிறான், அந்த வகையில் பெரும்பாலானவர்கள் எடுத்த, பிடித்த விடயங்கள் அனைத்துக்கும் நேர்ச்சை செய்யக் கூடியவர்களாக இருக்கின்றனர். எனவே அதன் சட்ட திட்டங்களை பற்றிய சில விடயங்களை சுருக்கமாக முன்வைக்கிறேன்.
இதனைக் கொண்டு அல்லாஹ் எமக்கு ஈருலகிலும் பிரயோஷனமளிப்பானாக.
நேர்ச்சை
நேர்ச்சை என்றால் ஒரு மனிதன் தனக்கு அடிப்படையில் கடமையில்லாத ஒரு விடயத்தை அல்லாஹ்வுக்காக தன் மீது கடமையாக்கிக் கொள்ளல் ஆகும். (குறிப்பு: நேர்ச்சையை குறிக்கும் எந்த வகையான சொற் பிரயோகத்தை பயன் படுத்தி சொன்னாலும் இது கடமையாகி விடும்).
நேர்ச்சை வைப்பதன் சட்டம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்ச்சை வைப்பதை தடுத்ததால் அது ஒரு விரும்பத் தகாத ஒரு செயலாகும். ஏனெனில் இது அடியானுக்கு எந்த ஒரு நன்மையையும் கொண்டு வந்து தராது, மேலும் அதற்கு கலா கத்ரை மாற்றும் சக்தியும் இல்லை. நாம் நேர்ச்சை வைத்தோமோ இல்லையோ அல்லாஹ் தான் நாடியதை செய்து விடுவான்.
அல்குர்ஆனும், அல் ஹதீஸும் நேர்ச்சை வைப்பதை தூண்டவே இல்லை. மாறாக ஒருவர் நேர்ச்சை செய்து விட்டால் அதை நிறைவேற்றுமாறே மார்க்கம் கூறுகிறது.
எனவே நேர்ச்சை என்பது புகழத்தக்க ஒரு விடயமல்ல. மாறாக அதை நிறைவேற்ற தவறும் சந்தர்ப்பத்தில் அது எமக்கு தீங்கை கொண்டுவந்து தரக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் நேர்ச்சை செய்பவர் நேர்ச்சை மூலமாக அல்லாஹ்வுக்கு சவால் விடக் கூடியவராகவும், நிபந்தனை இடக்கூடியவராகவும் இருக்கிறார். ஏனெனில் அவர் நேர்ச்சை மூலம் கூற வருவது; எனது காரியம் நடந்தால் நான் இந்தக்காரியத்தை செய்வேன் இல்லாவிடில் செய்ய மாட்டேன் என்பதாகும்.
என்றாலும் அல்லாஹ் அவனது படைப்புக்களில் எந்தத் தேவையும் அற்றவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எந்த ஒரு இபாதத்தையும் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றுவது சிறப்பானதாகவும், பூரணமானதாகவும் காணப் படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًاۚ
நல்லோர்களோ, கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்
عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا
அது (சொந்தமாக) அல்லாஹ்வினுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்.
يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا
இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்று வார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள். (76:5-7)
இப்னு உமர் ரழியல்லாகு அன்கு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நேர்ச்சை செய்வதை தடுத்ததோடு, நிச்சயமாக நேர்ச்சை எந்த ஒன்றையும் திருப்பி விடக் கூடியதன்று மேலும் அது உலோபிகளிடமிருந்து வெளியாக்கப் படுவதாகும்" என்றார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு நேர்ச்சை வைப்பதன் சட்டம்:
நேர்ச்சை இபாதத்துகளில் ஒன்றாகும், எனவே அதனை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வது கூடாது, ஏனென்றால் அவ்வாறு ஒருவர் அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு நேர்ச்சை செய்வது என்பது அவர் அவரை கண்ணியப் படுத்துவதாகவும், அதனைக் கொண்டு அவரை நெருங்க முயற்சிப்பதாகவும் அமைந்து விடுகிறது. எனவே யார் அல்லாஹ் அல்லாமல் கப்ருகள், மலக்குகள், நபிமார்கள், அவ்லியாக்கள் போன்றோருக்கு நேர்ச்சை செய்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார். அவ்வாறு நேர்ச்சை செய்வது பயனற்றதாகும், இன்னும் அவ்வாறான நேர்ச்சைகளை நிறைவேற்றுவதும் ஹராமாகும்.
ஏற்றுக் கொள்ளப்பட்ட நேர்ச்சை (நிபந்தனைகள்):
பருவ வயதை அடைந்த, புத்தியுள்ள, தானாக விரும்பி நேர்ச்சை வைக்கக் கூடியவர்களிடமிருந்து தான் இந்த நேர்ச்சை ஏற்றுக்கொள்ளப் படும்.
நேர்ச்சையின் வகைகள் :
உலமாக்கள் நேர்ச்சையை ஆறு வகையாக வகைப்படுத்துகின்றனர்:
விடயம் குறிப்பிடப்படாத நேர்ச்சை.
1. அதாவது ஒருவர்: அல்லாஹ் மீது ஆணையாக நான் இவ்வாறான ஒரு வேலையை செய்தால் என் மீது நேர்ச்சை கடமையாகும் என்று கூறுவது. அவ்வாறு அவர் அவ்வேலையை செய்தால் அவர் மீது சத்தியத்தை முரித்ததுக்குரிய குற்றப் பரிகாரததை நிறைவேற்றுவது கடமையாகும்.
2. கோபத்தில் நேர்ச்சை செய்தல்.
அதாவது ஒரு விடயத்தை தடுப்பதற்கு அல்லது சுமப்பதற்கு அல்லது உண்மைப் படுத்த அல்லது பொய்ப்பிக்க ஒரு நிபந்தனையுடன் நேர்ச்சை செய்தல்.
உதாரணமாக: ஒருவர் இன்னொருவரைப் பார்த்து நான் உன்னுடன் பேசினால் நான் 1000 ரூபாவை ஸதகா செய்வேன், போன்ற வார்ததைகளைப் பிரயோகித்தல், இவர் மூலம் அச்செயல் நடந்தால் அவர் ஒன்றில்
அவருடைய நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் அல்லது சத்தியத்தை முரித்ததுக்குரிய குற்றப்பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.
3. விரும்பத்தக்க ஒரு செயலை செய்ய நேர்ச்சை செய்தல்.
நேர்ச்சை செய்தல் அல்லது பகல் நேரத்தில் ஒரு பிராணியில் ஏறி சவாரி செய்வதாக நேருதல் போன்றவை. இவர்களும் ஒன்றில் நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் அல்லது சத்தியத்தை முரித்ததுக்குரிய குற்றப்பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.
4. விரும்பத் தகாத நேர்ச்சை
மனைவியை தலாக் சொல்ல நேர்வது போன்ற செயல்கள்.
இவ்வாறான சந்தபங்களில் அந்த நேர்ச்சையை நிறைவேற்றாமல் சத்தியத்தை முரித்ததுக்குரிய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்றுவது மேலானதாகும்.
5. பாவமான ஒரு செயலுக்கு நேர்ச்சை செய்தல்.
ஒருவரை கொலை செய்ய, மது அருந்த, விபாசரம் செய்ய, பெருநாள் தினத்தில் நோன்பு நோற்க, உறவுகளை துண்டித்து நடக்க நேர்ச்சை செய்தல். இவை இஸ்லாம் தடுக்கும் நேர்சைகளாகும், இவற்றை நேர்ச்சை செய்தால் நிறைவேற்றுவது ஹராமாகும்.
அவ்வாறு யாராவது இவற்றில் ஒன்றை நேர்ந்தால் அதற்கு அவர் தௌபா செய்வதோடு சத்தியத்தை முரித்ததட்குரிய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்றல் வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைகி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (பாவமான காரியங்களில் நேர்ச்சை கிடையாது, அதற்குரிய பரிகாரம் சத்தியத்தை முரித்ததற்குரிய பரிகாரமாகும்.)
ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி.
6. நல்ல பணிவான விடயங்களைக் கொண்டு நேர்ச்சை செய்தல்.
அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் தொழுகை, நோன்பு, ஹஜ், உம்ரா, இஃதிகாஃப் போன்ற விடயங்களை நேர்தல் அல்லது ஒரு காரணியை முன் வைத்து செய்யக் கூடிய நேர்ச்சை, அதாவது எனது நோய் குணமடைந்தால் அல்லது இந்த வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைத்தால் அல்லாஹ்வுக்காக ஒரு தொகையை தர்மம் செய்வேன் என்று சொல்லல்.
அவ்வாறு அக்காரியம் அந்நிபந்தனைகளோடு நிறைவேறினால் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் நேர்ச்சை ஒரு இபாதத்தாகும், எனவே அதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும், அல்லாஹ் அல்குரானிலே முஃமின்களை போற்றி யுள்ளான், அதற்குரிய காரணம் அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பதாலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّه مُسْتَطِيْرًا
இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்று வார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள். (76:7)
அத்துடன் யாராவது ஒருவர் நல்ல பணிவான விடயங்களைக் கொண்டு நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற சக்தி இருந்தும் அதை நிறைவேற்று முன் மரணித்தால் அவருடைய பொறுப்புதாரிகள் முடியுமான வரை அவர்களுக்குப் பகரமாக நிறைவேற்ற வேண்டும்.
நேர்ச்சை செய்யும் பொருள்:
இஸ்லாம் அனுமதித்த பொருட்களை கொண்டு தான் நேர்ச்சை செய்ய வேண்டும். அந்த வகையில் ஒருவர் மாமிச
வகைகளில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக நேர்ந்தால் அதை அவர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும் மாறாக அவர் அதிலிருந்து எந்த ஒரு பகுதியையும் புசிக்கக்கூடாது. மாற்றமாக அவர் அவரது குடும்பத்தாருக்கு அல்லது நண்பர்களுக்கு நேர்ந்தால் அதிலிருந்து அவருக்கு புசிக்கலாம் ஏனென்றால் அவரும் அதிலொரு உறுப்பினர் என்பதாலாகும் .
எனவே நேர்ச்சை விடயத்தில் நாம் மிகவும் தெளிவுள்ளவர்களாக இருக்க வேண்டும், இன்னும் நாம் நேர்ச்சை விடயத்தில் முந்திக்கொள்ளாமல் அல்லாஹ் வின் பெயரில் சதகாகக்கள், தான தர்மங்கள் செய்து அதனூடாக எமது தேவைகளை அவனிடம் முன் வைப்போமேயானால் எமக்கு பூரண வெற்றியை அடைந்து கொள்ள முடியும்.
எனவே நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடந்து, அவனுக்கு விருப்பமான முறையில் வாழ நம் அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக.
அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார் தோழர்கள் மீதும் உண்டாவதாக!