×
பெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

    ஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்

    توضيح عن زكاة الفطر

    < تاميلية -தமிழ் >

    Author' name

    S.I. இமாம் இப்னு யஹ்யா மவ்லானா

    اسم المؤلف

    سيد إسماعيل إمام ابن يحي مولانا

    —™

    Translator's name:

    Reviser's name: மௌலவி முஹம்மத் அமீன்

    ترجمة:--

    مراجعة:محمد أمين

    ஸகாத்துல் பித்ர் ஓர் விளக்கம்

    S.I. இமாம் இப்னு யஹ்யா மவ்லானா

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்

    அல்லாஹ்வின் கருணையும் சாந்தியும், இறுதித் தூதர் முஹம்மது( ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.

    ‘ஸகாதுல் பித்ர்’ இது ரமழான் மாத நோன்பின் நிமித்தம் நோன்பாளிகள் வழங்கும் ஒரு தர்மமாகும். வசதி உள்ள எல்லா நோன்பாளிகளின் மீதும் இது கடமையாகும். வசதி எனும் போது செல்வந்தனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்களின் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள சகலரின் ஸகாதுல் பித்ராவையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பா ளனின் மீது கடமையாகும். இதனை பின் வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

    عن ابن عمر رضي الله عنه قال " أمَرَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم بِصَدقَةِ الْفِطْرِ عَنِ الصَّغِيْرِ وَالْكَبِيْرِ والْحُرِّ وَالْعَبْدِ مِمَّنْ تَمْؤَنُوْنَهُ (البيهقي)

    “நீங்கள் உணவளித்து வரும் சிரியோர், பெரியோர், சுதந்திரம் பெற்றவன், அடிமை ஆகியோரின் ஸதகதுல் பித்ரை நீங்கள் நிரைவேற்ற வேண்டுமென நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.” என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(அல் பைஹகீ)

    عن عبد الله ابن عمر رضي الله عنه قال " فَرَضَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أوْ صَاعًا مِنْ شَعِيْرٍ عَلَى الْعَبْدِ والْحُرِّ والذَّكَرِ والأُنْثَى والصَّغِيْرِ والْكَبِيْرِ مِنَ الْمُسْلِمِيْنَ وَأمَرَ بِهاَ أنْ تُؤَدَّى قَبْلَ خُرُوْجِ النَّاسِ إلَى الصَّلاَةِ (البحاري)

    “ஒரு ஸாஃ பேரீத்தம் பழம் அல்லது கோதுமையை ஸகாத்துல் பித்ராகக் கொடுப்பதை, முஸ்லிம் அடிமையின் மீதும், சுதந்திரம் பெற்றவனின் மீதும், ஆணின் மீதும், பெண்ணின் மீதும் சிறியோன் மீதும், பெரியோர் மீதும் ரஸூல் (ஸல்) அவர்கள் கடமை யாக்கினார்கள். மேலும் மக்கள் தொழுகைக்காகப் புறப்படு முன் அதனை நிறைவேற்றும் படியும் உத்தரவிட்டார்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இன்னொரு ரிவாயத்தில் அறிவித்துள் ளார்கள் (புகாரீ)

    இந்த நபி மொழிகள் ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றுவது சகல முஸ்லிம்களின் மீது கடமை என்பதையும், அதனை நிறைவேற்றும் பொறுப்பு பராமரிப்பாளரின் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

    இனி அடுத்து வரும் ஹதீஸைக் கவணிப்போம்.

    عن ابن عباس رضي الله عنه قال "فرض رسول الله زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِيْنِ ، مَنْ أدَّاهَا قَبْلَ الصَّلاةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُوْلَةٌ وَمَنْ أدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِيَ صَدَقَةٌ مِن الصَّدَقَاتِ (أبوداوود)

    “வீண் பேச்சுக்கள் மற்றும் ஆபாச பேச்சுக்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், ஏழைகளின் உணவுக்காகவும் ‘ஸகாதுல் பித்ரை’ ரஸூல் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் அதனைத் தொழுகைக்கு முன் யார் நிறைவேற்றுகின்றாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸகாத்தாகும், எவர் அதனை தொழுகைகுப் பின்னர் நிறைவேற்றுகின்றாரோ, அது ஏனைய தர்மங்களில் ஒரு தர்மமாகிவிடும்” என்று இப்னு அப்பாஸ் (ரழி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(அபூ தாவூத்)

    ஸகாதுல் பித்ரின் நோக்கத்தை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. இதன் மூலம் மூன்று விடயங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஒன்று நோன்பு நோற்றிருக்கும் போது நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட சிறு தவறுகளுக்கு ஸகாதுல் பித்ர், பிராயச்சித்தமாக அமைகின்றது என்பது. ஏனெனில் வீண் பேச்சுக்கள், மற்றும் ஆபாச பேச்சுகளை விட்டும் நோன்பாளி தவிர்ந்து கொள்வது அவசியம் என்பதையும், அப்படியல்லாத நோன்பை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான், என்பதையும் நபி மொழிகள் வழியுறுத்துகின்றன. எனினும் மனிதன் என்ற அடிப்படையில் சில சமயங்களில் இவ்வாறான தவறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. அப்படியாயின் நோன்பாளியின் நோன்பு பாழாகிவிடும். அவன் பசித்திருந்ததிலும், தாகித்தி ருந்ததிலும் பயனில்லாமல் போய்விடும். எனவே காருண்ய நபி அவர்கள், நோன்பாளியின் இந்தத் தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக ஸகாதுல் பித்ரைக் கடமையாக்கி நோன்பாளியின் நோன்பு பாழாகி விடாமல் வழி அமைத்துத் தந்துள்ளார்கள், என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகும் முதலாவது விடயமாகும்.

    இரண்டாவது அது ஏழைகளுக்கு ஆகாரமாக அமைகின்றது என்ற விடயத்தை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

    மூன்றாவது விடயம் அது நிறைவேற்றப் பட வேண்டிய காலம் எது என்பதைப் பற்றியதாகும். அதன்படி ஸகாதுல் பித்ர் என்ற தர்மம் தொழுகைக்கு முன் நிறைவேற்றப்படுவது அவசியம் என்பது தெளிவு. மேலும் இங்கு தொழுகை என்பது நோன்புப் பெருநாளைக் குறிக்கின்றது என்பதைக் கவணத்தில் கொள்ள வேண்டும். பெருநாள் தினத்தில் செல்வந்தர்கள் மாத்திரமின்றி ஏழைகள், வசதியற்றோர் என்ற பாகுபாடின்றி சகலரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய ஒரு தினமாகும். எனவே அன்று எவரும் பட்டினியோடு இருப்பதை நபியவர்கள் விரும்பவில்லை. ஆகையால்தான் அதனைப் பெருநாள் தொழுகைக்கு முன் நிறைவேற்றி விடும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள். ஸஹாபாக்கள் பெருநாள் தினம் வரும் வரையில் காத்திருக்காமல் ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதனை நிறைவேற்றி விடுவார்கள், என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த செய்தி புகாரியில் பதிவாகியுள்ளது.

    அடுத்தபடியாகக் கவணிக்க வேண்டிய விடயம், இது எப்போது கடமையாகும்? என்பதாகும். ரமழான் மாத்தின் இறுதி நாளின் சூரியன் அஸ்தமனம் ஆனதும் ஸகாதுல் பித்ர் கடமையாகிவிடும். அது முதல் பெருநாள் தொழுகையின் நேரம் வரை அதன் நேரமாகும். எனினும் ரமழானின் ஆரம்பம் முதல் மக்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்லு முன் வரையில் இதனை வழங்கலாம். ஆயினும் பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அல்லது பெருநாளைய தினம் அதிகாலையில் இதனை வழங்குவது சிறந்ததாகும். எவ்வாறாயினும் ஹதீஸில் குறிப்பிட்டள்ளது போல தொழுகைக்கு முன் அதனை நிறைவேற்றி விடவேண்டும். தொழுகையின் பின் வழங்கப்படும் பித்ரா, ஸகாதுல் பித்ராவாக அமையாது. ஆகையால் இந்த ஸதகாவை யாவரும் உரிய முறையில் வழங்க வாய்ப்பளிக்கும் வகையில் நோன்புப் பெருநாளைப் பிற்படுத்தித் தொழுவது ஸுன்னத்தாகும். தொழுகையின் பின் வழங்கும் தர்மம் ஸகாதுல் பித்ராவாக அமையாத பட்சத்தில், அதற்கு தர்மத்தின் நன்மை கிடைத்தாலும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்கு அது பிராயச்சித்தமாக அமைய மாட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பெருநாள் தினம் உதயமாகு முன், அதாவது ரமழான் மாதத்தின் கடைசி நாளின் சூரியன் மறைவதற்கு முன் உயிருடன் பிறந்த குழந்தைக்காகவும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது, குழந்தையின் தந்தையின் மீது, அல்லது பராமரிப்பாளரின் மீது கடமையாகும். ஆனால் அதன் பின் பிறந்த குழந்தைக்காக ஸகாதுல் பித்ர் கடமையாகாது.

    ஸகாதுல் பித்ரின் அளவு

    عن أبي سعيد الخدري (رضي الله عنه) قال كُنَّا نُخْرِجُ فِيْ عَهْدِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ،وَقَالَ أبُوْسَعِيْدٍ وَكَانَ طَعَامَنَا الشَّعِيْرُ والزَّبِيْبُ والأَقِطُ والتَّمْرُ (البخاري)

    “நாங்கள் ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்தில், நோன்பு பெருநாள் தினத்தில் ஒரு “ஸாஃ“ உணவை பித்ராவுக்காக எடுத்துக் கொள்வோம், என்று கூறிய அபூ ஸஈத் அல்குதரீ (ரழி) அவர்கள், கோதுமையும், உலர்ந்த திராட்சையும், பாலாடைக் கட்டியும்(cheese), பேரீத்தம் பழமும் எங்களின் ஆகாரமாக இருந்தன.” என்று கூறினார்கள்.

    ரஸூல்(ஸல்) அவர்களின் காலத்தில் பாவணையிலி ருந்த நான்கு வகை உணவுகளைப் பற்றி அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் இங்கு விபரிக்கின்றார்கள். மேலும் ஸகாத்துல் பித்ருக்காக ஒதக்கப்படும் அந்த உணவு ஒரு ஸாஃ அளவு கொண்டதாக இருந்தது, என்பதையும் தெளிவு படுத்துகின்றார்கள். தாணியமாக இருந்தாலும், பழமாக இருந்தாலும், பித்ராவுக்காக ஒதுக்கப்படும் அந்த உணவின் அளவு ஒரே அளவைக் கொண்டதாக இருந்தது என்பதையும் தெளிவு படுத்துகின்றார்கள். இதிலிருந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் மக்கள் தாங்கள் அடிப்படை உணவாக உட்கொள்ளும் ஆகாரத்திலிலிருந்து குறைந்த பட்சம் ஒரு ஸாஃ உணவை ஸதகதுல் பித்ராவாக கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

    صاع(ஸாஃ) என்பது ஒரு முகத்தல் அளவையாகும். அவ்வாரே مُدٌّ (முத்த) என்பதுவும் ஒரு முகத்தல் அளவையாகும். சாதாரண நடுத்தர மனிதனின் இரண்டு கைகள் நிறைய அள்ளி எடுக்கும் ஒரு அளவு, مُدُّ) முத்த( எனப்படும். இப்படி நான்கு முத்துகளைக் கொண்ட கொள்ளளவு ஒரு صَاعْ (ஸாஃ) எனப்படும். கைளால் அளந்து கொடுக்கும் அளவை முறையை ரஸூல் (ஸல்) அவர்களின் صاع அளவை என்பர். எனவே எல்லா உணவு வகைகளையும் நபியவர்களின் அளவை அடிப்படையில் அளந்து ஒரு ஸாஃ பித்ரா கொடுத்தால் பிரச்சினை இருக்காது. ஆனால் அதனை நிறுவை அடிப்படையில் வழங்கும் போதே சிக்கல் ஏற்படுகின்றது.

    ஏனெனில் எல்லா வகை உணவின் கனமும் (size) சமமானவை அல்ல. ஒரு பிடி கோதுமையையும் இன்னொரு பிடி அரிசியும் நிறுத்துப் பார்த்தால் வித்தியாசம் விளங்கும். எனவே உதாரணமாக ஒரு ஸாஃ அரிசி, இரண்டரை கிலோ எனில், ஒரு ஸாஃ கோதுமை அதே நிறையைக கொண்டதாக இருக்காது. மேலும் பத்து பேர் தங்களின் கைகளால் அள்ளி எடுத்த ஒரே வகை தானியத்தின் ஒரு ஸாஃ நிறுத்துப் பார்த்தால் கூட, அனேகமாக அதுவும் சம எடையைக் கொண்டிருக்காது.

    இதனால்தான் உஸைமீன் (ரஹ்) அவர்கள் ஒரு ஸாஃ 2100 கிராம் என்று கணித்த போது மற்றவர்கள் 2500 கிராம் என்றும், 3000 கிராம் என்றும் கணித்துள்ளதைக் காண முடிகின்றது. மேலும் அஹ்னாப்களின் கணிப்பின்படி ஒரு ஸாஃவின் நிறை நான்கு கிலோவைப் பாரக்கிலும் சற்று அதிகமாகும். எனவேதான் ரஸூல்(ஸல்) அவர்களின் ஸாஃ இன் பிரகாரம் ஒரு ஸாஃ உணவுப் பொருளை கைகளால் அளந்து பித்ரா வழங்குவதே சிறந்தது என சில அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். ஷெய்க் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் ஒரு ஸாஃ வின் எடையை 3000 கிராம் = 3 கிலோ என மதித்துள்ள போதிலும், ரஸூல்(ஸல்) அவர்களின் அளவைப்படி கைகளால் அளப்பதே பேணிப்பான முறையென அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    மேலும் ஸஊதி அரேபியாவில் ஒரு ஆளின் ஸகாத்துல் பித்ரின் அளவு பொதுவாக 3000 கிராம் = 3கிலோ என தீர்மாணிக்கப் பட்டுள்ள போதிலும், அல்ஜீரியா, டூனிஷியா போன்ற நாடுகளில், அங்கு பித்ராவுக்காகப் பயன்படுத்தி வருகின்ற உணவு வகைகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான நிறுவை முறை நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றன, என்பது இங்கு கவணிக்கத் தக்கதாகும். டூனீஷியா, அல்ஜீரியா போன்ற அரபு நாடுகளில் பித்ராவுக்குப் பயன்படுத்தும் சில பொருட்களையும் அவற்றின் அளவையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

    கோதுமை மாவு 2000gr,

    பருப்பு 2100gr

    கோதுமை 2040gr.

    உளர்ந்த திராட்சை 1640gr

    கடலை 2000gr.

    அரிசி 2300gr

    பேரீத்தம் பழம் 1800gr

    முன்னர் குறிப்பிட்டது போல எல்லா உணவுப் பொருளும் சம எடை கொண்டவை அல்ல என்பதையே இந்த பட்டியலிலுள்ள நிறை வித்தியாசம் எடுத்துக் காட்டுகின்றது.

    மேலும் பித்ரா வழங்கும் போது கட்டாயமாக உணவுப் பொருளைத்தான் வழங்க வேண்டுமா? அல்லது அதன் பெருமதிக்கு ஏற்றவாறு பணம் வழங்லாமா? என்ற விடயத்தில் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ஆகிய மூன்று இமாம்களும் உணவுப் பொருளுக்கு மாற்றீடாக பணம் கொடுக்க முடியாதென்கின்றனர். எனினும் தன் வதிவிடத்தில் பித்ராவைப் பெற ஆளில்லாத போது வெளியிடங்களுக்கு அதன் பணத்தை அனுப்பலாம் என்பது ஹன்பலீக்களின் அபிப்பிராயமாகும். ஆனால் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் பொதுவாக பணம் கொடுப்பதை அனுமதித்துள் ளார்கள். இதன்படி எகிப்து நாட்டில் இவ்வாண்டின் பித்ராவின் பெருமதி அந்நாட்டின் நாணயத்தின் பிரகாரம் எட்டு ‘ஜுனைஹ்’கள் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது, என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இதையெல்லாம் கவணிக்கும் போது எல்லா மக்களும் அவரவர் நாட்டு உலமாக்களின் பொதுவான முடிவின்படி ஸகாத்துல் பித்ரை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்பது தெளிவாகிறது. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

    وصلى الله وسلم على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين

    திக்குவல்லை இமாம் (ரஷாதீ- பெங்களூர்)

    09\07\2015