×
மலக்குகள் மீது ஈமான் கொள்வது ஒரு முஸ்லிம் மீது கடமை. மலக்குகளும் அல்லாஹ்வின் படைப்புகளே. அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்றுபவர்கள். நபிமார்களுக்கு வஹீ அவர்கள் பல்வேறு தரம் உள்ளவர்கள. அவர்களின் எண்ணிக்கைணை அல்லாஹ் மாத்திரம் அறிவான். மலக்குகள் எந்த விதமான தேவையு மற்றவர்கள்.

    இஸ்லாத்தின் பார்வையில் மலக்குகள்

    الملائكة في نظر الإسلام

    < தமிழ் >

    Author' name

    Y.M செய்யது இஸ்மாயில் இமாம்

    اسم المؤلف

    سيد إسماعيل إمام بن يحيا مولانا

    —™

    Translator's name:

    Reviser's name:முஹம்மத் அமீன்

    ترجمة:

    مراجعة:محمدأمين

    இஸ்லாத்தின் பார்வையில் மலக்குகள்

    بسم الله الرّحمن الرّحيم

    الحمد لله ربّ العالمين ،ثم الصّلاة و السّلام على النّبي محمّد الذي أرسل رحمة للعالمين، وعلى آله وصحبه وذريّته ومن تبعه بإحسان إلى يوم الدّين

    இஸ்லாத்தின் பார்வையில் மலக்குகள்

    ஆறு விடயங்களின் மீது விசுவாசம் கொள்வதை அடிப்பாயாகக் கொண்டதே இஸ்லாம் மார்க்கம். அவற்றில் ஒன்றுதான் மலக்குகளின் மீது நம்பிக்கைக் கொள்வது. எனவே ஏனைய விடயங்களான, அல்லாஹ்வின் மீதும் அவனின் வேதங்கள் மீதும். அவனின் தூதர்கள் மீதும், மற்றும் இறுதி நாள் மீதும் அவனின் القدر எனும் விதியின் பிரகாரமே சகல காரியங்களும் நடை பெறுகின்றன என்ற விடயத்தின் மீதும் நம்பிக்கை கொள்வது எப்படி அவசியமோ, அப்படியே மலக்குகள் மீதும் விசுவாசம் கொள்ள வேண்டுமென்பதே இஸ்லாத்தின் கொள்கை. எனவே இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட ஒருவன், ஈமான் கொள்ள வேண்டிய சகல விடயங்களின் மீதும் விசுவாசம் கொண்டுள்ள போதிலும் மலக்குகளின் மீது அவனுக்கு விசுவாசம் இல்லை எனில் அவனை ஒரு முஸ்லிம் எனக் கூற முடியாது. ஆகையால் ஏனைய விடயங்களின் மீதான அவனின் நம்பிக்கையும், அவனின் நற் செயல்களும் நாளை மறுமை நாளில் அவனுக்குப் பயன் தராது, என்பதே இஸ்லாத்தின் கொள்கை.

    அப்படியாயின், மலக்குகள் என்போர் யார்? அவர்களின் தொழிலும் கடமைகளும் என்ன? அவர்கள் எதிலிருந்து படைக்கப்பட்டனர்? போன்ற அடிப்படை விடயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

    ஒளியால் படைக்கப் பட்டவர்களே மலக்குகள்

    இவர்கள் அல்லாஹ்வின் மகத்தான கண்ணியம் பொருந்திய சிருஷ்டிகள். அவனின் கட்டளைக்கு முற்றிலும் தலைசாய்த்து செயலாற்றும் அவனின் நல்லடியார்கள். ஒரு போதும் அவனின் கட்டளைக்கு மாறு செய்யாதவர்கள். எப்பொழுதும் இறை தியானத்திலும், இறை வழிபாட்டிலும் நிலைத்திருப்ப வர்கள். அவர்களுக்கு ஒப்படைக்கட்டுள்ள பொறுப்புக்களை சற்றும் பிசகாமல் நிறைவேற்றும் நாணயம் மிக்கவர்கள். அவர்களை ஒளியினால் அல்லாஹ் படைத்தான்.

    (خُلِقَتِ الْمَلاَئِكَةُ مِنْ نُوْرٍ، وَخُلِقَ الْجَان مِنْ مَارِجٍ مِنْ نَارٍ، وَخُلِقَ آدَمُ كَمَا وُصِفَ لَكُمْ))(رواه مسلم)

    “மலக்குகள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும் படைக்கப்பட்டனர், மற்றும் ஆதம் எப்படி சிருஷ்டிக்கப் பட்டார் என்று வர்ணிக்கப் பட்டுள்ளாரோ, அப்படியே அவர் படைக்கப்பட்டார்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

    மேலும் மலக்குகள் யாவரும் ஒரே விதமான தோற்றமும், தரமும் உடையவர்கள் அல்லர். அவர்கள் பலதரப்பட்ட வடிவங்களையும் தரத்தையும் உடையவர்கள். இரண்டு, மூன்று, நான்கு இறக்கையுடைய மலக்குகளும், அதைவிட அதிகமான இறக்கையுடைய மலக்குகளும் உள்ளனர்.

    ٱلْحَمْدُ للَّهِ فَاطِرِ ٱلسَّمَـٰوٰتِ وَٱلأرْضِ جَاعِلِ ٱلْمَلَـٰئِكَةِ رُسُلاً أُوْلِى أَجْنِحَةٍ مَّثْنَىٰ وَثُلَـٰثَ وَرُبَـٰعَ يَزِيدُ فِى ٱلْخَلْقِ مَا يَشَاء إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلّ شَىْء قَدِيرٌ [فاطر:1]

    “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் படைத்தவன். மலக்குகளை தன்னுடைய தூதர்களாக ஆக்கியவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நான்கு நான்கும் இறக்கைள் உடைய மலக்குகளை தூதர்களாக ஆக்கியவன். அவன் நாடியதைதன் படைப்பில் அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்".(35;1)

    மலக்குகளுக்குரிய ஆகக் கூடிய இறக்கைகள், நான்கு என்ற வரையரை இல்லை. அல்லாஹ் விரும்பினால் அதைவிட அதிக இறக்கையுடைய மலக்குகளயும் அவனால் படைக்க முடியும் என்பது இந்த இறைவாக்கின் மூலம் தெளிவாகின்றது. மேலும் மலக்குகளில் மிகவும் சிரேஷ்டமானவரும் அவர்களின் தலைவருமான ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு ஆறு நூறு இறக்கைகள் உண்டென்பது ஹதீஸில் பதிவாகியுள்ளது.

    “ஜிப்ரீல் (அலை) அவர்களை, அன்னாரின் ஆறு நூறு இறக்கைகளுடனும், ரஸூல் (ஸல்) அவர்கள் பார்த்திருக்கின்றார்கள்" என இப்னு மஸ்ஊத் (ரழி) அறிவிக்கின் றார்கள். (புகாரீ, முஸ்லிம்)

    மலக்குகள் உரு மாறக்கூடியவர்கள்

    மலக்குகள் தேவைகளுக்கேற்ப தங்களின் உருவமைப்பை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்கள். அநேகமாக மனித உருவத்திலேயே அவர்கள் வருவர். அதிலும் ஆண் உருவத்தில் தான் வருவார்களே அல்லாமல் பெண் உருவத்தில் வரமாட்டார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வரும் போது, ஸஹாபாக்களுக்கு அறிமுகமான தோழர்களின் தோற்றத்திலும், அறிமுகமில்லாத மனிதர்களின் தோற்றத்திலும் வந்திருக்கிறார்கள். அநேகமாக 'திஹ்யா இப்னு கலீபா அல் கலபீ' என்ற நபித் தோழரின் தோற்றத்திலேயே வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவரை நிஜமான திஹ்யா என்றே தோழர்கள் நினைத்தனர். பின்னர்தான் அவர் ஜிப்ரீல் (அலை) என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் என்றால் என்னவென்பதை ஸஹாபாக்களுக்குக் கற்றுத் தருவதற்காக ரஸூல் (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்த போது அவர், ஸஹாபாக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு பாலைவன அரபியின் தோற்றத்தில் வந்தார். முதலில் அவரை நிஜமான பாலைவன அரபி ஒருவர் என நபித்தோழர்கள் நினைத்தனர். அவர் அங்கிருந்து சென்ற பின்னர், அவர்தான் ஜிப்ரீல் (அலை), உங்களுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தர வந்தார், என்று ரஸூல்(ஸல்) கூறினார்கள். அப்போதுதான், அவர் ஜிப்ரீல் என்பதைத் ஸஹாபாக்கள் தெரிந்து கொண்டனர். இவ்வாறு ஏனைய மலக்குகளும் தாம் விரும்பிய தோற்றத்தில் வரக் கூடியவர்களே.

    முந்திய சமுதாயத்தில் ஏழைகளாகவும் மற்றும் பல சோதனைகளுக்கும் இலக்கான மூன்று நபர்கள், தாங்கள் இலக்கான சோதனைகளில் இருந்து, பின்னர் நிவாரணம் பெற்றது மாத்திரமல்லாது, செல்வந்தர் களாகவும் மாறினர். இவர்களைப் பரிசோதிப்பதற்காக ஒரு மலக்கு அவர்களிடம் வந்தார். அப்போது அவர்களிடம் ஒரு யாசகர் போன்று வந்த அவர், ஒருவரிடம் வழுக்குத் தலையுடையவனாகவும், இன்னொருவனிடம் குருடனாகவும், மற்றவனிடம் குஷ்ட ரோகியாகவும் வேடம் பூண்டு சென்றார். இவ்வாறே நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இஸ்மாஈல் என்ற குழந்தை பற்றிய சுப செய்தியையும், லூத் (அலை) அவர்களுக்கு, அவர்களின் சமூகத்தினரை அழிப்பதற்காக வந்திருக்கும் துர்ப்பாக்கியச் செய்தியையும் அறிவிப்ப தற்காக அவர்களிடம் வந்த மலக்குகள், அழகான இளைஞர்களின் தோற்றத்தில் காட்சியளித்தனர். அவர்களைக் கண்ட அந்த நபிமார்கள் இருவரும் அந்த இளைஞர்கள் அல்லாஹ்வின் மலக்குகள் என்பதை முதலில் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்களை மலக்குகள் என அறிமுகப்படுத்திய பின்னர்தான் அவர்கள் மலக்குகள் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். இப்படி அவர்களிடம் வந்த அந்த மலக்குகள், ஜிப்ரீல், மீகாஈல் இஸ்ராபீல் ஆகிய மூன்று மலக்குகள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள் என தப்ஸீர் பகவீயில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவல்லாமல் நபி இப்றாஹீம் அவர்களிடம் வருகை தந்த அந்த மலக்குகளின் எண்ணிக்கை ஏழு என்றும், ஒன்பது என்றும், பன்னிரண்டு என்றும் ழஹ்ஹாக், முகாதில், முஹம்மத் இப்னு கஃப் ஆகிய தப்ஸீர் வியாக்கியானிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்றும் தப்ஸீர் பகவீயில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் மர்யம் (அலை) அவர்களுக்கு ஈஸா எனும் அற்புதக் குழந்தை கிடைக்கவுள்ளது என்ற செய்தியை அறிவிப்பதற்காக, அவரிடம் ஜிப்ரீல் (அலை) ஒரு மனிதனின் தோற்றத்தில் தான் வந்தார்கள். அப்போது மர்யம் (அலை) அவர்கள் தன்னிடம் வந்த அந்த மனிதர் ஜிப்ரீல் (அலை) என்பதை முதலில் அறிந்து கொள்ளவில்லை. அதனை அவர் பிறகு தான் அறிந்து கொண்டார். இந்த சம்பவங்கள் எல்லாம் மலக்குகள் உருமாறக் கூடியவர்கள், என்பதை ஊர்ஜிதப் படுத்து கின்றன. மேலும் இவற்றுக்கு அல்குர்ஆனும், ஹதீஸும் அத்தட்சிகளாகும்.

    மேலும் மலக்குகள் மிகவும் பரிசுத்தமானவர்கள். அவர்களிடம் மனிதனைப் போன்று இச்சை, பசி, தாகம் போன்ற உணர்வுகள் இல்லை. ஆகையால் அவர்கள் உண்ணவும் குடிக்கவும் மாட்டார்கள். எனவேதான் அவர்களுக்கு இப்றாஹீம் (அலை) அவர்கள் உணவு பரிமாறிய போது, அதனை அவர்கள் ஏற்க மறுத்தனர். இதனை அல்லாஹ்வின் திருவசனம் இப்படிக் கூறுகின்றது,

    هَلْأَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ * إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنكَرُونَ * فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍ * فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ * )الذاريات/24-27)

    இப்றாஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தாளி களின் விஷயம் உங்களுக்கு எட்டியிருக்கின்றதா? அவர்கள் அவரிடம் வந்த போது “சாந்தி உண்டாவதாக", என்று கூறினார்கள். அதற்கு அவரும் “சாந்தி உண்டாவதாக" என்று கூறி, (இவர்கள்) நமக்கு அறிமுகமில்லாத சமூகத்தார் (என்று எண்ணிக் கொண்டு). பின்னர் தன் அல்லத்தாரிடம் விரைவாக சென்று, நெருப்பில் சுட்ட) கொழுத்த காளை கன்றைக் கொண்டு வந்தார். பின்னர் அதனை அவர்களின் அருகில் வைத்தார். (அவர்கள் உண்ணாததால்) “நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார். (51\24-27)

    மலக்குகள் அந்த உணவைப் புசிக்க மறுத்ததன் காரணமாகவே أَلَا تَأْكُلُونَ நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று அவர்களிடம் இப்றாஹீம் (அலை) அவர்கள் கேட்டார்கள். இதிலிருந்து மலக்குகள் உண்ணவும் குடிக்கவும் மாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

    மலக்குகளின் எண்ணிக்கை

    மலக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியாது. அதனை அல்லாஹ் அல்லாது வேறு எவரும் அறிய மாட்டார்கள். எனினும் மிஃராஜின் போது நபியவர்கள் ஏழாம் வானத்தைக் கடந்த பின்னர் பைதுல் மஃமூரின் பக்கம் உயர்த்தப் பட்டார்கள், அப்போது அவர்கள் அங்கு தான் கண்ட மலக்குகளைப் பற்றி விபரித்தார்கள். அதிலிருந்து, மலக்குகள் எண்ணில் அடங்காதவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்,

    ثبت في الصحيحين: أن رسول الله صلى الله عليه وسلم قال في حديث الإسراء، بعد مجاوزته السماء السابعة:ثم رفع بي إلى البيت المعمور، وإذا هو يدخله كل يوم سبعون ألفاً، لا يعودون إليه آخر ما عليهم

    பின்னர் 'பைதுல் மஃமூருக்கு' நான் உயர்த்தப்பட்டேன். அதனுள் தினமும் எழுபதாயிரம் மலக்குகள் பிரவேசிக்கின்றனர். இறுதி வரை அவர்கள் மீண்டும் அங்கு திரும்ப வரமாட்டார்கள்."(புகாரி,முஸ்லிம்)

    அதாவது, மஸ்ஜிதுல் ஹராமில் உலக மக்கள் அல்லாஹ்வை வணங்கியும், கஃபாவை தவாப் செய்தும் வருவது போன்று பைதுல் மஃமூரில் பிரவேசிக்கும் மலக்குகள் அங்கிருந்த வெளியே சென்ற பின் மீண்டும் அங்கு வர அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது. அந்த அளவுக்கு அவர்களுடைய தொகை அதிகம் என்பது இதன் கருத்தாகும்.

    இந்த மணிமொழியிலிருந்து தினமும் எழுபதாயிரம் மலக்குகள் பைதுல் மஃமூரில் பிரவேசிக்கின்றனர், என்பது தெரிய வருகின்றது. அப்படியாயின் உலகம் தோன்றியது முதல் இதுவரை அதனை தரிசித்த மலக்குகள் எம்மாத்திரம்! அவர்களைத் தவிர வேறுபட்ட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் கோடிக் கணக்கான மலக்குகள் வானத்திலும், இப்புவியிலும் சஞ்சரிக்கின்றனர். அவர்களுடைய தொகையை அல்லாஹ் மாத்திரமே அறிவான்.

    மலக்குகள் பலசாலிகள்

    மலக்குகள் பாரிய உருவமைப்பும், பலமும் மிக்கவர்கள். அல்லாஹ்வின் சிருஷ்டிகளில் அவர்களைப் போன்று பலசாலிகள் யாருமில்லை

    عن جابر بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال: أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش، إن ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة سبعمائة عام (رواه ابو داوود)

    “மலக்குகளைப் பற்றி விபரிப்பதற்குரிய அனுமதி எனக்குக் கிடைத்துள்ளது. நிச்சயமாக அந்த மலக்குகளில் ஒருவரின் காதின் அடிப்பாகத்தின் சதைப் பகுதிக்கும், அவருடைய புயத்திற்கும் இடையே எழுநூறு வருடப் பிரயாணத் தூரம் உள்ளது" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்.(அபூதாவூத்)

    இந்த ஹதீஸீலிருந்து மலக்குகளின் பலத்தையும், பருமனையும் ஓரளவுக்கு யூகிக்கலாம். மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்களின் தோற்றமும் மிகவும் பிரமாண்ட மானது. பொதுவாக மலக்குகள் மனிதர்கள் மத்தியில் தோன்றும் போது அவர்கள் தங்களின் இயற்கைத் தோற்றத்தில் தோன்றுவதில்லை. ஏனெனில். கம்பீரமான அவர்களின் அசாதாரணத் தோற்றம் மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அதனால்தான் ரஸூல் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு ஜிப்ரில் (அலை) வரும் போதெல்லாம் மனிதத் தோற்றத்தில் தோன்றினார்கள். எனினும் அவரை, அவரின் இயற்கைத் தோற்றத்தில் இரண்டு தடவைகள் மாத்திரமே ரஸூல் (ஸல்) அவர்கள் கண்டிருக்கின்றார்கள். இதனை ஹதீஸும், அல் குர்ஆனும் உறுதிப் படுத்துகின்றன.

    ரஸூல் (ஸல்) அவர்களைத் தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுத்த போது, அன்னார் ஹிரா குகையில் இருந்த அச்சந்தர்ப்பத்தில், அவரிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றினார்கள். அவர் 'அல் அலக்' அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களை ரஸூல் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பின்னர் மறைந்து விட்டார்கள். பிறகு சில நாட்களாக அவர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வரவில்லை. எனவே ஜிப்ரீல் (அலை) அவர்களை மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் நபியவர்கள் அடிக்கடி வெளியே வந்து நோட்டமிட்டார்கள். அப்பொழுது ஒரு நாள் நபியவர்கள், بطحاء مكة எனப்படும் மக்காவின் ஒரு தாழ் நிழத்திற்குச் சென்று நேட்டமிட்டார்கள். அப்போது அடிவானம் இருட்டிக் கொண்டு வருவதை அவர்கள் கண்டார்கள். அவ்வமயம் ஜிப்ரீல் (அலை) தன்னுடைய இரண்டு இறக்கைகளை விரித்து அங்கே வீற்றிருந்தார். அவ்வமயம் அடிவானத்தின் கிழக்கு முதல் மேற்கு வரை ஜிப்ரீல் (அலை) அவர்களின் இரண்டு இறக்கைகளும் மறைத்துக் கொண்டன. இது ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களின் உண்மையான தோற்றத்தில் நபிவர்கள் கண்ட முதல் தடவையாகும். இதனையே இறைவசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது

    وَلَقَدْ رَآهُ بِاِلْأُُفُقِِِِ الْمُبِيْنِ )التكوير/23)

    நிச்சயமாக அவர் (முஹம்மத்) அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.(81\23)

    وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى http://library.islamweb.net/newlibrary/display_book.php?flag=1&bk_no=49&surano=53&ayano=18 - docu(النجم/ 13) :

    "நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீலை) இறங்கக் கண்டிருக்கின்றார். ஸித்ரதுல் முன்தஹா என்னும் மரத்தின் இடத்தில், அவ்விடத்தில் தான் (நல்லடியார்கள்) தங்கும் சுவனபதி இருக்கின்றது" (53\13,14,15)

    ரஸூல்(ஸல்) அவர்கள் இரண்டாம் தடவையாகவும் ஜிப்ரீல் அவர்களை அன்னாரின் உண்மையான தோற்றத்தில் கண்டதை இவ்வசனம் உறுதிப் படுத்து கின்றது. முதல் முறையாக ஜிப்ரீலை ரஸூல் (ஸல்) அவர்கள் கண்ட நிகழ்வு இவ்வுலகிலும் இரண்டாவது சம்பவம் ஏழாம் வானத்திற்கு அப்பாலுள்ள 'ஸித்ரதுல் முன்தஹா' என்ற இடத்திலும் நடைபெற்றன, என்பது இங்கு கவணிக்கத் தக்கதாகும். இதனைத் தவிர வேறு ஒரு போதும் ஜிப்ரீல் (அலை) அவர்களை அன்னாரின் உண்மைத் தோற்றத்தில் நபியவர்கள் கண்டதில்லை. இதனை ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மேலும் தெளிவு படுத்துகின்றது. அதனை இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தனது தப்ஸீரில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்.

    وقال أحمد أيضا : حدثنا محمد بن أبي عدي ، عن داود ، عن الشعبي ، عن مسروق قال : كنت عند عائشة فقلت : أليس الله يقول : ولقد رآه بالأفق المبين ) [ التكوير : 23 ] ولقد رآه نزلة أخرى فقالت : أنا أول هذه الأمة سأل رسول الله - صلى الله عليه وسلم - عنها ، فقال : " إنما ذاك جبريل " . لم يره في صورته التي خلق عليها إلا مرتين ، رآه منهبطا من السماء إلى الأرض ، سادا عظم خلقه ما بين السماء والأرض
    أخرجاه في الصحيحين ، من حديث الشعبي به (ابن كير)

    ولقدرآهبالأفقالمبين “நிச்சயமாக அவர் ஜிப்ரீலை தெளிவான அடிவானத்தில் கண்டார்" என்றும் ,ولقدرآهنزلةأخرى “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவர் இறங்கக் கண்டிருக்கின்றார்" என்றும் அல்லாஹ் கூறுகின்றான் அல்லவா? என்று ஆஇஷா (ரழி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அவர்கள் இந்த வசனத்தைப் பற்றி இந்த உம்மத்தில் முதலில் ரஸூல் (ஸல்) அவர்களிடம் விசாரித்தவர் நான் தான் என்றும், ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் எந்தக் கோலத்தில் படைத்தானோ அன்னாரை அந்தக் கோலத்தில் இரண்டு தடவைகளுக்கு மேலாக நபியவர்கள் கண்டதில்லை, அவர் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வரும் போது அன்னாரை ரஸூல் (ஸல்) கண்டார்கள். அப்பொழுது அவர்களின் பாரிய தோற்றம் வானத்திற்கும் பூமிக்கும் இடையே மறைத்துக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள். என்று மஸ்றூக் என்பார் அறிவிக்கின்றார்கள். (இப்னு கஸீர்)

    முக்கிய மலக்குகளும், பொறுப்புக்களும்

    எண்ணிலடங்காத மலக்குகள் இருந்த போதிலும், அவர்களில் சிலரை அல்லாஹ் தெரிவு செய்து அவர்களிடம் சில முக்கிய பொருப்புக்களை ஒப்படைத்துள்ளான். அப்படியான முக்கியமான பத்து மலக்குகள் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இனி அவர்களின் பெயர் களையும், பொறுப்புக்களையும் கவணிப்போம்.

    1-ஜிப்ரீல் (அலை) 'வஹியுக்குப் பொறுப்பானவர்' இவர்களின் பொறுப்பு ரஸூல் (ஸல்) அவர்களின் வபாத்துடன் நிறைவு பெறுகின்றது. ஏனெனில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி நபி என்ற படியால், அன்னாரின் வபாத்துடன் வஹீயைக் கொண்டு வரும் பணியும் முடிவு பெற்று விட்டது. எனவேதான் ரஸுல் (ஸல்) அவர்களின் மரணத் தருவாயில் அவரிடம் ஜிப்ரீல் (அலை) வருகை தந்து,

    : سلام عليك, هذا آخر موطئي في الأرض. يعني أنه اعترف بأنه إنما كان ينزل بالوحي. وقال: إنما كنت حاجتي من الأرض, فهذا آخر موطني, آخر نزولي. يعني نزوله بالوحي.


    “உங்களின் மீது சாந்தி உண்டாவதாக. இதுதான் நான் பூமிக்கு வரும் இறுதி சந்தர்ப்பமாகும்." என்றார்கள். “அதாவது நீங்கள் பூமியில் இருந்த படியால் தான் நான் பூமிக்கு வரவேண்டிய தேவை இருந்தது. எனவே பூமிக்கு வஹீயை எடுத்து வரும் எனது வருகையின் இறுதி இதுதான்" என்றார்கள், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஜிப்ரீன் இணயத் தளம்)

    2-மீகாஈல் (அலை) மழைக்குப் பொறுப்பானவர்.

    3-இஸ்றாபீல் (அலை) இறுதி நாளில் ஸூர் ஊதும் பொறுப்புக்குரியவர்

    4-மலகுல் மௌத்தும், அவரின் உதவியாளர்களும். உயிரைக் கைப்பற்றும் பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரை இஸ்ராஈல் எனும் பெயர் கொண்டு சிலர் அழைத்த போதிலும், அதற்குக் குர்ஆனிலும், ஸுன்னாவிலும் ஆதாரம் எதுவும் இல்லை, அது பனூ இஸ்ராஈல்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப் பட்டதாகும் என்பதுஆய்வாளரின் முடிவாகும்.

    5-கிராமுன் காதிபூன்- கண்ணியமான எழுத்தாளர்கள். இவர்கள் மனிதனின் வலது புரத்திலும், இடது புரத்திலும் இருக்கும் மலக்குகள். இவர்களிடம் மனிதன் புரியும் நன்மை தீமையினைப் பதியும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது.

    6- ஹபழா - பாதுகாவளர்கள். இவர்கள் மனிதனின் பாதுகாவலுக்கென நியமிக்கப்பட்டவர்கள். இவர்கள் இரவு பகலாக மனிதனைப் பாதுகாத்து வருவர்.

    7-ஸய்யாஹூன்- பூமியில் வலம் வருவோர். இவர்கள் திக்ரு மஜ்லிஸ்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று அதில் பங்கேற்கின்றவர்கள்.

    8-முன்கர், நகீர். இவர்களிடம் கப்ரில் கேள்வி கேட்கும் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.

    9-ரிழ்வான் (அலை) அவர்களும், அன்னாரின் உதவி யாளர்களும். இவர்களிடம் சுவர்க்கத்தின் பாதுகாப்புப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

    10- மாலிக் (அலை) அவர்களும் அன்னாரின் உதவியாளர்களும். இவர்களிடம் நரகின் பாதுகாப்புப் பொறுப்புக்கள் சாட்டப்பட்டுள்ளன.

    இவர்களைத் தவிர இடி, மின்னல், காற்று போன்ற இன்னும் பல காரியங்களுக்காக நியமிக்கப்பட்ட வேறு பல மலக்குகளும் உள்ளனர். இனி இந்த மலக்குகளைப் பற்றிக் குறிப்பிடும் சில குர்ஆன் வசனங்களைக் கவனிப்போம். இறுதி நாளில் அல்லாஹ்வின் அர்ஷை எட்டு மலக்குகள் சுமந்து கொண்டு இருப்பார்கள். இதனைப் பின் வரும் வசனம் இப்படி இயம்புகிறது,

    وَيَحْمِلُ عَرْشَ رَبّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ [الحاقة:17].

    “அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை எட்டு (மலக்குகள்)பேர் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள். (69\17) அடுத்து வரும் வசனம் மலக்குல் மௌத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது,

    قُلْ يَتَوَفَّـٰكُم مَّلَكُ ٱلْمَوْتِ ٱلَّذِى وُكّلَ بِكُمْ [السجدة:11].

    “நீங்கள் கூறுங்கள் “உங்களுக்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குல் மவ்த் உங்களுடைய உயிரைக் கைப்பற்றுவார். (32\11) மேலும் அவருடைய உதவியாளர்களைப் பற்றி அடுத்து வரும் வசனம் இவ்வாறு இயம்புகிறது,

    حَتَّىٰ إِذَا جَاء أَحَدَكُمُ ٱلْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لاَ يُفَرّطُونَ [الأنعام:61].

    உங்களில் ஒருவருக்கு மரணம் வந்து விடுமானால் அவரை நமது தூதர்கள் இறக்கச் செய்கின்றனர், அவர்கள் (இவ்விடயத்தில்) எந்த குறையும் செய்ய மாட்டார்கள்" (6\61) மேலும் பின்வரும் வசனம் சுவர்கத்திலுள்ள மலக்குகளைப் பற்றி எடுத்துக் கூறகின்றது.

    : وَالمَلَـٰئِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مّن كُلّ بَابٍ[الرعد:23]

    (சுவர்க்கத்தின்) ஒவ்வொரு வாசலிலிருந்தும் மலக்குகள் இவர்களிடம் பிரவேசிப்பார்கள்." (13\23)

    முஸ்லிம் என்ற முறையில் மலக்குகளைப் பற்றி ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விடயங்களை இதன் மூலம் முன்வைக்க முயன்றுள்ளேன். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. எனவே, ஈமானின் அடிப்படைகளில் ஒன்றான மலக்குகளின் மீது உரிய முறையில் ஈமான் கொண்டு வெற்றி பெற்ற கூட்டத்தில் அல்லாஹ் நம்மனைவரையும் சேர்த்துக் கொள்வானாக.

    وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين

    ------------------------------------

    31\08\2015