×
நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆக வேண்டும் என்பதே.

 நோன்பும் தக்வாவும்

 الصوم والتقوى

< tamil தமிழ்-- تاميلية >

Y.M. செய்யது இஸ்மாயில் இமாம்

—™

முஹம்மத் அமீன்

ترجمة:

مراجعة:محمد أمين

நோன்பும் தக்வாவும்

 நோன்பும் தக்வாவும்

Y.M செய்யது இஸ்மாயில் இமாம்.

ரஷாதி-பெங்களூர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமம் கொண்டு ஆரம்பம் செய்கிறேன். சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம். கருணையும் சாந்தியும் நமது தூதர் இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் கிளையார், தோழர்கள் யாவரின் மீதும் உண்டாவதாக.

இஸ்லாமிய சன்மார்க்கத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு, ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு விதியாக்கப்பட்டது. நோன்பு முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர் மீது மாத்திரம் விதியாக்கப்பட்ட ஒரு கடமை அல்ல. முந்திய சமூகத்தினர் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது. எனினும் வருடத்தில் ஒரு மாதம் என்ற அடிப்படையில் அவர்களின் மீது அது விதியாக்கப்பட வில்லை. மாதம் தோரும் மூன்று நாட்கள் என்ற அடிப்படையிலேயே அவர்களின் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது.

நோன்பை நம் மீது கடமையாக்கிய அல்லாஹ், அதனை ரமழான் மாத்தில் நாங்கள் நோற்க வேண்டுமென கட்டளையிட்டான். அது பற்றிக் குறிப்பிடும் போது, ஸூரா பகராவின் 185 வது வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,

شَهرُ رَمَضانَ الَّذى أُنزِلَ فيهِ القُرءانُ هُدًى لِلنّاسِ وَبَيِّنـٰتٍ مِنَ الهُدىٰ وَالفُرقانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهرَ فَليَصُمهُ 2;185

“ரமழான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருக் குர்ஆன் அருளப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியை தெரிவிக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும்.(2\185)

நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் அடியான் அல்லாஹ்வின் மீது பயபக்தியுள்ள, அவனுக்கு விருப்பமுள்ள ஒரு நல்லடியானாக ஆகவேண்டும் என்பதே. இதனை அவ்வாஹ்வின் பின் வரும் வசனம் இப்படி குறிப்பிடுகின்றது.

يـٰأَيُّهَا الَّذينَ ءامَنوا كُتِبَ عَلَيكُمُ الصِّيامُ كَما كُتِبَ عَلَى الَّذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتَّقونَ ﴿١٨٣

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ள வர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்தது போல உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப் பட்டுள்ளது, நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகுவதற்காக.” (2\183)

அல்லாஹ்வின் கட்டளைக்கு யாவரும் அடிபணிந்து, அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகிறான், இதனை அல்லாஹ்வின் பின்வரும் வசனம் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.

وَلَقَد وَصَّينَا الَّذينَ أوتُوا الكِتـٰبَ مِن قَبلِكُم وَإِيّاكُم أَنِ اتَّقُوا اللَّـهَ ۚ (النساء/131)

உங்களுக்கு முன்னர் வேத​ம் கெடுக்கப்பட்ட வர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ் ஒருவனுக்கே பயப்படுங்கள்” என்றே நல்லுபதேசம் செய்திருக்குன்றோம்.”(4\131)

எனவே யாவரும் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனின் மீது பயபக்தி உடையவர்களாக இருக்க வேண்டு மென்பது இத்திரு வசனத்திலிருந்து துலாம்பரமாகிறது.

தக்வா என்றால் என்ன?

, தக்வா, என்பதன் பொருள் பயப்படுதல், அஞ்சுதல் என்பதாகும். பொதுவாக இச்சொல், இறையச்சம், அல்லாஹ்வுக்குப் பயப்படுதல் என்ற பொருளைத் தருகிறது. சர்வ உலகையும் படைத்த அல்லாஹ்வே பகுத்தறிவுள்ள மனுவையும், ஜின்னையும், மலக்கு களையும் படைத்தான். எனவே சகல சிருஷ்டிகளும் அல்லாஹ்வின் அடிமைகளே. அவனுக்குக் கட்டுப்பட வேண்டியவைகளே. குறிப்பாக மனிதன் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து செயற்படவென பிரத்தியேகமான விதி முறைகளையும் சட்டங்களையும் அல்லாஹ் ஏற்படுத்தி யுள்ளான். அதன்படி கருமமாற்றுபவர்களுக்கு அவன் நற்கூலி தருவதாக வாக்களித்துள்ளான். மேலும் அதற்கு மாறு செய்பவர்களைத் தண்டிப்பதாக எச்சரிக்கையும் செய்துள்ளான்.

பொதுவாக தக்வா எனும் போது அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவன் விலக்கியவைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதுவே தக்வா எனப்படுகின்றது. தக்வா என்பதற்கு சான்றோர் பல வியாக்கினங்கள் தந்துள்ளனர். அவை யாவும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாது அவனுக்கு முற்றும் முழுதாக அடிபணிந்து ஒழுக வேண்டு மென்ற விடயத்தையே சுட்டிக் காட்டுகின்றன.

ஒரு முறை அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களுக்கும், உபையிப்னு கஃப் (ரழி) அவர்களுக்கும் மிடையில் தக்வா பற்றி ஒரு உரையாடல் நடைபெற்றது. அப்போது உபை (ரழி) அவர்களிடம், அமீருல் மீஃமினீன் அவர்கள், “உபையே! தக்வா என்றால் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு உபை, “அமீருல் முஃமினீன் அவர்களே! தாங்கள் முற்களுள்ள வீதியில் நடந்து சென்றிருக்கின்றீர்களா?” என்றார். அதற்கு அமீருல் முஃமினீன் அவர்கள் “ஆம்” என்றார்கள். “அப்போது தாங்கள் என்ன செய்தீர்கள்?” என்று உபை மீண்டும் வினவினார். அதற்கு அமீருல் முஃமினீன் அவர்கள் “முற்கள் தைக்காமல் எனது ஆடையை உயர்த்திக் கொண்டேன்,” என்று பதிலளித்தார்கள். அப்போது உபையிப்னு கஃபு (ரழி) அவர்கள், “அதுதான் தக்வா” என்றாரகள்.

முற்களுள்ள பாதையில் செல்லும் போது முற்கள் தைக்காமல் இருக்க எப்படி முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியமோ, அவ்வாறுதான் பாவ காரியங்கள் நிறைந்த உலகில் அதில் சிக்கி விடாமல் ,தக்வா உள்ள நல்லடியான் கவணமாக நடந்து கொள்வான், என்பதை இந்த உரையாடல் உணர்த்துகிறது.

நோன்பைப் பற்றிக் குறிப்பிடும் போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்,

“ நீ நோன்பு நோற்றிருக்கும் போது உன்னுடைய செவியும், பார்வையும் பாவ காரியங்களைக் கேட்பதையும், பார்ப்பதையும் விட்டும் தவிர்த்துக் கொள்ள ணேடும், அவ்வாறே உன்னுடைய நாவு பொய் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சேவகனுக்கு நீ துன்பம் தருவதை விட்டு விட வேண்டும். உனது நோன்பு அந்நாளில் உனக்கு கம்பீரத்தையும், அமைதியையும் தர வேண்டும்” என்று கூறினார்கள்.

நபித் தோழரின் இந்த வாசகம், நோன்பென்பது உணவையும் பானத்தையும் தவிர்த்துக் கொள்வதற்குரிய பெயரல்ல. மாறாக அத்துடன் பாவகாரியங்களிலிருந்து புலனையும், அவயவங்களையும் பாதுகாத்துக் கொண்டால்தான், நோன்பு அர்த்தமுள்ளதாக இருக்கும், என்பதை உணர்த்துகிறது. இதனை ரஸூல் (ஸல்) அவர்களின் மணி மொழிகள் மேலும் உறுதி படுத்துகின்றன.

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رُبصَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إلا الْجُوْعُ وَرُب قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيامهِ إلا السَهْرُ (إبن ماجه/ النسائي)

“எத்தனையோ நோன்பாளிகள், அவர்கள் பட்டினிக் கிடந்ததை தவிர அவருடைய நோன்பிலிருந்து அவருக்கு எந்தப் பயனுமில்லை. மேலும் இன்னும் இரவு விழித்திருந்த எத்தனையோ பேர் அவர்கள் இரவில் விழித்திருந்ததைத் தவிர அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று, அபூ ஹுரா ( ரழி) அறிவிக்கின்றார்கள். (இப்னு மாஜா, நஸாஈ)

قال رسول الله صلى الله عليه وسلم مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُوْرِ وَ الْعَمَلَ بِهِ فَلَيْسَ للَه حَاجَةٌ فِيْ أنْ يَدَعَ طَعَامَهُ وشَرَابَهُ(رواه البخاري)

“யார் பொய் பேசுவதையும், பிழையான காரியங்களில் ஈடுபடுவதையும் விட்டு விடவில்லையோ, அவர் தன் உணவையும், பானத்தையும் தவிர்த்துக் கொண்டதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் இயம்பினார்கள்.( புகாரி)

“நோன்பாளி பொய் பேசுவதை​யும், தவறான காரியங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ள வில்லையாயின் அவனுடைய நோன்பு அவனுக்குப் பயன் தராது. அதற்குரிய நன்மையும் அவனுக்குக் கிடைக்காது. மேலும் அவனுடைய நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் மாட்டான்” என்பது இந்நபி மொழியிலிருந்து புலனாகிறது. இனி அடுத்து வரும் ஹதீஸைக் கவணிப்போம்.

الصِيَامُ جُنةٌ فَإذَا كَانَ يَوْمُ صَوْمِ أحَدِكُمْ فَلاَ يَرْفَثْ وَلاَيَصْخَبْ فَإنِ امْرُؤٌ سَابَّهُّ أوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إني صَائِمٌ مَرتَيْنِ (متفق عليه)

நோன்பு ஒரு கேடயம். ஆகையால் உங்களில் எவரேனும் நோன்பு நோற்கும் தினத்தை அடைந்து கொண்டால், அவர் ஆபாச பேச்சுக்கள் பேசவும், கூச்சலிடவும் வேண்டாம். எனினும் யாரேனும் அவரைத் திட்டினாலோ, அல்லது அவருடன் சண்டைக்கு வந்தாலோ, அவர் “நான் ஒரு நோன்பாளி” என்று இரண்டு தடவைகள் சொல்லி விடுவாராக.’ என நபியவர்கள் கூறினார்கள்.

நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்க வேண்டும். களிப்பைத் தூண்டும், ஆபாச பேச்சுக்களிலும் மற்றும் கூத்துக் கும்மாளத்திலும், அரட்டை அடிப்பதிலும் நோன்பாளி நேரத்தைச் செலவிடக் கூடாதென்பதை இந்நபி மொழி தெளிவு படுத்துகின்றது.

எனவே தான் நபித் தோழர்களும், சான்றோர்களும் தங்களின் நோன்பு பாழாகி விடாத படி மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர். நோன்பு காலத்தில் அபூ ஹுரைரா (ரழி) அவர்களும், அன்னாரின் தோழர்களும் பள்ளிவாசலில் அமர்ந்து கொள்வார்கள், அப்போதவர்கள் “நாம் நமது நோன்பைத் தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கின்றோம்,” என்று கூறுவார்கள், எனவும் அவர்களின் வாழ்க்கை சரிதை கூறுகின்றது. அவ்வாறே, “தலீக் இப்னு கைஸ், என்ற பெரியார் நோன்பு காலத்தில் தொழுகைக்காக அல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வரமாட்டார்கள்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது​.

இந்த நபித்தோழர்களினதும், சான்றோர்களினதும் இந்த சம்பவங்கள் எதனை உணர்த்துகின்றன? ஜனங்களுடன் கூடியிருக்கும் போதுதான் வீன் பேச்சுக்களும், வம்பளத்தல்களும் இடம் பெறுகின்றன. எனவே அதிலிருந்து தவிர்ந்து கொள்ள ஒரே வழி, மக்களுடன் ஒன்று சேராமல் இருப்பதே, என்று கருதிய அந்த நல்லடியார்கள் நோன்பு காலத்தில் ஒதுங்கி வாழ்ந்தார்கள், என்பதையே இது போன்ற சம்மவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால் அவர்களைப் போன்று ஒதுங்கி வாழ்வதென்பது, எல்லோராலும் சாத்தியமாகாது. எனினும் இங்கு கவணிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், எவ்வாறாயினும் பொதுவாக புலனையும், அவயவங்களையும் பாவகாரியங்களை விட்டும், வீணான நடவடிக்கைகளை விட்டும் பாதுகாத்த்துக் கொள்ள ணேடும், என்பதே. அவ்வாறு இல்லாது போனால் நோற்ற நோன்பு அர்த்தமற்றதாகிவிடும்.

“உணவையும், பானத்தையும் தவிர்த்துக் கொள்வதுதான் நோன்பென்றால், அது மிகவும் இலகுவான நோன்பாகும்” என்று மைமூன் இப்னு மெஹ்ரான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன் கருத்தாவது நோன்பாளி பாவ கருமங்களின் மீது கவணம் செலுத்தி அவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளாது வெறும் உணவு குடிப்பின்றி இருப்பதுதான் நோன்பென்றால், அப்படியான நோன்பு இலகுவானதுதான். ஆனால் அவயவங்களைப் பாவ காரியங்களிலிருந்து பாதுகாத்துக் கொண்ட வாறு நோன்பு நோற்பது தான் கடினமானது, என்பதே.

இதனை அல்லாமா அல் பைழாவீ அவர்கள் “நோன்பு நோற்க வேண்டும் என்ற சட்டம் ஏற்படுத்தப் பட்டதன் நோக்கம் வெறும் பட்டினியாகவும், தாகத்தோடும் இருக்க வேண்டும், என்பதற்காக அல்ல,​ அதன் மூலம் மனோ இச்சைகளை உடைக்கவும், பேராசை கொண்ட மனதை, சாந்தி பெற்ற மனதுக்குக் கட்டுப்படச் செய்யவும் வேண்டும், என்பதற்காகவும் தான். எனவே நோன்பின் இந்நோக்கம் நிறைவேறாது போனால், அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். மேலும் அதனால் நோன்பாளிக்குப் பசித்திருந்ததைத் தவிர வேறு எந்தப் பயனும் இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

பொதுவாக நோன்பைக் கவணிக்கும் போது, உண்மையில் அது நோன்பாளிக்கு மனக் கட்டுப்பாட்டைத் தருகிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அல்லாஹ்வுக்காக பசியையும் தாகத்தையும் விட்டுக் கொடுக்கும் நோன்பாளி, யாரும் இல்லாது தனிமையில் இருக்கும் போது கூட சாப்பிடுவதற்கோ தண்ணீர் அருந்து வதற்கோ துணிவதில்லை. ஏனெனில் அப்போது அவனை அறியாமலே அல்லாஹ்வைப் பற்றிய எண்ணமும் அச்சமும் அவனுள் ஏற்படுகிறது, என்பதே அதற்குக் காரணம்.

ஆனால் ஆகார விடயத்தில் மனதுக்கு அடிமை யாகாத அவன், நோன்புக்குப் பாதகமான பொய் பேசுதல், புறம் கூறல், கோல் சொல்லுதல், வதந்திகளைப் பரப்புதல் போன்ற தவறான காரியங்களின் போது, மனதுடன் போரிட முடியாமல் அவன் தோழ்வியடைந்து விடுகிறான். எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில், நோன்பின் நிமித்தம் பசியையும் தாகத்தையும் கட்டுப்படுத்தும் ஆளுமை தன்னிடம் உண்டென்றால், நோன்பின் நிமித்தம் அதற்குப் பாதகமான ஏனைய தவறான கருமங்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாதா? என்று ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு சிந்திப்பதன் மூலம் ஏனைய தவறுகளையும் தவிர்த்துக் கொள்ள முயல வேண்டும். இவ்வாறான ஒரு பயிற்சியை நோன்பாளி பெற வேண்டும், என்பதே நோன்பின் குறிக்கோலாகும்.

ரமழான் மாத்தில் இத்தகைய பயிற்சியொன்றைப் பெறும் நோன்பாளி, அடுத்து வரும் பதினொரு மாதங்களிலும் தன் மனதைக் கட்டுப்படுத்தும் வலிமையைப் பெறுவான். எல்லா நோன்பாளிகளின் நிலையும் இப்படி அமைந்து விடுமானால். உலகம் சுபீட்சமடையும், நிம்மதி பெறும். இத்தகைய நோன்புதான் தக்வாவை- இறைபக்தியை ஏற்படுத்தக் கூடியது. இதனையே அல்லாஹ் விரும்புகிறான்.

நோன்பின் கூலி

நோன்பைத் தவிர தொழுகை, ஸகாத், ஹஜ்ஜு போன்று இன்னும் பல நற்கருமங்கள் இருக்கின்ற போதிலும், அவை முகஸ்த்துதிக்காகவும் பாராட்டைப் பெறுவதற்காகவும் செய்ய இயலுமான காரியங்களாகும். ஆனால் நோன்பு அப்படியில்லை. ஏனெனில் அடியான் நோன்பு நோற்றுள்ளானா, இல்லையா? என்பது பரம இரகசியமாகும். அதனை அடியானும் அல்லாஹ்வும்தான் அறிவர்.

எனவேதான் நோன்பு தவிர்ந்த நற்கருமங்களுக் குறிய கூலியின் அளவு நிர்னயிக்கப்பட்டுள்ள போதிலும், நோன்பின் கூலி இன்னது என்று நிர்ணயிக்கப்படவில்லை. எனவே நேன்புக்கு அல்லாஹ் விரும்பிய மட்டும் கூலியை வாரி வழங்குவான். இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

عن أبي هريرة رضي الله عنه قال قالرسول الله صلى الله عليه وسلم كُلُّ عَمَلِ ابْنِ آدم لَهُ إلاَّ الصِّيامَ فَإنَّهُ لِي وَأنَا أجْزيْ بِهِ وَالصِّيامُ جُنَّةٌ فَإذا كَانَ يَوْمُ صَوْمِ أحَدِكُمْ فَلاَ يَرْفَثْ ولاَيَصْخَبْ فَإنْ سَابَّهُ أحَدٌ أوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إنِّيْ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخَلُوْفُ فَمِ الصَّائِمِ أطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيْحِ الْمِسْكِ. لِلصَّائِمِ فَرْحَتَانِ يفْرَحُهُمَا إذا أفطَرَ فَرِحَ بِفِطْرِهِ وإذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ(متفق عليه)

“மனிதனின் செயல்கள் யாவும் அவனுக்குரியன. ஆனால் நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியது. அதன் கூலியை நானே தருவேன்.” என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயம். உங்களில் நோன்பை அடைந்து கொண்டவர், ஆபாச பேச்சுக்களைப் பேசவோ, கூச்சலிடவோ வேண்டாம். யாரேனும் அவரைத் திட்டினாலோ அல்லது அவருடன் சண்டைக்கு வந்தாலோ, “நான் நோன்பாளி” என்று அவர் சொல்வாராக. முஹம்மதுவின் ஆத்மா எவன் வசம் இருக்கின்றதோ அவனின் மீது ஆணையாக நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் வாசனை மிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்சிகள் இருக்கின்றன. ஒன்று நோன்பு திறக்கும் போது அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, மற்றையது அவன் அல்லாஹ்வை சந்திக்கும் போது அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி யாகும்.” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸின் ஒரு பகுதி முன்னர் எடுத்துக் கூறப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்களை இங்கு கவணிப்போம். எல்லா நல்ல கருமங்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். ஆயினும் நோன்பைப் பற்றிக் குறிப்பிடுகின்ற போது அதற்குத் தானே கூலி தருவதாக விஷேசமாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதன் கருத்தாவது, ஏனைய​ நல்ல கருமங்களுக்கெல்லாம் கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், நோன்புக்குக் கூலி எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. ஆகையால் நோன்பிற்குக் கூலி வழங்கும் பொருப்பினை தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விரும்பிய மட்டும் அதற்குத் தாரளமாகத் தான் கூலி தருவதாகவும் அல்லாஹ் உறுதி யளித்துள்ளான், என்பதே இதன் கருத்தாகும்.

மேலும் நோன்பாளி இரண்டு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியடைகிறான், என்று இங்கு குறிப்படப்பட்டுள்ளது. ஒன்று நோன்பு திறக்கும் நேரத்தில் அவன் அடையும் மகிழ்ச்சி. இதனை எல்லா நோன்பாளிகளும் அனுபவித்து வருகின்றனர். மற்றையது மறு உலகத்தில் அல்லாஹ்வை ​அவன் சந்திக்கும் போது அவன் அடையும் மகிழ்ச்சியாகும். இது நாளை மறுமை நாளில் நோன்பாளிக்கு அல்லாஹ்வை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், என்ற சுப செய்தியைத் தருகிறது. இந்த பாக்கியம் நம்மனைவருக்கும் கிடைக்க அல்லாஹ் அருள் புறிவானாக.

பொதுவாக வாயின் துர்வாடையை யாவரும் வெறுக்கின்ற போதிலும், நோன்பாளி அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, அவன் மீது அன்பு கொண்டு நோன்பு வைத்ததன் காரணமாக அவனின் இரைப்பை காய்ந்து விட்டது. அதன் விளைவு, வயிற்றின் வெப்பம் வாய் மூலம் துர் வாடையாக வெளியேறுகிறது. எனவே தான் அந்த வாசத்தை கஸ்தூரியை விடவும் மேலானது என்று அல்லாஹ் பாராட்டுகின்றான். இதுவெல்லாம் மற்றெல்லா நற்கிரியைகளை விடவும் நோன்பு மேலானது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

இது மாத்திரமின்றி நோன்பாளிகளை மேலும் கௌரவிக்கு முகமாக,அவர்கள் சுவர்க்கம் செல்ல அவர்களுக் கென்று தனி வாயல் ஒன்றைக் கூட அல்லாஹ் ஏற்படுத்தி, அதற்கு بَابُ الرَيان என்று பெயரும் இட்டுள்ளான். உலகத்தில் சிரேஷ்ட்ட பிரஜைகள் VIP என்று அழைக்கப் படுகின்றனர். அவர்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் விஷேசமாக மேற் கொள்ளப் படுகின்றன. அவர்கள் வந்து செல்வதற்குக் கூட தனி வாயல்கள் ஏற்பாடு செய்யப் படுகின்றன. அப்படியாயின் அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் சிரேஷ்ட்டமான நோன்பாளிகள் சுவர்க்கம் செல்ல அவர்களுக்கென்று தனியான ஒரு வாயலை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்றால் அதில் என்ன வியப்பு இருக்கிறது? இந்த வாயலைப் பற்றி நபியவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்,

عن سهل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن فِي الْجَنةِ بَابًا يُقَالُ لَهُ الريان يَدْخُلُ فِيْهِ الصائِمُوْنَ يَوْمَ الْقِيامةِ لاَيَدْخُلُ مِنْهُ أَحدٌ غَيْرُهُمْ ُيقَالُ أيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لاَيَدْخُلُ مِنْهُ أحَدٌ غَيْرُهُمْ فَإذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أحَدٌ

(سنن الترمذي والنسائي وابن ماجة ومسند الامام احمد)

“சுவர்க்கத்தில் “ரையான்” என்றழைக்கப் படும் ஒரு வாசல் உண்டு. அது மறுமை நாளில் நோன்பாளிகள் சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் வாசல். அவர்களைத் தவிர வேறு எவருக்கும் அதனூடாகச் செல்ல அனுமதியில்லை. நோன்பாளிகள் எங்கே? என்று வினவப்பட்டதும், அவர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்கள் அல்லாத எவருக்கும் அதனுள் செல்ல அனுமதி இல்லாத படியால், அவர்கள் உள்ளே பிரவேசித்ததும், அந்த வாயல் அடைக்கப்படும்” என்று நபியவர்கள் கூறினார்கள், என ஸஹ்ல் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதீ, நஸாஈ, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்)

நோன்பாளிகளுக்கு அல்லாஹ் எந்த அளவு மதிப்பளித்துள்ளான் என்பதற்கு இந்நபி மொழி சிறந்த அத்தாட்சியாகும். ஆனால் நோன்பை உரிய முறையில் நோற்ற நோன்பாளிகளுக்கே இந்த கௌரவம் உரித்துடையது என்பதை நினைவில் வைத்தல் வேண்டும்.

எனவே உண்மையான நோன்பாளிகளின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்து அவர்களுக்குரிய கௌரவத்தை நமக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக