×
சிறுவர்கள் வாலிபர்களுக்கான நபியவர்களின் வழிகாட்டல்

சிறுவர்கள் வாலிபர்களுக்கான நபியவர்களின் வழிகாட்டல் ([1])

إنَّ الحمدَ للَّه، نحمده ونستعينه ونستغفره، ونعوذ باللَّه من شرور أنفسنا ومن سيِّئات أعمالنا، مَنْ يَهده اللَّه فلا مُضِلَّ له، ومن يُضلِلْ فلا هاديَ له، وأشهد أن لا إله إلَّا اللَّهُ وحده لا شريك له، وأشهد أنَّ محمداً عبدُه ورسوله، صلَّى اللَّه عليه وعلى آله وأصحابه وسلَّم تسليماً كثيراً.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனைப் புகழ்கின்றோம், அவனிடம் உதவிதேடுகின்றோம், மேலும் அவனிடம் பாவமண்ணிப்பும் தேடுகின்றோம். அல்லாஹ்விடம் எமது கெடுதிகளிலிருந்தும், எமது கெட்ட செயல்களிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகின்றோம். மேலும் அல்லாஹ் தனித்தவன், இனைதுனையற்றவன் என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அடியார் என்றும் சாட்சிபகர்கின்றேன்.

அல்லாஹ், அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீதும் அதிகமாக ஸலாத்தும் ஸலாமும் சொல்லியருள்வானாக.

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை உரியமுறையில் பயந்துகொள்ளுங்கள், இரகசிய மற்றும் பரகசிய நிலையிலும் அவனது கண்கானிப்பின் கீழ் இருங்கள்.

முஸ்லிம்களே, அல்லாஹ் இரண்டு இயாலாமைகளுக்கு மத்தியில் ஒரு பலத்தை வைத்துள்ளான். அந்த பலமே இவ்வுலக வாழ்வின் தூனாகவும், மறுமையின் பலனாகவும் அமைந்திருக்கின்றது, வாலிப்பருவமே அந்த இயலாமைக்குப் பிறகு உள்ள பலமாகும். இப்பருநத்திலேயே உறுதி கூடி, முயற்சி மேலோங்குகின்றது. காலாகாலமாக அவர்களின் பயன் மிகப் பெரியதாக இருந்தது.

இப்றாஹீம் (அலை) அவர்களின் சமூகம், அவர்களைப் பற்றி:

﴿سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ﴾

21:60. அதற்கு (அவர்களில் சிலர்) "ஒரு வாலிபர் இவைகளைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கின்றோம். அவருக்கு "இப்ராஹீம்" என்று பெயர் கூறப்படுகின்றது" என்று கூறினார்கள்.

ஈஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ்:

﴿وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا﴾

19:12. நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம். என்று கூறுகின்றான்.

'(இங்கே ஞானம் எனப்படுவது:) சிறுபராயத்திலேயே (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) அறிவு, விளக்கம், முயற்சி, உறுதி, நல்லவற்றின்பால் முன்னிற்றி அவற்றில் ஈடுபட்டு முயற்சித்தல் போன்றவற்றைக் குறிக்கும்' என இமாம் இப்னு கஸீர் (றஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அல்லாஹ் குகைவாசிகளைப் பற்றி:

﴿إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى﴾

18:13. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்களாவர். (ஆகவே) மென்மேலும் நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம். என்று கூறுகின்றான்.

இமாம் இப்னு கஸீர் (றஸ்) அவர்கள்: 'அல்லாஹ், அவர்கள் வாலிபர்கள் என்று குறிப்பிடுகின்றான், அவர்களே, வயோதிபர்களைவிட உண்மையின்பால் முன்நிற்பவர்களாகவும், நேரான வழியைப் பின்பற்றக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்; அதனாற்றான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்களாக வாலிபர்கள் காணப்பட்டனர். மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலால் நிழல் வழங்கும் ஏழ்வருள் ஒருவராக அல்லாஹ்வை வணங்குவதில் வாழ்வைக்கழிக்கும் வாலிபனைக் குறிப்பிடுகின்றான்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் சிறிய நபித்தோழர்களுடனும், வாலிப்பதோழர்களுடனும் நடந்துகொண்ட வழிமுறை மிகச்சிறந்த வழிமுறையாகும். அவர்களுடன் பணிவாக நடந்தார்கள், பன்பாகப் பழகினார்கள், அவர்களை சந்தித்ததார்கள், அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள், அவர்களை உட்சாகப்படுத்தினார்கள்; அதன் மூலமாக அவர்களிலிருந்து ஒரு பெரும் சமூகத்தையே உருவாக்கினார்கள்.

(إِذَا مَرَّ بِصِبْيَانٍ سَلَّمَ عَلَيْهِمْ) (متفق عليه(

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்குப் பக்கத்தால் செல்லும் போது, அவர்களுக்கு ஸலாம் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் (புஹாரி, முஸ்லிம்) என்பது அவர்களின் பணிவுக்காக மிகச் சிறந்த உதாரணமாகும். 'நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லக்கூடிய வழிமுறையானது, அவர்களது மேலான குனத்தையும், ஒழுக்கத்தையும், பணிவையும் காட்டுகின்றது.' என இமாம் இப்னு பத்தால் (றஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், சிறுவர்களுக்கும் வாலிபர்களுக்கும் கற்றுக் கொடுப்பதில் அதிக அக்கரையுடையவர்களாகக் காணப்பட்டார்கள், ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

)كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ - أَيْ: قَارَبْنَا البُلُوغَ -، فَتَعَلَّمْنَا الإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ القُرْآنَ، ثُمَّ تَعَلَّمْنَا القُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَاناً( (رواه ابن ماجه(.

'நாங்கள் வாலிப வயதை எட்டுகின்ற காலப்பகுதிகளில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து; அல்குர்ஆனைப் படிக்கு முன் ஈமானைக் கற்றுக்கொண்டோம், பிறகு அல்குர்ஆனைக் கற்றுக்கொண்டோம்; அதன் மூலமாக எமது ஈமான் அதிகரித்தது.' (இப்னு மாஜா)

நபி (ஸல்) அவர்கள், அவர்களின் உள்ளங்களில் இஸ்லாமிய கொள்கையை விதைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்,

قال ابن عباس رضي الله عنهما: «كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْماً، فَقَالَ: يَا غُلَامُ! إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ؛ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، …» الحديثَ (رواه الترمذي(

'நான் ஒரு நாள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்து (சவாரி செய்து) கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'சிறுவனே, நான் உனக்கு சில விடயங்களைக் கற்றுத்தருகின்றேன்: நீ அல்லாஹ்வுக்குக் செய்யவேண்டிய கடமைகளைச் நிறைவேற்று, அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான், மேலும் அவனை உனக்கு முன்னால் கண்டுகொள்வாய், நீ ஏதாவது ஒன்றைக் கேட்டால் அல்லாஹ்விடமே கேள், நீ உதவிதேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு' என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

அவர்களுக்குக் கற்பிக்கின்றபோது, பலதரப்பட்ட வழிமுறைகளைக் கையாக்கூடியவர்களாக இருந்தார்கள். முஆத் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'நபி (ஸல்) அவர்கள், எனது இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு:

- நான் உன்னை விரும்புகின்றேன்.

- அல்லாஹ்வின் மீது ஆனையாக, நானும் உங்களை விரும்புகின்றேன்.

- உனது ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் ஓதுவதற்காக சில விடயங்களைக் கற்றுத்தரட்டுமா?

- ஆம்.

- اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ என்று கூறுவீராக. (புஹாரி – அல்அதபுல் முப்ரத்)

சிலவேளைகளில் அவர்களது கரங்களை அவரது இரு கரங்களுக்குமிடையில் வைக்கக்கூடியவர்களாக இருந்தார்ககள்:

)عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم - وَكَفِّي بَيْنَ كَفَّيْهِ - التَّشَهُّدَ، كَمَا يُعَلِّمُنِي السُّورَةَ مِنَ القُرْآنِ( (متفق عليه(

இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'நபி (ஸல்) அவர்கள்¸ எனது இரு கரங்களும்¸ அவர்களது இரு கரங்களுக்குமிடையே இருக்க¸ எனக்கு அல்குர்ஆனின் ஸ_ராக்களைக் கற்றுத்தருவதைப் போன்று (அத்தஹிய்யாது லில்லாஹி) தஷஹ்ஹ{தைக் கற்றுத்தந்தார்கள்' (புஹாரி, முஸ்லிம்)

சில வேளைகளில், அவர்களது புயங்களில் கையை வைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்:

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'றஸ_ல் (ஸல்) அவர்கள் எனது புயத்தைப் பிடித்தவர்களாக:

)كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ( (رواه البخاري(

(நீ, உலகில் ஒரு பரதேசியைப் போல், அல்லது ஒரு பிரயாணியைப் போல் இருப்பாயாக என்று கூறினார்கள்.' (புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்ததனால், நபியவர்களின் வாலிபத்தோழர்கள் அவர்களிடம் வந்து, (எங்களுக்குக் கற்றுத்தாருங்கள்) என்று கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள்;: 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு அல்குர்ஆனைக் கற்றுத்தாருங்கள்' என்று கூறவே, நபி (ஸல்) அவர்கள், எனது தலையைத் தடவி, 'நீ ஒரு விளக்கமுள்ள சிறுவன்' என்று கூறினார்கள். (அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் கற்பித்தலின் போது, பொறுமையைக் கடைபிடிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்: 'நபி (ஸல்) அவர்கள், எங்களுக்கு அல்குர்ஆனின் ஸ_ராக்களைக் கற்றுத்தருவதைப் போன்று, எல்லா விடயங்களிலும் இஸ்திஹாறா (நலவைத் வேண்டித் நிறைவேற்றப்படும் தொழுகையை) தொழும்படி கற்றுத்தந்தார்கள்' என ஜாபிர் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (புஹாரி)

பெரிய நபிப்தோழர்கள் இருக்க, சிறிய நபித்தோழர்களை, வாகனத்தில் அவர்களின் பின் இருக்கவைத்து ஏற்றிச் சென்றது, அவர்கள் அவர்களின் மீது கொண்ட அன்பிற்கு உதாரணமாகும். நபி (ஸல்) அவர்கள், உஸாமா (றழி) அவர்களை அரபாவிலிருந்து, முஸ்தலிபாபுக்கும், அல்பழ்ல் பின் அல்அப்பாஸ் (றழி) அவர்களை முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்கும் கூட்டிச்சென்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

இன்னும் நபி (ஸல்) அவர்கள், வணக்கத்தின் பால் அவர்களை ஆர்வமூட்டக்கூடியவர்களாக இருந்தார்கள், அப்துல்லாஹ் பின் உமர் (றழி) அவர்கள் சிறுவராக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு:

)نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ؛ فَكَانَ عَبْدُ اللَّهِ بَعْدَ ذَلِكَ لَا يَنَامُ مِنَ اللَّيْلِ إِلَّا قَلِيلاً( (متفق عليه(

'அப்துல்லாஹ் சிறந்த மனிதர், அவர் இரவில் நின்று வணங்கலாமே!' என்று கூறியதிலிருந்து, அப்துல்லாஹ் பின் உமர் (றழி) இரவில் சிறிது நேரமே உறங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள், தோழர்களை அன்பான வார்த்தைகளால் விழிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். ஹ{ரைமுல் அஸதீ (றழி) அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள்:

-نِعْمَ الرَّجُلُ أَنْتَ يَا خُرَيْمُ! لَوْلَا خَلَّتَانِ فِيكَ

ஹ{ரைமே, இரண்டு பண்புகள் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள்தான் சிறந்த மனிதர்.

- அல்லாஹ்வின் தூதரே, அவை எவை?

- إِسْبَالُكَ إِزَارَكَ، وَإِرْخَاؤُكَ شَعْرَكَ உங்கள் ஆடையை கரண்டைக்காலைவிட கீழிரக்குவதும், உங்களது முடியை அளவுக்கு அதிகமாக, வெட்டாமல் நீலமாக வளப்பதும். என்று கூறினார்கள் (அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் தோழர்களது விடயத்தில் இரக்கப்படக்கூடியவர்களாகவும், அவர்களது குடுப்பத்திகரைப் பற்றி விசாரிக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்: 'நாங்கள் வாலிபகாலத்தில் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம், அவர்களிடம் 20 இரவுகள் தங்கியிருந்தோம், எங்களுக்கு எங்களது குடும்பத்தின் ஏக்கம் வந்திருப்பதாக நினைத்த நபி (ஸல்) அவர்கள், எங்கள் குடும்பத்தில் யார் யார் இருக்கின்றனர் என்பதை விசாரிக்கவே அதைப் பற்றி நாம் அவர்களிடம் சொன்னோம், அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்,

ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَعَلِّمُوهُمْ، وَمُرُوهُمْ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي

(நீங்கள் உங்களது குடும்பத்தினரிடம் சென்று, அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள், (நல்லவற்றைச் செய்யும் படி) ஏவுங்கள், நான் தொழுததை நீங்கள் எவ்வாறு கண்டீர்களோ அவ்வாரே தொழுங்கள்) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் பின் ஹ{வைரிஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

மாமனிதரான நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் பரிகாசம் செய்து விளையாடக்கூடியவர்பளாக இருந்தார்கள்:

)عَقَلْتُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ - أَيْ: أَدْخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَاءً فِي فَمِهِ، ثُمَّ أَخْرَجَهُ عَلَى وَجْهِ الصَّبِيِّ عَلَى سَبِيلِ المُمَازَحَةِ (

'நபி (ஸல்) நீரை தனது வாயில் எடுத்து, பரிகாசமாக அதை எனது முகத்தில் உமிழ்ந்ததை நான் நினைவில் வைத்திருக்கின்றேன், அப்போது எனக்கு 5 வயதாக இருந்தது' என மஹ்மூத் பின் அர்ரபீஃ (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

அதையும் தாண்டி சிலவேளைகளளில், அவர்களது செல்லப்பிராணிகளைப் பற்றியும் விசாரிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள், அதை வைத்து அன்பாகப் புனைப்பெயர்கள் சூட்டக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் ஒன்றரக்கலந்து வாழ்பவர்களாக இருந்தார்கள், (ஒரு முறை) எனது சிறிய சகோதரனைப் பார்த்து:

يَا أَبَا عُمَيْرٍ! مَا فَعَلَ النُّغَيْرُ؟

(அபூ உமைரே, நுஹைர் என்ற பறவை உனக்கு என்ன செய்தது?) என்று கேட்டார்கள் என அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்) நபி (ஸல்) அவர்களை மனிதர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிறுவர்களுடன் பரிகாசம் செய்யக்கூடியவர்களாகவும், செல்லமாக விளையாடக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். சிறுவர்களுடன் பரிகசிக்கின்றபோது, அது உள்ளத்திலிருந்து தற்பெறுமையை இல்லாமல் செய்வதைப் போன்று, பணிவையும் ஏற்படுத்துகின்றது' என இமாம் இப்னு பத்தால் (றஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

சில வேளைகளில், அச்சிறுவர்களுக்கு உணவளிப்பதற்காக, அவர்;களது கைகளைப் பிடித்துக் கொண்டு, அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்:

)أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِي ذَاتَ يَوْمٍ إِلَى مَنْزِلِهِ، فَأَخْرَجَ إِلَيْهِ فِلَقاً - أَيْ: كِسَراً - مِنْ خُبْزٍ(

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எனது இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு, அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று, எனக்கு ஒரு துண்டு ரொட்டியைத் தந்தார்கள்' என ஜாபிர் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம்).

சிறுவர்கள் அவரது வீட்டுக்கு வந்தால், அவரது வீட்டில் நடப்பவற்றைக் கேட்பதற்கு அனுமதி வழங்கினார்கள்: 'எனது வீட்டுக் கதவின் திரை அகற்றப்பட்டிருந்தால், வார்த்தையிலான அனுமதியின்றி உள்நுழையுங்கள், நான் வீட்டினுள் நுழைவதைத் தடைசெய்யும் வரை எனது இரகசியங்களைக் கேட்க உனக்கு அனுமதியுண்டு' என நபி (ஸல்) அவர்கள் எனக்குச் சொன்னார்கள் என இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் இணைந்து சாப்பிடக்கூடியவர்களாகவும், அவர்களுக்கு உண்ணும் ஒழுங்குகளைக் கற்றுக்கொடுக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்: 'நான் நபி (ஸல்) அவர்களின் அரவணைப்பில் இருந்த போது, எனது கை ஆகாரத்தட்டில் அங்குமிங்கு அசைந்துகொண்டிருந்தது, அப்போது, நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து:

يَا غُلَامُ! سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ

(சிறுவனே, அல்லாஹ்வின் பெயரைக்கூறி, உனது வலக்கரத்தால் உண்பாயாக, உனக்குப் பக்கத்திலுள்ளதால் உண்பாயாக) என்று கூறினார்கள், என உமர் இப்னு அபீ ஸலமா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சிறிய, மற்றும் வாலிப நபித்தோழர்களின் அழைப்புக்கு விடையளிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்:

)بَعَثَنِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَدْعُوهُ إِلَى طَعَامٍ؛ فَجَاءَ مَعِي، فَلَمَّا دَنَوْتُ مِنَ المَنْزِلِ أَسْرَعْتُ، فَأَعْلَمْتُ أَبَوَيَّ، فَخَرَجَا، فَتَلَقَّيَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَرَحَّبَا بِهِ(

'எனது தந்தை என்னை, நபி (ஸல்) அவர்களிடம், அவர்களை உணவுக்காக அழைத்து வரும்படி அனுப்பிவைத்தார்கள், அவர்களும் என்னுடன் வந்தார்கள். வீடு நெருங்கியபோது, நான் விரைந்து, எனது பெற்றொருக்கு அறிவித்தேன், அவ்விருவரும் வெளியே வந்து, நபி (ஸல்) அவர்களை வரவேற்றனர்' என அப்துல்லாஹ் பின் புஸ்ர் அல்மாஸினி (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (அஹ்மத்).

நபி (ஸல்) அவர்களுக்கு, சிறிய நபித்தோழர்கள் நோய்வாய்பட்டது கேள்விப்பட்டால், அவர்களிடம் சென்று, நோய் விசாரிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்:

)أَصَابَنِي رَمَدٌ - وَهُوَ دَاءٌ يُصِيبُ العَيْنَ -؛ فَعَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم(

'எனக்குக் கண்நோய் ஏற்பட்டது, என்னை நபி (ஸல்) அவர்கள் நோய்விசாரிக்க வந்தார்கள்' என ஸைத் பின் அர்கம் (றழி) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

நபி (ஸல்) சிறிய நபித்தோழர்களின் திறமைகளை நன்கு அவதானித்து, அவர்களுக்கு, அவர்களுக்கும், சமூகத்திற்கும் பயனளிக்கும் விதத்தில் வழிகாட்டல்களை வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, 15 வயதைவிடவும் குறைவாக இருந்த, ஸைத் பின் ஸாபித் (றழி) அவர்கள் அழகாக எழுதுவதைக் கண்டு, அவரை வஹ்யை எழுதும் குழுவினருடன் இணைத்தார்கள், இன்னும் அவரிடமிருந்த விவேகத்தை அவதானிக்கவே, யூதர்கள், அவர்களின் மொழியில் எழுதி அனுப்புகின்றவற்றை மொழிமாற்றம் செய்வதற்காக, யூத மொழியைக் கற்றுக்கொள்ளும்படி கட்டளையிட்டார்கள். 'நான் அவர்களது மொழியைக் கற்றுக்கொண்டேன், 15 நாட்களுக்குள் அதில் தேர்ச்சிபெற்றேன், அவர்கள் எழுதுகின்றவற்றை நான் நபி (ஸல்) அவர்களுக்கு வாசிக்கக்கூடியவனாகவும், அவற்றுக்கு பதில் எழுதுபவனாகவும் இருந்தேன்' என ஸைத் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் சிறிய நபித்தோழர்களை, அல்குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமூட்டக் கூடியவர்களாக இருந்தார்கள்:

)خُذُوا القُرْآنَ مِنْ أَرْبَعَةٍ: مِنِ ابْنِ أُمِّ عَبْدٍ - أَيِ: ابْنِ مَسْعُودٍ -، وَمُعَاذِ بْنِ جَبَلٍ، وَأُبَيِّ بْنِ كَعْبٍ، وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ(

'அல்குர்ஆனை நால்வரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்: இப்னு மஸ்ஊத், முஆத் பின் ஜபல், உபை பின் கஃப், அபூ ஹ{தைபாவின் உரிமையிடப்பட்ட அடிமை ஸாலிம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள், சிறிய நபித் தோழர்களைப் புகழக்கூடியவர்களாகவும், அவர்களது அந்தஸ்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்:

அல்குர்ஆனை அழகான குரலில் ஓதக்கூடியவராக இருந்த சிறுவன் ஸாலிம் மவ்லா அபூ ஹ{தைபா (றழி) அவர்களின் ஓதலை செவிமடுத்த றஸ_ல் (ஸல்) அவர்கள்:

)الحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي أُمَّتِي مِثْلَ هَذَا(

'எனது சமூகத்தில், இவரைப் போன்றவர்களை உருவாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்' என்று கூறினார்கள் (இப்னு மாஜா). இன்னும் நபி (ஸல்) அவர்கள் முஆத் (றழி) அவர்களிடமிருந்த மார்க்க விளக்கத்தை கண்டபோது:

)وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ(

'அவர்கிளுள் ஹலால் ஹராம் தொடர்பான அதிக அறிவுடையவர் முஆத் பின் ஜபல் (றழி) அவர்களே' என்று கூறினார்கள். (அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள், சிறிய மற்றும் வாலிபத்தோழர்களின் மீது கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள், அவர்களுக்கு அவரிடமிருந்த அந்தஸ்தைத் தெளிவுபடுத்துவதற்காக அவர்களை அன்பாக விளிக்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்: ஸைத்; பின் ஹாரிஸா (றழி) அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்: 'அவர் எனக்கு மனிதர்களிலே மிக விருப்பத்துக்குரியவராக இருப்பின், இவர் (அவரது மகன் உஸாமா) அவரின் பின் எனக்கு மிக விருப்பத்துக்குரியவராக இருப்பார்' என்று கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்). இன்னும் நபி (ஸல்) அவர்கள், அன்ஸாரிச் சிறுவர்களும், பெண்களும் அவர்களை முன்னோக்கி வந்ததைக் கண்டபோது: 'யா அல்லாஹ், இவர்கள் எனக்கு மிக விருப்பத்துக்குரிய மனிதர்கள்' எனக் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் சிறிய நபித்தோழர்களின் மீது கொண்டிருந்த அன்பினாலும் மரியாதையினாலும், அவர்களுக்கு ஈருலக நன்மையும் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்: 'றஸ_ல் (ஸல்) அவர்கள் என்னைக் கட்டியணைத்து, :

(யா அல்லாஹ், அவருக்கு அல்குர்ஆனைக் கற்றுக்கொடுப்பாயாக) எனப் பிரார்த்தித்தார்கள்' என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி). இன்னும் அனஸ் (றழி) அவர்களுக்கு:

)اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيهِ(

'யா அல்லாஹ், இவருக்கு குழந்தைப்பாக்கியத்தையும், சொத்தையும் அதிகப்படுத்துவாயாக, அவற்றில் அவருக்கு பரக்கத்தும் செய்வாயாக' எனப் பிராரத்தித்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)

வாலிபர்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக, அவர்களுடன் அவரது சில இரகசியங்களைப் பகிரக்கூடியவர்களாக இருந்தார்கள்:

)أَسَرَّ إِلَيَّ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم سِرّاً، فَمَا أَخْبَرْتُ بِهِ أَحَداً بَعْدُ، وَلَقَدْ سَأَلَتْنِي عَنْهُ أُمُّ سُلَيْمٍ - وَهِيَ أُمُّهُ - فَمَا أَخْبَرْتُهَا بِهِ(

'நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஒர் இரகசியத்தைக் கூறினார்கள், அதை நான் எவருக்கும் அறிவிக்கவில்லை, (எனது தாயாகிய) உம்மு ஸ{லைம் (றழி) அவர்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்டும், நான் அதை அவர்களுக்குக் கூறவில்லை' என அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

வாலிபத் தோழர்களுக்கு பெரிய பொறுப்புக்களைச் சாட்டக்கூடியவர்களாக இருந்தார்கள்: அத்தாப் பின் உஸைத் (றழி) அவர்களை மக்காவிற்கு கவர்னராக நியமித்தார்கள், அவர் ஹஜ் காலத்தில் அங்கே நின்று, ஹி 8 ஆம் ஆண்டு மக்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குத் தலைமைதாங்கினார்கள், அப்போது அவரது வயது 20 தை விடவும் குறைவாக இருந்தது.

அபூ ஹ{ரைரா (றழி) அவர்களுக்குப் பிறகு ஐவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்: அனஸ் (றழி), ஜாபிர் (றழி), இப்னு அப்பாஸ் (றழி), இப்னு உமர் (றழி) மற்றும் ஆஇஷா (றழி), இவர்கள் அனைவரும் வாலிபர்களே.

சில சந்தர்பங்களில் நபி (ஸல்) அவர்கள் பெரிய விடயங்களில், சிறிய நபித்தோழர்களிடம் கருத்துக் கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள்: (ஆஇஷா (றழி) அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட நிகழ்வு நடைபெற்றபோது, நபி (ஸல்) அவர்கள், அலி (றழி) மற்றும் உஸாமா (றழி) ஆகிய இருவரின் ஆலோசனையைக் கேட்டனுப்பினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள், அவரது சபைகளிலே பெரிய நபித்தோழர்கள் இருக்க, சிறிய நபிப்தோழர்களை மிகைப்படுத்தி, அவர்களை கண்ணியப்படுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்:

றஸ_ல் (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் கொண்டுவரப்பட்டது, அவர்கள் அதிலிருந்து கொஞ்சம் அருந்தினார்கள், அவருக்கு வலப்பக்கமாக ஒரு சிறுவனும், இடப்பக்கமாகப் பெரியவர்களும் இருந்தனர், அப்போது அச்சிறுவனைப்பார்த்து:

أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلَاءِ؟

'நான் அப்பெரியவர்களுக்கு இதைக் கொடுக்க அனுமதி தருகின்றாயா?' என்று கேட்க, அதற்கு அச்சிறுவன்:

لَا وَاللَّهِ! لَا أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَداً، فَتَلَّهُ - أَيْ: وَضَعَهُ - رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي يَدِهِ

'அல்லாஹ்வின் மீது ஆனையாக, முடியாது, உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக்கூடிய ஒன்றை நான் இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்க முடியாது' என்று கூறவே, அப்பானத்தை அச்சிறுவனின் கையில் கொடுத்தார்கள். (புஹாரி, முஸ்லிம்)

வாலிபர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படும் கஷ்ட துன்பங்களைப் பெரிதுபடுத்தக்கூடியவர்களாக இருந்தார்கள்:

)كَانَ شَبَابٌ مِنَ الأَنْصَارِ سَبْعِينَ رَجُلاً يُسَمَّوْنَ القُرَّاءَ، كَانُوا يَكُونُونَ فِي المَسْجِدِ، فَبَعَثَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم جَمِيعاً؛ فَأُصِيبُوا يَوْمَ بِئْرِ مَعُونَةَ، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَتَلَتِهِمْ خَمْسَةَ عَشَرَ يَوْماً فِي صَلَاةِ الغَدَاةِ(

'அன்ஸாரிகளில் (ஓதுகின்றவர்கள்) என்று செல்லப்படக்கூடிய, 70 வாலிபர்கள் இருந்தார்கள், அவர்கள் பள்ளியில் இருக்கக்கூடியவர்களாக இருந்தார்கள், நபி (ஸல்) அவர்கள், அவர்கள் அனைவரையும் ஒரு யுத்தத்துக்காக அனுப்பிவைத்தார்கள், அவர்கள் அனைவரும் பிஃரு மஊனா யுத்தத்தில் கொலைசெய்யப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்வாலிபர்களை கொலைசெய்தவர்களுக்கு எதிராகப்; 15 நாட்கள், பஜ்ர் தொழுகையில் துஆ கேட்பவர்களாக இருந்தார்கள். (அஹ்மத், புஹாரி, முஸ்லிம்)

பொதுவாக, ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று, நபியவர்களுக்கு உறுதுனையாக இருந்தவர்களது வயது எட்டுக்கும் பதின்மூன்றுக்கும் இடைப்பட்டதாக இருந்தது, அலி (றழி), தல்ஹா (றழி) ஸ{பைர் (றழி) போன்றவர்கள் அதற்கு உதாரணமாகும்.

குறைசிக் காபிர்கள், நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து வெளியேற்றக் கங்கனம்கட்டியபோது, மதீனாவிலிருந்து, அன்ஸாரி நபித்தோழர்கள் வந்து, அகபா என்ற இடத்தில் இருமுறை உடண்படிக்கை செய்தார்கள், அவர்களில் அரைவாசிப்பேர் சிறுவர்களாக இருந்தனர்.

நபி (ஸல்) மதீனாவுக்கான ஹிஜ்ரத்துக்கு தயார்செய்துகொண்டிருக்கும் போது, அங்குள்ளவர்களுக்கு அல்குர்ஆனையும், மார்க்க விடயங்களையும் கற்றுக்கொடுப்பதற்காக முஸ்அப் பின் உமைர் (றழி) என்ற வாலிபனை மதீனாவுக்கு அனுப்பிவைத்தார்கள், அவரும் அங்கு அவரைப்போன்ற ஒரு வாலிபனாகிய அஸ்அத் பின் ஸ{ராரா (றழி) அவர்களிடம் அடைக்கலம்புகுந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரத் செய்ய முடிவெடுத்தபோது, வாலிபராக இருந்த அலி (றழி) அவர்களை, அவர்களிடம் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக தாமதித்து வரும்படி கட்டளையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியில், வாலிபர்களும் சிறுவர்களும் அவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள், அவரது நண்பனுடன் குகையில் இருந்தபோது, அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் (றழி) அவர்கள் அங்கு வந்து, மக்காவாசிகளின் செய்திகளைக் கொடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்,

)وَهُوَ غُلَامٌ شَابٌّ، ثَقِفٌ لَقِنٌ - أَيْ: فَطِنٌ سَرِيعُ الفَهْمِ (

'அவர் ஒரு விவேகமான, விiiவான புரிதலையுடைய வாலிபன்' என ஆஇஷா (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி), அதேபோன்று அஸ்மா (றழி) அவர்கள் சிறிய பெண்ணாக இருந்துகொண்டு அவ்விருவருக்கும் ஆகாரத்தையும், பானத்தையும் கொண்டு சென்று கொடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

றஸ_ல் (ஸல்) மதீனாவை வந்தடைந்தபோது, அங்கே இருந்த சிறுவர்கள் அவர்களை சந்தோசமாக வரவேற்றனர். 'சிறுவர்களும், சேவகர்களும் பாதையில் அங்குமிங்கும் நின்று கொண்டு, (முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே! முஹம்மதே! அல்லாஹ்வின் தூதரே!) என்று அழைத்தனர்' என பறா (றழி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேரிய பின், நபித்தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்; செய்தனர், அவர்கள் வாலிபர்களாக இருந்தனர், 'நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, அவர்களில் அபூ பக்ரைத் தவிர வேறு எவரது முடியும் நரைத்திருக்கவில்லை' என அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

பத்ர் யுத்தத்தின் போது, நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களை யுத்தத்துக்கு அழைக்கவே

)فَتَسَارَعَ إِلَيْهِ الشُّبَّانُ(

'வாலிபர்கள் விரைந்தனர்' என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள் (இப்னு ஹிப்பான்). ஹ{னைன் யுத்தத்தின்போது வாலிபத் தோழர்கள் ஆயுதங்களின்றி போருக்காக வெளியாகினார்;கள்.

றஸ_ல் (ஸல்) அவர்கள் மரணிக்க முன், ரோமர்களுக்கு எதிரான ஒரு பெரும் படையை ஷாம் தேசத்தில் திரட்டி, அப்படைக்குத் தலபதியாக உஸாமா பின் ஸைத் (றழி) அவர்களை நியமித்தார்கள். அப்போது அவருடைய வயது 17 ஆகும்.

நபி (ஸல்) அவர்களின் சிறுவர்களினுடனான தன்னிகரற்ற நடவடிக்கையினால், சிறுவர்கள் அவர்களை அதிகம் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்;:

நபி (ஸல்) ஒரு பிரயாணத்திலிருந்து திரும்பும்போது, அவர்களை வரவேற்பதற்காக மதீனாவை விட்டும் வெளியே செல்வார்கள்,

)خَرَجْتُ مَعَ الصِّبْيَانِ نَتَلَقَّى النَّبيَّ صلى الله عليه وسلم إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ مَقْدَمَهُ مِنْ غَزْوَةِ تَبُوكَ(

'தபூக் யுத்தத்திலிருந்து வரும் நபி (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக ஸனிய்யதுல் வதாஃ என்ற இடத்துக்கு நான் சிறுவர்களுடன் சென்றேன்' என அஸ்ஸாஇப் (றழி) அவர்கள் கூறினார்கள். (புஹாரி), இன்னும் இரவில், நபி (ஸல்) அவர்களுடன், அவரது வீட்டில் உறங்கக்கூடியவர்களாகவும் இருந்தனர்: 'நான் நபி (ஸல்) அவர்களிடம் இரவில் தங்கக்கூடியவனாக இருந்தேன், நான் அவருக்குத் தேவையானவற்றையும், வுழூ செய்வதற்கான நீரையும் கொண்டுவந்து கொடுத்த போது, 'கேளுங்கள்' என்று சொல்லவே, 'சுவனத்தில் உங்களுடன் இருக்கவேண்டும்' என்று கூறினேன்' என ரபீஅதுப்னு கஃப் அல்அஸ்லமீ (றழி) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நபியவர்களின் வீட்டில் உறங்கினால், அவர்களது தலையை நபியவர்களின் தலையனையில், அவரது தலைக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள்: இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள், ஓர் இரவு, தனது தாயின் சகோதரியான உம்முல் முஃமினீன் மய்மூனா (றழி) அவர்களிடம் தங்கினார்கள், 'நான் தலையனையின் அகலப்பக்கத்திலும், றஸ_ல் (ஸல்) அவர்களும், அவரது மனைவியும் அதன் நீளப்பக்கத்திலும் உறங்கினார்கள்' என இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)

முஸ்லிம்களே, பெரியவர்களின் பண்புகள் வளர, அவர்கள் சிறியவர்களுடன் பணிவாக நடப்பார்கள், சிறியவர்கள், தங்களுடன் நெருங்கி, கற்றுத்தருபவர்களை இயல்பாகவே நேசிக்கின்றனர், சிலவேளை அவர்களது மனனசக்தியும், விளக்கமும் பெரியவர்களையும் மிஞ்சும்.

இஸ்லாம் அவர்;களுடைய இயல்புடன் இணைந்து செல்லக்கூடிய ஒரு மார்க்கமாகும், ஆகவேதான் அவர்கள் அதையும், அதன் ஒழுங்குகளையும், சட்டங்களையும் விருப்பினார்கள், அவர்களை அவமதிப்பதும், புரக்கணிப்பதும் புத்திசாலிகளின் பண்பாக இருக்காது.

எடுத்தெறியப்பட்ட ஷைதானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்:

أعوذ باللَّه من الشيطان الرجيم

﴿لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ﴾

33:21. அல்லாஹ்வின் மீதும்இ இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்துஇ அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.


இரண்டாவது உரை

الحمد للَّهِ على إحسانه، والشُّكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلَّا اللَّهُ وحده لا شريك له تعظيماً لشأنه، وأشهد أنَّ نبيَّنا محمداً عبدُهُ ورسوله، صلَّى اللَّهُ عليه وعلى آله وأصحابه وسلَّمَ تسليماً مزيداً.

முஸ்லிம்களே, நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும், வழிகாட்டலும் மிகப்பூரணமானது, அவரது நடைமுறை மிக உயர்வானது, இன்றைய சிறார்கள் சமூகத்தின் எதிர்பார்ப்பும், அதன் தூனுமாகும், யார் சிறார்களுக்கு நலவை நாடகின்றாறோ, அவர் அவர்களுடன் பழகும்போது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றட்டும். நபி (ஸல்) சிறிய மற்றும் வாலிபத் தோழர்களின் விடயங்களில் கவனம் செலுத்தியமையினால் அறிவில் அவர்கள் ஓங்கி, சமூகத்துக்குப் பயன்கொடுத்தனர். சிறுவர்களுக்கு, அவர்களது மார்க்கவிடயங்களைக் கற்றுக்கொடுக்கக்கூடிய, நபிமார்களின் பண்புகளை காட்டிக்கொடுக்கக்கூடிய ஒர் ஆலிமை உண்டுபன்னுவது அல்லாஹ் அவர்களுக்குச் செய்த அருளாகும்; ஆகவே; அப்படியான ஒரு சூழலை ஏற்படுத்துவது பெற்றோர்களது கடமையாகும்.


[1] - அல் மஸ்ஜிதுந்நபவியில் 11 ஜுமாதல் ஆஹிரா 1443 அன்று நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ உரை

§மூலம்: கலாநிதி அப்துல் முஹ்ஸின் பின் முஹம்மத் அல்காஸிம்

§தமிழில்: கலாநிதி எம். எச். எம். அஸ்ஹர் (அதிபர்- அல் இமாம் இப்னு பாஸ் மகளிர் கல்லூரி - இலங்கை