×
இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளிலும், சட்டங்களிலும், சலுகைகளிலும் உள்ள நல்லம்சங்களும் அதன் மூலம் மனிதனுக்கு கிடைத்த நற்பயன்களும் இதில் அடங்கும்.

இஸ்லாத்திலுள்ள நல்லம்சங்கள் - பெறுமதி மிக்கதோர் சுருக்கம்

அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் பின் ஸஃதீ

மூலாசிரியர்

அபு முஆத்

மொழிபெயர்த்தவர்

ஜாசிம் இப்னு தஇயான்/ முஹம்மத் அமீன்

மீளாய்வு செய்தவர்கள்

இஸ்லாத்திலுள்ள நல்லம்சங்கள் - பெறுமதி மிக்கதோர் சுருக்கம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அவனை நாம் போற்றுகிறோம். மேலும் அவனிடமே உதவி வேண்டுகிறோம். இன்னும் அவனிடமே பிழை பொறுக்கத் தேடி அவன் பால் மீளுகிறோம்.

எமது உள்ளத்தில் தோன்றும் சகல கெடுதிகளிலிருந்தும் எமது செயல்களில் ஏற்படும் பிழைகளிலிருந்தும் அவனைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறோம்.

யாரை அவன் நேர்வழி நடத்துகின்றானோ அவனை வழிகெடுத்துவார் எவருமில்லை.

யாரை அவன் வழிகெடுத்துவானோ அவனுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் யாருமில்லை. அவன் தனித்தவன் இணையற்றவன் என்று நான் சான்று பகர்கின்றேன். நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் சான்று பகர்கின்றேன்.

நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் எனும் மார்க்கம் சகல மார்க்கங்களை விடவும் நிரப்பமானதும் சிறப்பானதுமாகும். உயர்வானதும் பெறுமதி வாய்ந்ததுமாகும். அது நல்லம்சங்களை, சம்பூரணத்துவத்தை, நலனை, அருளை, நீதத்தை, ஞானத்தை, உள்ளடக்கி இருக்கிறது. அவை அல்லாஹ்வின் பரிபூரணத் தன்மைக்கு சான்று பகர்வதோடு அவனது பரந்த அறிவுக்கும் ஞானத்துக்கும் சான்று பகர்கின்றன.

மேலும் தனது நபி அல்லாஹ்வின் தூதரென்பதை அது சான்று பகர்கின்றது. நிச்சயமாக அவர்கள் உண்மை யாளரும் உண்மைப் படுத்தப்பட்டவர்களும் ஆவர்.

ஒரு போதும் அன்னார் தன்னிச்சைப் பிரகாரம் பேசவும் மாட்டார்கள்.

إن هو إلا وحي يوحى

அவர்கள் ஓதிக் காண்பிக்கும் வசனங்கள் அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்பட்டதன்றி வேறொன்றுமில்லை. (சூரா அன் நஜ்ம் 04) இந்த சன்மார்க்கம் அல்லாஹ்வின் தனித்துவத்தையும் சம்பூரணத் தன்மையையும் எடுத்துக் கூறும் மாபெரும் சான்றாக இருப்பதோடு அவனுடைய நபி தூதோடும், உண்மையோடும் அனுப்பப்பட்டவர் என்பதையும் பரைசாற்றுகிறது.

இதன் மூலம் நான் கூற வருவது யாதெனில், மாபெரிய இந்த தீனின் நல்லம்சங் களின் மூலம் நான் அறிந்த விடயங்களை வெளிப்படுத்துவ தாகும். நிச்சயமாக இந்த தீனில் பொதிந்துள்ள சம்பூரணத்துவம், மாண்பு என்பவற்றை எடுத்துச் சொல்லும் அளவு நான் அறிவில் குறைந்தவனா வேன். எனது வார்த்தைகள் அவற்றை விபரித்துக் கூறுவதை விடவும் சுருக்கிக் கூறவேனும் இயலாமல் ஆகிவிடலாம். எதனையும் சம்பூரணமாக அடைந்து அதன் இறுதிவரை முற்று முழுதாக சென்றடைய முடியாது என்பதனால் மனிதன் தனக்குத் தெரிந்ததை விட்டுவிட வேண்டு மென்பதில்லை.

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ

ஆகவே உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் (சூரா தகாபுன் 16)

அதாவது, இதனை அறிவதில் பல பயன்கள் உள்ளன. அவை

v மிகவும் கண்ணியமான, சிறப்பான, தலைப்பாக உள்ள இவ்விடயத்தில் ஈடுபடுவது நற்கிரியைகளை சேர்ந்ததாகும். எனவே அதனை அறிவது, அதனை ஆழ்ந்து பார்ப்பதும், சிந்திப்பதும், அதனை அறிந்து கொள்ளும் வழியைக் கடைப்பிடிப்பதும், ஒரு அடியான் ஈடுபடும் காரியங்களில் சிறந்ததாகும். அதற்காக செலவிடும் நேரம் அவ்வடியானுக்கு சாதகமாக அன்றி பாதகமாக அமைய மாட்டாது.

v ஒரு அடியான் அல்லாஹ்வின் அருட் கொடை களை அறிவதும், அதனை பிரஸ்தாபிப்பதும், அல்லாஹ்வும் ரசூலும் இட்ட கட்டளைகளைச் சேர்ந்தாகும். அது பெரிய நல்லமல்களையும் சேர்ந்ததாகும். அதிலே ஆராய்ந்து பார்ப்பதும், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதும், அதைப் பற்றி பேசுவதும், சிந்திப்பதும் ஒரு அடியானுக்கு அல்லாஹ் வழங்கிய சிறந்த அருட்கொடை களைச் சேர்ந்ததாகும். அதுவே புனித தீனுல் இஸ்லாமாகும். அதை விடுத்து வேறெதையும் அல்லாஹ் அங்கீகரிப்பதுமில்லை. எனவே அதைப் பற்றி பேசுவது, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அருட்கொடைகளை அதிகரிக்கச் செய்வதற்கு வேண்டுதல் விடுப்பதுமாக அமைந்துவிடும்.

v நிச்சயமாக மனிதர்கள் ஈமானுடைய விடயத்தில் அதன் பரிபூரணத் தன்மை யிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு கொண்டவர்கள் ஆவர். இந்த மார்க்கத்தை ஓர் அடியான் நன்கு அறிந்து கொள்வதும், அதனை மிகவும் கண்ணியப் படுத்துவதும், அதை வைத்து மகிழ்ச்சியும் மனத் திருப்தியும் காணும் போதெல்லாம் அவன் பரிபூரண ஈமானை பெற்றவனாகிறான். ஈமானில் சரியான உறுதியை அடைந்தவனா கிறான். அது ஈமானின் சகல மூலங்களுக்கும் அடித்தளங்களுக்கும் ஆதாரமாகும்.

v இஸ்லாம் கூறும் நல்லம்சங்களை எடுத்து விளக்குவதானது தீனுல் இஸ்லாத்தின் பால் விடுக்கப்படும் மிகப்பெரிய அழைப்பாகும். அதனை புத்தியுள்ள, இயற்கை சுபாவமுள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வர்.

v இந்த தீனின் சத்தியத் தூதை விளக்கி அடியாருக்குள்ள நலன்களை எடுத்துக் கூறி இந்த தீனின் பால் அழைப்பு விடுக்க யாரேனும் ஈடுபடுவார்களாயின் அடியானை அவன் பக்கம் இழுத்தெடுக்க அதுவே நிரப்பமானதும், போதுமானதுமாகும். தனக்கேற்ற ஈருலக நலன்களையும் காண்பதனாலும் வெளிரங்க, உள்ரங்க சகல நலன்களையும் கண்டு சந்தேகங்களுக்கு இடையூராகாமலும், மாற்றுச் சமயங்களில் குறை காணாமல் இருப்பதற்கும் மேற் சொன்ன விடயங்கள் போதுமானதாகும். நிச்சயமாக அது அதற்கு மாற்றமான அனைத்து ஐயங்களையும் தட்டிவிடுகிறது. ஏனெனில் அது தெளிவான விளக்கத்தைக் கொண்டது. உறுதியின் பால் கொண்டு சேர்க்கும் ஆதாரங்களைக் கொண்டது. ஆதலால் இந்த தீனின் சில உண்மைகள் எடுத்துக் கூறப்படு மாயின் அதனை ஏற்றுக் கொள்வதும், மற்றவை களை விட அது மேலோங்கி நிற்கவும் மாபெரும் காரணியாக அது அமைந்து விடும்.

v நிச்சயமாக இஸ்லாம் கூறும் நல்லம்சங்கள் சகல விடயங்களிலும், ஆதாரங்களிலும், அடிப்படை களிலும், அதன் பிரிவுகளிலும், சன்மார்க்க அறிவு சட்டங்கள், பூலோக சமூக கல்வி என்பவற்றில் பொதுவானவை ஆகும். இங்கு அதன் நோக்கம் அனைத்தையும் உள்ளடக்கு வதோ ஒவ்வொன்றினையும் உற்று நோக்குவதோ அல்ல. அவ்வாறு செய்வது விரிவாகிவிடும். இங்கு நோக்கம் யாதெனில் மற்றவைகளை விட ஆதாரம் கொள்ளப் படுவதற்கு பயனுள்ள உதாரணங்களை கூறுவதாகும். உள்ளே நுழைய நாடுவோருக்கு வாயலைத் திறந்து கொடுப்பதுமாகும். அவை மூலாதாரங்களிலும், பிரிவுகளிலும், வணக்கங்க ளிலும், கொடுக்கல் வாங்கல்களிலும், பரந்து காணப்படும் உதாரணங்களாகும். எமக்கு நேர்வழி காட்டி கற்றுத் தரவேண்டும் என்ற ஆவலோடு எமது நிலைமைகளை சீர் செய்யும் அவன் கொடைகளின் பொக்கிஷங்களை எமக்கு திறந்து கொடுத்து, எமது சொல்லும் செயலும் சீராக அமைய அவனைக் கொண்டு உதவி வேண்டுகிறோம்.

உதாரணம் - 01

புனித தீனுல் இஸ்லாம் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஈமானின் அடிப்படைகளின் மீது கட்டியெழுக்கப்பட்டுள்ளது.

وْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَه مُسْلِمُوْنَ‏

(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப் பட்டதை யும், மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் கொடுக்கப் பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டதையும் நம்புகிறோம். அவர்களில் நின்றும் ஒருவருக்கிடை யேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம். இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக. (சூரா பகரா 136)

v இந்த மாபெரிய அடிப்படைகள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு இட்ட கட்டளையாகும். இவ்வடிப்படைகளின் மீது சகல நபிமார்களும், தூதர்களும் ஒன்றித்தனர். விசுவாசத்தினதும், அறிவினதும் நிரப்பமானவற்றை அவை உள்ளடக்கியுள்ளன. அல்லாஹ் தன் தூதர்கள் மூலம் தன்னை வர்ணித்து கூறிய அனைத்தைக் கொண்டும் விசுவாசிப்பது முதல் அவனின் திருப்தியின் வழியில் முயற்சி செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.

v இது ஒரு சன்மார்க்கமாகும். அதன் அடிப்படை அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசிப்பதாகும். அதன் பயன் அல்லாஹ்வின் திருப்தியையும், அன்பையும் ஈட்டித் தரும் வழியில் முயற்சிப்பதாகும். மேலும் அவனுக்கென்று சகலதையும் தூய்மையோடு செய்வதுமாகும். இதனை விடவும் சிறந்த அழகான நல்லதொரு மார்க்கத்தை கற்பனையும் செய்து பார்க்க முடியுமா?

v இது நபிமார்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட அனைத்தையும் விசுவாசிக்கு மாறும் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப் படுத்து மாறும், அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த தூதை ஏற்றுக் கொள்ளுமாறும், அவர்கள் மத்தியில் பிரித்துப் பார்க்கலாகாது என்றும், அந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் உண்மையான தூதுவர்கள் என்றும், தூய்மையான நம்பிக்கையாளர்கள் என்றும், அவர்கள் மீது எந்தவொரு குற்றங் குறையும் ஏற்படுவது அசாத்தியமானதென்றும் விசுவாசங் கொள்ளுமாறும் கட்டளையிட்ட மார்க்கமாகும்.

v அது எல்லாவித சத்தியத்தையும் கட்டளையிடு கிறது. சகல உண்மையையும் ஏற்றுக் கொள்கிறது. அல்லாஹ்வின் தூதர்களுக்கு வஹீயோடு தொடர்பு பட்ட சன்மார்க்க உண்மைகளை உறுதிப்படுத்துகிறது. பயனுள்ள இயற்கையான, அறிவு ரீதியான உண்மைக ளோடு ஒத்துச் செல்கின்றது. எந்த வகையிலும் ஒரு உண்மையை அது தட்டிவிடுவதும் இல்லை. எந்தவொரு பொய்யையும் உண்மைப் படுத்து வதும் இல்லை. அதிலே அசத்தியம் கலந்து விடுவதுமில்லை. ஏனைய மார்க்கங்கள் அனைத்திற்கு மேலாலும் மிகைத்து நிற்கக் கூடியதாகும்.

v இந்த மார்க்கம் நற்கருமங்களை கட்டளையி டுகிறது. மேலும் நற்பண்பு களையும் அடியாரின் நலன்களையும் ஏவுகிறது. நன்மை செய்தல், இரக்கங் காட்டுதல், தர்மம் செய்தல், நேர்மையோடு நடத்தல் என்பவற்றை தூண்டுகிறது. அநியாயம், அடக்கியாளுதல், தீய குணங்கள் என்பவற்றை தடுக்கிறது. நபிமார் களும், இறைத் தூதர்களும் ஏற்று நிறுவிய எந்தவொரு நிரப்பமான நற்குணத்தையும் அங்கீகரிக்காது விடவுமில்லை. ஷரீஅத் அழைப்பு விடுத்த இம்மை, மறுமை பயனுள்ள விடயத்தை தூண்டாமல் விடவுமில்லை. எந்தவொரு கெட்டதையும் தடுக்காமலும் அதனை ஒதுங்கி நடக்குமாறு கட்டளை யிடாமலும் விடவில்லை.

v அதாவது நிச்சயமாக இந்த தீனின் கொள்கை கள் தான் உள்ளங்களை தூய்மைப்படுத்து கின்றன. ஆத்மாவை சீர் செய்கின்றன. நற்குணங் களையும் நற்செயல்களையும் ஆழமாகப் பதிய வைக்கின்றன.

உதாரணம் - 02

ஈமானுக்கு அடுத்துள்ள இஸ்லாத்தின் மாபெரிய கடமைகள் தொழுகையை நிலைநாட்டல், ஸகாத்தை நிறைவேற்றல், நோன்பு நோற்றல், சங்கை மிகுந்த அல்லாஹ்வின் இல்லமாம் கஃபா சென்று ஹஜ் செய்தல்.

இம்மாபெரிய கடமைகளையும் அதன் பெறுமதி களின் அருமைகளையும் அவதானித்துப் பார். மேலும், அல்லாஹ்வின் திருப்தியில் முயற்சி எடுக்கவும் இம்மை மறுமை நன்மைகளை ஈட்டிக் கொள்ளவும் அது தூண்டுவதையும் பார்.

v தொழுகையில் அல்லாஹ்வுக்கென்ற தூய்மையையும் பரிபூர்ணமாக அவனை நோக்கி நிற்பதையும் அவனைப் போற்றி பிரார்த்தித்து அவனுக்கு அடங்கி நிற்பதையும் சிந்தித்துப் பார். நிச்சயமாக நீர் அவதானித்தால் அது ஈமான் எனும் மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதைப் போல் இருக்கிறது. தினந்தோறும் தொழுகை மீண்டும் மீண்டும் வருவதென்பது இல்லையெனில் ஈமான் எனும் மரம் காய்ந்து அதனுடைய கிளைகளும், வாடி வதங்கிப் விடும். ஆனால் தொழுகை எனும் வழிப்பாட்டின் மூலம் அது புத்துணர்வுப் பெற்று வளர்ச்சியடைகிறது.

v தொழுகையின் போது அல்லாஹ்வை நினைவுப் படுத்துவது என்ற அம்சம் பொதிந்திருப்பதைப் பார். அது அனைத்துப் பொருட்களை விடவும் பெரியது. தீமையில் இருந்தும் வெறுக்கத்தக்க காரியங்களிலிருந்தும் அது தடுக்கிறது.

v ஸகாத்தில் காணப்படும் தத்துவத்தை ஊன்றிக் கவனி. அது உள்ளடக்கி யிருக்கும் தயாள குணத்தை கடைப்பிடிக்க வேண்டுமென்ற குணத்தையும், வாரி வழங்குதல் என்ற குணத்தையும், கஞ்சத்தனத்தை விட்டும் தூரப்பட்டிருக்க வேண்டுமென்பதையும் அது உள்ளடக்கியிருக்கிறது. தனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதும், கண்ணுக்கு புலப்படுவதும் புலப்படாததுமான விதத்தில் பொருட்களை பாதுகாப்பதும், தேவையுள்ளோருக்கு உதவி புரிந்து அவர்களை தேற்றுவதும், அவசியமான விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வதுமான விஷயங்கள் நிறையவே உள்ளன.

v எனவே, நிச்சயமாக ஸகாத் கொடுப்பதன் மூலம் தேவையுள்ள தரித்திரர்களின் தேவையை நிறைவேற்றுவதும், முஸ்லிம்களுக்கும் தேவையான பொதுநலன்களுக்கும், ஜிஹாதுக்கும், உதவி புரிவதும் இருக்கிறது. வறுமையின் கொடூரத்தை ஏழைகளிலிருந்து நீக்குவதும் உள்ளடங்கி இருக்கிறது. கொடுப்பவனுக்கு அல்லாஹ் மேலதிகமாக வழங்குவான் என்ற நம்பிக்கையும் கொடுப்பதற் குரிய கூலியை எதிர்பார்ப்பதிலும் அல்லாஹ்வின் வாக்கை உண்மைப்படுத்துவது என்பன ஸகாத் கொடுப்பதில் தங்கியுள்ளது.

v நோன்பு பிடித்தலில் மனிதன் தன் மனதுக்கு விருப்பமானதை விடுவதில் ஆத்ம பயிற்சி இருக்கிறது. அவ்வாறு அவன் விடுவதானது அல்லாஹ்வின் அன்பின் காரணமாக அவனை அடைய வேண்டுமென்ற ஆசையின் காரணமாக மனதை பொறுமை, உறுதி என்பதன் மீது பக்குவப்படுத்தி பழகிக் கொள்வதற்குமாகும்.

v அதிலே இஃலாஸின் காரணிகளை சக்தி பெறச் செய்யும் அம்சங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. மன ஆசைகளை விடவும் அல்லாஹ்வின் அன்பை உறுதிப்படுத்தும் அம்சமும் காணப்படுகிறது. அதனால் தான் நோன்பென்பது அல்லாஹ்வுக்கென்று அமைந்துள்ளது. அதனை அவன் ஏனைய சகல கருமங்களை விடவும் தனக்கென்றே சொந்தமாக்கி வைத்துள்ளான்.

v ஹஜ்ஜைப் பார். அதிலே செல்வத்தை செலவிடுவதும், சிரமங்களை தாங்கிக் கொள்வதும், கஷ்டங்களையும் ஆபத்துக்களையும் எதிர்கொள்வதும் இருக்கின்றன. அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் திருப்தியை நாடியதற்காகும். மேலும் அல்லாஹ்வின் விருந்தினராகச் சென்றதனால் ஆகும். அவனுடைய வீட்டையும் அதனைச் சூழவும் சுற்றிவருவதும், அதற்கேயாகும். அப்புனித இடங்களில் பல்வேறு பட்ட வணக்கங்களை நிறைவேற்றுவதானது அல்லாஹ் தன் அடியார்களுக்கும் தன் வீட்டை நாடி வந்த விருந்தினர்களுக்கும் அல்லாஹ் விரித்து கொடுத்துள்ள உணவு தட்டுக்களாகும்.

v அதிலே உள்ளடங்கியுள்ள கண்ணியப் படுத்தலும் அல்லாஹ்வுக்கென்ற பரிபூரண பணிவும் நபிமார்கள் ரசூல்மார்களுடைய நிலைமைகளை சிந்திப்பதும், தூய்மையோடு வாழ்ந்தவர்கள், பரிசுத்தவான்கள் ஆகியோரைப் பற்றி நினைவுப்படுத்துவதும், அவர்களைக் கொண்டு ஈமானை உறுதிப்படுத்திக் கொள்வதும் அவர்களது அன்பில் உறுதிமிக்க தொடர்பு அமைந்து விடுவதையும் ஹஜ்ஜின் போது உணர முடிகிறது.

v மேலும் முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்வதும், அவர்கள் எல்லோரையும் ஒரே வார்த்தையில் ஒன்று சேர்ப்பதும், அவர்களது சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையில் ஒன்று படுவதும் காணப்படுகிறது. நிச்சயமாக இது இந்த தீன் கூறும் நல்லம்சங்களில் மிகவும் மிக உன்னதமான தாகும். முஃமின்களுக்கு கிடைக்கப்பெறும் பயன் பாடுகளில் மிகவும் உயர்வானதாகும்.

உதாரணம் 03

எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தை தூண்டியுள்ளதும் இஸ்லாம் கூறும் நல்லம்சங்களை சேர்ந்ததாகும். மேலும் பிரிந்து வாழ்வதும், முரண்பட்டுக் கொள்வது பற்றியும் எச்சரித்து தடுத்துள்ளதானது இஸ்லாம் கூறிய நல்லம்சங்களை சேர்ந்ததாகும். இந்த மாபெரிய அடிப்படைகளின் மீது அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்பவற்றில் நிறையவே ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இவ்விடயத்தின் பயன்களை அறியும் சிற்றறிவு உள்ள ஒவ்வொருவரும் இவ்விடயத்தின் நற்பயனை அறியவே செய்வர். மேலும் அதன் மூலம் கிடைக்கும் இம்மை, மறுமை நலன்களையும் புரிந்துக் கொள்வர். அதற்கு மாறாக உள்ள கெடுதிகள் தீங்குகள் என்பவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வது பற்றியும் தெரிந்துக் கொள்வர். சத்தியத்தின் மீது நிலைபெற்ற சத்திதான் இதன் அடிப்படை என்பது மறைவான ஒன்றல்ல.

ஆரம்ப கால முஸ்லிம்கள் இஸ்லாத்தை நிலைநாட்டிக் கொண்டதும், தம் நிலைமைகளை சீர் திருத்திக் கொண்டதும், யாரும் அடையாத கண்ணியத்தை அடைந்துக் கொண்டதும் எவ்வாறிருந்தது என்பது அறியப்பட்ட விடயமாகும். அவர்கள் இந்த அடிப்படையை கடைப்பிடித்து வாழ்ந்தனர். சத்தியத்தில் நிலைத்து நின்றனர். தம் மார்க்கத்தின் ஆத்மா இதுதான் என்பதை உறுதியோடு நம்பி வாழந்தனர். அதுவே நம் மூதாதையோர் சன்மார்க்கத்தில் நிலையோடு நிற்க காரணமாயிருந்தது.

உதாரணம் 04

நிச்சயமாக தீனுல் இஸ்லாம் அன்பு, அருள், உபகாரம் என்பவற்றை உள்ளடக்கிய மார்க்கமாகும். மேலும் அது மனிதருக்கு பயனுள்ளதை செய்யுமாறு தூண்டிய ஒரு மார்க்கமுமாகும். இந்த தீன் குறிப்பிடும் இரக்க சிந்தை, அழகிய தொடர்பாடல், உதவி செய்ய தூண்டல் என்பனவும் அவற்றுக்கு மாறாக உள்ளவற்றை தடுப்பதும் ஆகிய அவையே அநியாயம், அட்டகாசம், கெட்ட தொடர்பாடல், தடுக்கப்பட்டவற்றை சிதறச் செய்தல் ஆகியவையின் மத்தியில் அந்த தீனை ஒளியாகவும் பிரகாசமாகவும் ஆக்கிவிட்டன.

மேலும், இவற்றை அறியு முன் இஸ்லாத்தின் பரம விரோதியாக இருந்தோரின் உள்ளத்தை இஸ்லாத்தின் நிழலிலே நிழல் பெறும் வண்ணம் இழுத்து வந்தது. மேலும் அதுவே அவர்களது குடும்பத்தவர்களோடும் தொடர்புபடுத்தி பரிவு காட்ட வைத்தது. எதுவரையென்றால் இரக்கம், மன்னிப்பு, உபகாரம் என்பன அவர்களின் உள்ளங்களிலும், சொற்களிலும், செயல்களிலும் இருந்து வெளிவந்தன. அது அவர்களது எதிரிகள் வரை சென்றடைந்து அவர்களை தம் நேசர்களாக ஆக்கிவிடுமளவு அமைந்து விட்டது. அவர்களிற் சிலர் தெளிவோடும் மன உறுதியோடும் இந்த தீனிலே நுழைந்து விட்டனர். அவர்களில் மற்றும் சிலர் அதற்கு பணிந்து தாம் இருந்த மார்க்கத்தின் சட்டத்தை விடவும் இஸ்லாத்தின் சட்டங்களின் சிறப்பையும் அதில் காணப்பட்ட நேர்மைக்கும் இரக்கத்துக்குமாக விரும்பி ஏற்றுக் கொண்டனர்.

உதாரணம் - 05

தீனுல் இஸ்லாம் என்பது அறிவு பூர்வமான, இயற்கைப் பண்பு கொண்ட, சிந்தனா ரீதியான, சீர்திருத்தத்திற்கான, வெற்றிக்கான மார்க்கமாகும். இந்த மூலாதாரம் அதனைத் தெளிவுப்படுத்துகிறது. அது உள்ளடக்கி யுள்ளவை இயற்கையும், புத்தியும் ஏற்றுக் கொள்ளும் அடிப்படை களினதும், பிரிவுகளின தும் சட்டங்களும், மேலும் அந்த சட்டங்களிலுள்ள சத்தியத்திற்கும், உண்மைக்கும் பணிந்து கொடுக்கும் தன்மையும் இதனை விளக்குகின்றது.

அதனுடைய அழகிய ஒழுங்கு முறையும், அவை எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் பொருத்தமாக அமைந்திருப்பதும் மேற்கண்ட உண்மையை எடுத்துக் காட்டுகிறது. எனவே, அது கூறும் அனைத்தும் சத்தியமும் உண்மையுமாகும். அதற்கு முன்னர் வந்த அல்லது பின்னர் வந்த எந்தவொரு அறிவும் அதில் குறை காணவோ அதை பொய்ப் படுத்தவோ முடியாது. அவ்வாறு எதுவும் வரவும் இல்லை. அவ்வாறு செய்வதும் அசாத்தியமானது. உண்மையான அறிவு என்பது, அது எல்லாவற்றையும் உறுதி செய்து உண்மைப் படுத்துகிறது. அதன் உண்மைத் தன்மைக்கு இது மாபெரிய அத்தாட்சியாகும்.

நேர்மையோடு அதனை உறுதிப்படுத்தும் அனைவரும் பின்வருமாறு உண்மைப் படுத்தியுள்ளனர். அதாவது பயனுள்ள சன்மார்க்க அல்லது உலகாயத அல்லது அரசியல் அறிவு கொண்ட விடயங்களை சந்தேகமற அல்குர்ஆன் அறிவித்துள்ளதென திட்டமாக கூறுகின்றனர். எனவே, இஸ்லாம் மார்க்கத்தில் புத்திக்குப் புலப்படாத எதுவும் இல்லை. அதன் நலன்களையும், பயன்களையும், உண்மையையும் தூய்மையான புத்திகள் சான்று பகர்கின்றன. அவ்வாறே அது கூறும் கட்டளைகள், விலக்கல்கள் அனைத்தும் நேர்மையானதும் அநியாய மில்லாததுமாகும். அது இட்ட கட்டளைகள் எந்தவொன்றும் தூய்மையானதாக, நலவானதாக அன்றி அல்லது அதை விடவும் மிகைத்ததாக அன்றி வேறில்லை. மேலும், முற்றிலும் கெடுதியானதை அல்லது நன்மையை விட தீமையை அதிகரிக்கக் கூடியதை அது தடுக்காமலும் விடவில்லை. இந்த அடிப்படைகளை வைத்து அதன் சட்டங்களை சிந்திக்கும் போதெல்லாம் அறிவுடையோனின் விசுவாசம் அதிகரித்துவிடும். மேலும், அது ஞானம் பொருந்தியவனும் புகழுக்குரியவனுமானவனிடமிருந்து இறக்கப் பட்டதென்பதையும் அறிந்து கொள்வான்.

உதாரணம் - 06

ஜிஹாத் பற்றி வந்துள்ளவையும், நல்லன பற்றிய கட்டளையும், தீயனவற்றை தடுப்பதும்;

v நிச்சயமாக ஜிஹாத் என்பதன் நோக்கம் இந்த சன்மார்க்கத்தை எதிர்த்து நிற்போரை தடுப்பதும் அவர்களின் பிழையான அழைப்பை மறுப்பதும் ஆகும்.

v அது ஜிஹாத் எனும் அறப்போராட்டத்தின் வகைகளில் மிகச் சிறந்த ஒன்றாகும். அதன் மூலம் பேராசையோ அல்லது சுய நோக்கங்களோ நாடப்படுவதில்லை. இவ்வடிப்படைக்கான ஆதாரங்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னாரது தோழர்களும் தம் எதிரிகளோடு நடந்து கொண்ட முறைகளையும் ஊன்றிக் கவனிக்கும் எவரும் நிச்சயமாக ஜிஹாத் மிகவும் இன்றியமையாதனவற்றைச் சேர்ந்தது என்றும், எதிர்த்து நிற்போரின் அளவு மீறலை விட்டும் தற்காத்துக் கொள்வதுமாகும் என்பதை அறிந்து கொள்வான்.

v அவ்வாறேதான் நன்மையை ஏவுவதும் தீயவற்றை தடுப்பதும் அமைந்து இருக்கின்றது. இந்த தீனை பின்பற்றுவோர் அதன் அடிப்படைகளின் மீதும் அதன் சட்டங்களின் மீதும் நேர்மையாக செயல்படாதவரை இந்த மார்க்கம் நிலைத்திராது. அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு வழிபடுவதுதான் சீர்திருத்தத்தின் குறிக்கோளாகும். அவன் விலக்கல்களை விட்டும் ஒதுங்காதிருப்பதுதான் கெடுதியும், பெரும் அட்டகாசமுமாகும். எனவே இந்த மார்க்கத்தை உடையோர் அதன் அடிப்படைகளையும் சட்டங்களையும் அதன் கட்டளைகளுக்கேற்ப நடப்பதுமே சீர்திருத்தத்தின் குறிக்கோளாகும். மேலும், பாவங்கள் சிலவற்றை செய்வதற்குத் துணியும் அநியாயமான அவர்களது உள்ளங்கள் சிலருக்கு அலங்காரமாக காட்டாமல் இருப்பதற்காகவும், செய்வதற்கு சக்தி இருந்தும் சில கடமைகளில் கவனயீனமாக இருப்பதற்காக வேண்டியுமே நன்மையை ஏவுதல், தீயனவற்றை தடுத்தல் என்பன இருக்கிறது. மேற் சொன்ன விடயங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதன் மூலமின்றி நிரப்பமாக மாட்டாது. இது இந்த தீனின் அழகிய நல்லம்சங்களைச் சேர்ந்ததாகும். அது நிலைத்து நிற்க அத்தியவசியமான விஷயங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதிலே வளைந்து செல்வோரை சீர் திருத்தவும், பிழையானவற்றிலிருந்து தடுக்கவும் நல்லன செய்ய தூண்டவும் உள்ள விடயங்கள் அடங்கும்.

v அவர்கள் அந்த மார்க்கத்தை கடைப் பிடித்து, அதன் சட்டங்களின் உள் நுழைந்து, அதனை சட்டமாக ஏற்று நடக்க கடமைப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை சுதந்திரமாக விட்டு விடுவதானது மாபெரிய அநியாயமும், அவர்களுக்கும் சமூகத்துக்கும் தீங்கு இழைப்பதாகவும் விசேஷமாக சன்மார்க்க ரீதியாக, அறிவு ரீதியாக, சம்பிரதாய ரீதியாக கடமையான வற்றை செய்வதிலும் தீங்கு பயக்கக்கூடியதாகவும் அமைந்து விடும்.

உதாரணம் - 07

ஷரீஅத் அனுமதித்துள்ள வியாபாரம், குத்தகை, பங்கு வியாபாரம், பண்டமாற்றுக் கடன் மற்றும் பயன்பாடுகளில் சம்பந்தப்படுதல் என்பன

v இவ்வகையான கொடுக்கல் வாங்கல்களை எமது பரிபூரணமான ஷரீஅத் ஹலாலாக்கித் தந்திருக்கிறது. மேற்குறித்த விடயங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளன. அடியார்களின் தேவைகளையும், தேற்றங்களையும் நிரப்பமாக்கி வைக்க கூடியவைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அடியார்களின் சகல கடமைகளும் நிலைமைகளும் சீராகி அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பரிபூரணமான சன்மார்க்கம் வந்திருக்கிறது.

v இவற்றை ஹலால் என்று கூறுவதற்கு சன்மார்க்கம் சில நிபந்தனைகளை இட்டுள்ளது. அவையாவன, இரு தரப்பினர்களதும் பொருத்தம், செய்யப்படும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் (பொருள்) பற்றிய அறிவு, எது சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யப்படுகிறதோ அது பற்றிய அறிவு, உடன்படிக்கை செய்யப்படும் விடயம், நிபந்தனைகளைத் தொடர்ந்து ஏற்படக் கூடியவை பற்றிய அறிவு என்பனவாகும். சூது, வட்டி, பொருள் விபரமின்மை போன்ற அநியாயமும் தீங்கும் உள்ள அனைத்தையும் ஷரீஅத் தடுத்துள்ளது. இஸ்லாம் அனுமதித்துள்ள கொடுக்கல் வாங்கல்களை பற்றி சிந்திக்கும் ஒருவர் அதில் சன்மார்க்கத்துக்கும், வாழ்க்கைக்கும் இணங்கியதான தொடர்புகளை கண்டுகொள்வார். மேலும், அல்லாஹ் தன் அடியாருக்கு அனுமதித்துள்ள ஆகாரம், பாணம், உழைப்பு போன்ற நல்லன யாவும் ஒழுங்குப் படுத்தப்பட்ட பயன்பாட்டு வழிமுறைகளையும் கண்டு அல்லாஹ் விசாலமான அருட்கொடையாளன், நிரப்பமான ஞானம் பொருந்தியவன் என சான்று பகர்வான்.

உதாரணம் 08

ஷரீஅத் அனுமதித்த நல்ல ஆகாரங்கள், பாணங்கள், ஆடைகள், திருமணங்கள் என்பன

v பயனுள்ள நல்லன யாவற்றையும் ஷரீஅத் அனுமதித்துள்ளது. அவை தானியங்கள், கனி வர்க்கங்கள், கடல் வாழ் பிராணிகளின் இறைச்சிகள், தரை வாழும் பிராணிகள் என்பனவாகும். இவற்றில் சன்மார்க்கத்துக்கும், புத்திக்கும், உடம்புக்கும், செல்வத்துக்கும் தீங்கிழைக்கக் கூடியவற்றையன்றி வேறு எதனையும் ஷரீஆ தடுக்கவில்லை.

v அவன் அனுமதித்தவை அல்லாஹ்வின் பேரருளையும், இந்த தீனின் நல்ல அம்சங்களையும் சேர்ந்ததாகும். மேலும் அவன் தடுத்தவையும் அவ்வாறே அவனுடைய பேரருளின் காரணமாகும். அவர்களுக்கு தீங்கிழைப்பனவற்றை தடுத்ததும் அவனது உபகாரமேயாகும். மேலும் அது இந்த தீனின் நல்லம்சங்களைச் சேர்ந்ததுமாகும். நிச்சயமாக நல்லன சீர்திருத்தத்தையும், தத்துவத்தையும் தொடர்ந்து வருவதோடு தீங்கையும் கவனித்திற்கொள்கிறது.

v அவ்வாறே அவன் அனுமதித்த திருமணமும் இருக்கிறது. ஒரு அடியானுக்கு தான் விரும்பியவாறு பெண்களில் இருவரை அல்லது மூவரை அல்லது நால்வரை மணம் புரிந்துக் கொள்ள முடியும். அவ்வாறு செய்வதில் இரு பாலாரதும் நலவுகள் உள்ளடங்கி இருப்பது போலவே இரு சாராருக்கு பாதிப்பானவைகளும் தடுக்கப் படுகின்றன. ஓர் அடியான் ஏக காலத்தில் நான்கு பேரை விட அதிகமான, சுதந்திரவானான பெண்களை மணமுடிப்பது அனுமதிக்கப் படவில்லை. அதன் மூலம் அநியாயம் செய்வதும், நியாயம் தவறுவதும் ஏற்பட்டு விடுகின்றது. அதே நேரம் அநியாயத்தை பயப்படும் சந்தர்ப்பத்திலும், இல்லற வரம்புகளை நிலை நிறுத்த முடியாதென பயந்த போதும் ஒரு பெண்ணோடு மாத்திரம் சுருக்கி கொள்ளுமாறு தூண்டியுள்ளது. அதன் மூலம் திருமணத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும் என்பதனாலும் இவ்வாறு கட்டளையிட்டிருக்கிறது.

v திருமணம் என்பது மனிதனுக்கு அத்தியவசியமான அல்லாஹ்வின் பேரருளைச் சேர்ந்ததாகும். தலாக் எனும் விவாக விடுதலையும் அவ்வாறே தன்னோடு ஒத்து வாழாத, பொருத்தமற்றவனோடு வாழ்வதற்கு பயப்படும் போது அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒத்து வராத வாழ்க்கையில் நெருக்கடியோடு, கஷ்டத்தோடு இருப்பதனை முன்னிட்டு அந்த அனுமதி உள்ளது.

وَاِنْ يَّتَفَرَّقَا يُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِه

(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்து விட்டால் அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட் கொடையால் (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். (சூரா நிஸா 130)

உதாரணம் - 09

அல்லாஹ்வும் ரசூலும் தன் அடியாருக்கென்று விதித்துள்ள உரிமைகளில் நன்மையும், பயன்களும், உபகாரமும், நீதியும், நேர்மையும், அநியாயத்தை விட்டு நீங்குதலும் உள்ளன.

இவை ஷரீஅத் கடமைப் படுத்தி விதித்துள்ள பின்வரும் உதாரணங்களைப் போன்றதாகும். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், அயலவர், தோழர், தான் சகவாசம் செய்வோர், கணவன், மனைவி ஆகிய ஒவ்வொருவருக்கும் என்று சில கடமைகளை ஷரீஅத் விதித்துள்ளது. அது இந்த ஷரீஅத்தில் காணப்படும் நல்லம்சங்களை சேர்ந்ததாகும்.

இவையணைத்து உரிமைகளும் இன்றியமையாதனவையும், நிரப்பமானது மாகும். அவற்றை இயற்கையும், தெளிந்த அறிவும், நல்லதாகவே கருதுகிறது. அவை ஒவ்வொன்றும் கலந்து விடுவதால் சம்பூரணத்துவம் பெறுகிறது. பயன்பாடுகளும், நன்மைகளும் பரிமாறப்படுகின்றன. அது ஒவ்வொரு உரிமைக்கும் உரியவரது தரத்துக்கும் ஏற்ப நிகழ்ந்துவிடுகிறது.

நீ இவற்றைக் கவனித்தால் அதிலே நன்மைகள் இருப்பதையும் தீமைகள் நீங்கிச் செல்வதையும் கண்டு கொள்வாய். மேலும் அதிலே தனிப்பட்ட, பொதுவான நன்மைகளையும் காண்பாய். அன்னியோன்மைத் தன்மையையும், சகவாழ்வின் சம்பூரணத்துவத்தையும் கண்ணுருவாய். அவை உனக்கு இந்த ஷரீஅத் ஈருலக வாழ்வின் ஈடேற்றத்துக்கும் பொறுப்பானவை என்பதையும் சான்று பகரக் கூடியதாய் இருக்கும்.

இவ்வுரிமைகளில் சில காலத்தோடும், இடத்தோடும், நிலைமைகளோடும், சம்பிரதாயத்தோடும் தொடர்கின்றன. அப்பொழுது நீர் அவற்றை நற்பயன்களை ஈட்டித் தரக்கூடியதாகவும் சன்மார்க்க விவகாரங்களிலும் உலக விவகாரங்களிலும் பரஸ்பர ஒத்துழைப்பை பெற்றுத் தரக்கூடிய தாகவும் உள்ளங்களைக் கவர்ந்து பகைமை, குரோதம் என்பவற்றை நீக்கக் கூடியதாகவும் கண்டுக் கொள்வீர்.

இந்த வார்த்தைகள் அனுபவத்தின் மூலமும் அவற்றுக்குரிய இடங்களை அவதானித்து வருவதன் மூலமும் அறிந்து கொள்ளப்பட முடியும்.

உதாரணம் - 10

மரணத்திற்குப் பின் செல்வங்கள், அனந்தரச் சொத்துக்கள் என்பன பிரிந்து செல்வதும், அனந்தரர்களுக்கு அப்பொருளை பங்கீடு செய்யும் முறையும், அதன் தத்துவம் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا

இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். (சூரா நிஸா 11)

அல்லாஹ் தான் அறிந்துள்ள வண்ணம் நெருங்கிய பயன்பாடு உள்ளது எது, ஓர் அடியான் தனக்குச் சேர வேண்டியதென எதிர்பார்க்கும் செல்வம் எது, தனது பணிவிடைக்கும் உபகாரத்திற்கும் ஏற்றமானது எது, என்பதை தெளிந்த புத்திகள் சாட்சி பகரும் வண்ணம் ஒழுங்கு முறையாக வைத்துத் தந்துள்ளான். அவ்வாறன்றி மனித சிந்தனைக்கும், அவர்களுடைய ஆசைக்கும், நோக்கத்திற்கும் என்று விட்டு வைத்திருந்தால் அதனால் குளறுபடிகளும் ஒழுங்கின்மையும் குழப்பமும் ஏற்பட்டு விடும்.

அல்லாஹ் அடியார்களுக்கு நன்மையையும், இறையச்சத்தையும் கருதி அவர்களுக்கு மறுமையில் பயன்படும் வண்ணம் நல்வழியில் தன் செல்வத்திலிருந்து சிலதை வஸிய்யத் செய்யும் முறையையும் அமைத்து தந்துள்ளான். வாரிசுகள் அல்லாதோருக்கு தம் செல்வத்தில் மூன்றில் ஒரு பாகத்தை விடக் குறைந்ததை வஸிய்யத் செய்யலாமென வரையறுத்துள்ளான். அவ்வாறு செய்வதன் மூலம் செல்வமுள்ளவர்கள் இவ்வுலகில் இருந்து பிரிந்து செல்லும் போது மனிதனின் நலனுக்காக வைத்துள்ளவற்றை குறுகிய சிந்தனையும், மார்க்கப் பற்று குறைவாகவும் இருப்பவர்கள் தமது மனோஇச்சைக்கு அடிமையாகி, விளையாட்டிலும் வீண்விரயத்திலும் அவற்றை அழித்து விடுவதை தடுப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு அமைத்து தந்துள்ளான். ஆகையால் இந்த மார்க்கம் மனிதனின் மரணத்தின் பின்சீர்கெடாமல் இருப்பதற்கும் இறைவனால் இது வரையறுக்கப் பட்டுள்ளது.

உதாரணம் - 11

இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்கள் அக்குற்றங்களுக்கு ஏற்ப அமைந்தனவாகும்.

v ஏனெனில் குற்றங்கள் அல்லாஹ்வின் உரிமைகளையும், அடியார்களின் உரிமைகளையும், மீறுவதோடு சகல ஒழுங்குகளையும் சிதறடையச் செய்யும் மாபெரும் அநியாயமாகும். அதன் மூலம் மார்க்கமும் உலக வாழ்வும் குழம்பி விடுகின்றன. அதனால் தான் அல்லாஹ் குற்றங்களுக்கும், வண்முறை செயல்களுக்கும் அவற்றில் மக்கள் ஈடுபடாது தடுப்பதற்காக வரையறை விதித்துள்ளான். மேலும் அதனுடைய தீங்குகளை குறைக்கும் வண்ணம் குற்றவாளிக்கு மரண தண்டனை, கைவெட்டுதல், கசையடி அடித்தல், எச்சரிக்கை செய்தல் என்பன மூலம் குற்றச் செயல்கள் குறைக்கப்படுகின்றன.

v இவையனைத்திலும் காணப்படும் விடயங்களை புத்தியுடையோர் யாரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித்த, பொதுவான பயன்கள் ஷரீஅத் கூறும் சட்டங்களில் உள்ளன. நிச்சயமாக தீமைகளை எதிர் கொள்ளவோ சம்பூரணமாக தடுக்கவோ செய்வதானது ஷரீஆ விதித்துள்ள தண்டனைகளாலன்றி முடியவே முடியாது. அதனை அல்லாஹ் குற்றங்களுக்கேற்ப அவை கூடுதல், குறைதல், வன்மைத் தன்மை குறைவு என்பவற்றை அவதானித்து விதித்துள்ளான்.

உதாரணம் - 12

தனக்கோ பிறருக்கோ தீங்கிழைக்கும் வண்ணம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு ஷரீஅத் விடுத்துள்ள தடை.

அதாவது பைத்தியக்காரன், சிறுவன், பேடி போன்றோருக்கும் கடனை செலுத்த வேண்டியவன் கடனாளியாகி மேலும் சங்கடத்துக்குள்ளாகாமல் இருக்கவும் தடை விதித்ததைப் போன்றாகும்.

v இவையனைத்தும் ஷரீஅத் விதித்துள்ள நல்லம்சங்களைச் சேர்ந்தவை. அடிப்படையில் தன் பொருளை சுயேட்சையாக பயன்படுத்தும் அதிகாரம் பெற்ற மனிதனை அவனது பிழையான கையாளுகைக்காக ஷரீஅத் இவ்வாறு தடுத்துள்ளது. அவ்வாறு தடுத்ததானது அதன் பயன்பாட்டை விடவும் தீங்குகள் அதிகமாக இருப்பதனாலும், நலவை விட கெடுதிகள் அதிகமாக இருப்பதனாலும் ஆகும். மேலும், பொது நன்மை கருதி பணத்தைக் கையாளுவதை ஷரீஅத் அவனுக்கு தடுத்துள்ளது. மேலும் அடியான் தனக்கு பயனுள்ளவை செயற்பட வேண்டுமென்று ஆசையில் அவனுக்கு தீமையானவைகள் ஏற்படக் கூடாதெனவும் வழிகாட்டவே அவ்வாறு தடை விதித்துள்ளது.

உதாரணம் - 13

ஆவணப்படுத்தலை (documentation) ஷரீஅத் விதித்துள்ளதன் மூலம் உரித்தாளிகள் அதனைப் பயன்படுத்தல்.

v அதாவது, ஒவ்வொருவரும் தம் உரிமைகளை அடைந்துக் கொள்ளும் வண்ணம் சாட்சியம் பதிவு செய்யப்படுவது போன்றதாகும். அவ்வாறு செய்வதன் மூலம் யாரும் தமதுசெயலை மறுப்பதை அது தடுக்கும். மேலும் அதன் மூலம் சந்தேகமும் நீங்கிவிடும். ஈடு, உத்தரவாதம், பொறுப்பு என்பன பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் போது ஆவணங்களின் மூலம், உரித்தானவர் தனக்குரியதை பெற்றுக் கொள்ள மீளும் இடமே ஆவணங்களாகும்.

v இதிலுள்ள பல்வேறு பயன்கள் மறைவான ஒன்றல்ல. அதிலே உரிமைகள் பேணப்படுவதும், கொடுக்கல் வாங்கல்கள் விரிவாக்கப்பட்டதும், நீதி நியாயத்தின் பக்கம் செல்வதும், நிலைமைகளை சீர் செய்வதும், கொடுக்கல் வாங்கல்களை நிறைபெறச் செய்வதும் அடங்கியுள்ளன.

v எனவே ஆவணங்கள் இல்லையெனில் கொடுக்கல் வாங்கல்களிலுள்ள பெரும் பகுதி செயலற்றுப் போயிருக்கும். நிச்சயமாக ஆவணங்கள் ஆவணப்படுத்துவோருக்கு பயனுள்ளதாகவும், யார் மீது உரிமைகள் உள்ளனவோ அவர் பல்வேறு வழியிலும் அவற்றை அடைந்து கொள்ள பயனுள்ளதாகவும் அமையும்.

உதாரணம் - 14

உபகாரம் புரிதலும் இஸ்லாம் கூறும் நல்லம்சங்களைச் சேர்ந்ததாகும். உபகாரம் செய்யுமாறு தூண்டிய அல்லாஹ் செய்தவருக்கு அல்லாஹ்விடம் நற்கூலியை ஈட்டிக் கொள்ளவும், அடியார்களிடம் நலவை அடைந்து கொள்ளவும் தூண்டியுள்ளான். பின்னர், அவனது உபகாரம் செல்வமாகவோ, அதற்குப் பகரமாகவோ அவனுக்கு மீண்டு விடுகிறது. இவ்வாறான உழைப்பு அதனை செய்பவருக்கு எந்தத் தீங்குமின்றி கிடைக்கும் சிறந்த உழைப்பாகும். உதாரணமாக கடன் கொடுத்தல், இரவல் கொடுத்தல் போன்றனவாகும்.

நிச்சயமாக அவ்வாறு செய்வது பல்வேறு பொது நலன்களைச் சேர்ந்ததாகும். தேவைகளை நிறைவேற்றுதல், கஷ்டங்களை நீக்குதல், நன்மையை அடைதல் போன்றன அதன் மூலம் நிறைவேறுகின்றன. இவை எண்ணற்ற நலன்களை உள்ளடக்கியதாகும்.

மேற்கூறியவற்றை செய்தவரின் செல்வம் அவரிடம் மீண்டு விடுகிறது. தன் இறைவனிடமிருந்து நிறைந்த கூலியை பெற்றுக் கொண்டவராகிறார். தன் சகோதரன் உள்ளத்தில் தன்னை பற்றிய அழகான நல்லுணர்வை விதைத்துக் கொண்டவராகிறார். இதன் மூலம் நன்மையும், அபிவிருத்தியும், பரந்த மனமும், நெருங்கிய உறவும், அன்பும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. பிரதிபலன் எதிர்பாராது முழுமனதுடன் கொடுக்கும் கலப்பற்ற உபகாரம் அவனுக்கு என்றென்றும் நன்மை பயக்கும். அதற்குரிய நற்பேறுகள் பற்றியும் அதன் தத்துவங்கள் பற்றியும் ஸகாத், சதகா உதாரணங்களில் விரிவாகக் கூறப்பட்டன.

உதாரணம் - 15

பிரச்சினைகளை நீக்கிக் கொள்ள, சண்டை சச்சரவுகளை தீர்த்துக் கொள்ள, பிரச்சினைப் பட்டவர்கள் மத்தியில் தீர்ப்பு வழங்க ஷரீஅத் அமைத்துத் தந்துள்ள அடிப்படை ஒழுங்குகள்;

v நிச்சயமாக அவை நீதி, ஆதாரங்கள் என்பன மீதும் சம்பிரதாயம், இயற்கை உடன்பாடு என்பன மீதும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. எந்தவொரு உரிமையை வேண்டி நிற்கும் ஒவ்வொருவர் மீதும் ஆதாரத்தை நிறுவுவதை ஷரீஆ கடமைப்படுத்தி இருக்கிறது. தன் வாதத்திற்குரிய ஆதாரத்தை கொண்டு வருவதன் மூலம் அவரது வாதம் உறுதிப்பட்டு மேலோங்கி கவனிக்கப்படும். அவன் வாதிட்டது உரித்தாகும். ஒருவன் வாதாட்டம் தவிர வேறொன்றையும் முன்வைக்கவில்லையோ, அப்போது பிரதிவாதி, வாதிட்டவரின் கூற்று பிழை என்பதைக் கூறி சத்தியம் பண்ணுவான். வாதிக்கு எந்தவொன்றும் வழங்கப்பட மாட்டாது.

v ஆதாரங்களை ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏற்ப ஷரீஅத் விதித்துள்ளது. மனிதர்கள் மத்தியிலுள்ள நடைமுறை சம்பிரதாயத்தை ஆதாரங்களில் ஒன்றாக அமைத்தும் உள்ளது.

v எனவே, ஆதாரம் என்பது சத்தியத்தை விளக்கி அதனை எடுத்துக் காட்டும் ஒவ்வொன்றையும் குறிக்கிறது.

v சந்தேகத்திற்கிடமான போது, இருவரது வாதங்களும் சமமாக இருக்கும் பொழுது, அப்பிரச்சினைகளையும் பிணக்குகளையும் நீக்குவதற்கான வழியையும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் பொருத்தமானதும், நீதியானதும், சமாதானமானதுமான வழியையும் ஷரீஅத் அமைத்து தந்துள்ளது.

v எந்தவொரு வழியில் அநியாயம் இல்லையோ, அல்லாஹ்வுக்குப் எதிராக பாவம் செய்வதில் அடியாரை சம்பந்தப்படுத்தவில்லையோ மாட்டாதோ அதனைக் கொண்டு பிரச்சினைகளை தீர்க்கவும் சச்சரவுகளை களையவும் தூண்டியிருக்கிறான். அதுவே அவர்களுக்கு பயனுள்ளதுமாகும். இந்த விடயத்தில் அனைத்து உரிமைகளிலும் பலவான், பலவீனன், மன்னன், குடிமகன் என்றில்லாமல் எல்லோரையும் சமப்படுத்தியுள்ளான். அநியாயமின்றி நேரிய வழியில் செல்வதையும் வைத்து வாதிப்பதை பற்றி திருப்திப்பட்டுமுள்ளான்.

உதாரணம் 16

ஷரீஅத் கூறும் ஷூரா முறை

முஃமீன்கள் தம் ஈருலக விவகாரங்களிலும் உள்ளக, வெளி விவகாரங்களிலும் ஷூரா செய்வர் என்பது பற்றி பாராட்டு.

v இம்மாபெரும் அடிப்படை மிகச் சிறந்ததென அறிவுடையோர் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர். நிலைமைகளை சீர் செய்ய தனித்துவமான காரணி என போற்றியும் உள்ளனர். நேரிய வழியை கடைப்பிடிக்கவும், சரியானதைப் பெற்றுக் கொள்ளவும், நோக்கத்தை அடைந்துக் கொள்ளவும் உள்ள சிறந்த ஊடகமென அனைவரும் ஏகோபித்தனர்.

v சகல நன்மைகளையும், பயன்களையும் ஈட்டிக் கொள்ள விளையும் சமூகத்தவர்களுக்கு இது ஒரு உயர்ந்த அம்சமாகும். அதன் மூலம் மனிதர் மத்தியில் அறிமுகம் அதிகரிக்கிறது. சிந்தனை விரிந்து விடுகிறது. அதன் காரணமாக இதன் இன்றியமையாமையும் அதன் அளவும் புரிந்துக் கொள்ளப்படுகிறது.

v இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்கள் தமது சன்மார்க்க, உலக விவகாரங்களில் இவ்வடிப்படையை அமுல்படுத்திய போது அவை சீராக அமைந்தன. மேலும் நிலைமைகள் முன்னேற்றத்திலும் அதிகரிக்கவும் செய்தன. முஸ்லிம்கள் எப்போது இந்த அடிப்படைகளிலிருந்து திசை திரும்பினரோ அன்றிலிருந்து தம் சன்மார்க்க விடயங்களிலும் உலக விவகாரங்களிலும் வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டே இருக்கின்றனர். இப்பொழுது நாம் காணும் சமகால நிலைமை வரை அது வந்தடைந்துள்ளது. ஷூரா எனும் இவ்வடிப்படையில் தம் சன்மார்க்கத்தையும் மற்றவைகளையும் பற்றியும் மீள்பரிசீலனை செய்வார்களாயின் வெற்றியடைவர். ஜெயம் பெறுவர்.

உதாரணம் - 17

இந்த ஷரீஅத் கொண்டு வந்த சன்மார்க்கம், உலக விவகாரங்களை சீர்திருத்தலும், மனித ஆன்மாவையும் உடம்பையும் சீர்திருத்தலும்

v இந்த அடிப்படை அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் அதிகமாக கூறப் பட்டுள்ளது. அல்லாஹ்வும் கட்டளையிட்டுள்ளான். இவ்விவகாரங் களை நிலைநிறுத்துமாறு றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தூண்டுகிறான். அவை ஒவ்வொன்றும் மற்றவைக்கு துணையாக உள்ளது.

v அல்லாஹ் தன்னை வணங்குவதற்காவும் அவனுக்குரிய உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகவும் மனிதர்களைப் படைத்தான். மேலும் அவர்களுக்குரிய ஆகாரங்களையும் சொரிந்து வைத்தான். ஆகாரங்களை அடைந்துக் கொள்ளும் வழிமுறைகளை பல்வகைப்படுத்தினான். வாழும் வழிகளையும் அவ்வாறே அமைத்தான். அதன் மூலம் அவர்களது உள், வெளி விவகாரங்கள் நிலைபெற வேண்டும் என்பதற்காகவும், தன்னை வணங்க துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவுமே ஆகும்.

v ஆத்மாவுக்கு மாத்திரம் உணவளித்து உடம்பை கவனிக்காமல் விட அவன் கட்டளையிடவில்லை. அவ்வாறே உலக இன்பங்களில் மூழ்குவதை விட்டும் தடுத்து, உள்ளத்தையும் ஆன்மாவையும் மாத்திரம் உறுதிபெறச் செய்ய வேண்டும் என்று அவன் கட்டளையிடவும் இல்லை. இது பின்வரும் மற்றுமொரு அடிப்படையில் தெளிவாகப் பார்க்கலாம்.

உதாரணம் - 18

நிச்சயமாக ஷரீஅத் அறிவு, மார்க்கம், அதிகாரம், சட்டம் என்பவற்றை ஒன்றோடொன்று பிணைத்து துணையாக வைத்துள்ளது.

எனவே, அறிவும், மார்க்கமும் ஆட்சியை உறுதி படுத்துகிறது. அதன் மீதே சட்டமும் அதிகாரமும் கட்டியெழுப்பப்படுகிறது. அதிகாரங்கள் அனைத்தும் அறிவு ஞானம் என்பவற்றால் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. அதுவே நேரான வழி. சீர் திருத்தம், வெற்றி, ஈடேற்றம் ஆகியவற்றின் வழியும் அதுவே.

எனவே, மார்க்கமும் அதிகாரமும் ஒன்றோடொன்று இணைந்து பக்கபலமாக இருக்கின்ற போது கருமங்கள் அனைத்தும் சீராகின்றன. நிலைமைகள் அனைத்தும் நிலைத்து நிற்கின்றன. அவை ஒவ்வொன்றும் எப்போது பிரிக்கப்படுமோ சகல ஒழுங்குகளும் சீர் குழைந்துவிடும். சீர்திருத்தமும் சகல நலனும் இழந்துவிடும், பிரிவினை ஏற்பட்டு உள்ளங்கள் தூரப்பட்டுவிடும். மனித காரியங்கள் அனைத்தும் வீழ்ச்சியுற ஆரம்பித்துவிடும்.

இதனை பின்வரும் விடயம் உறுதி செய்கிறது. நிச்சயமாக அறிவுகள் எவ்வளவு பல்வகைப்பட்ட அபிவிருத்தியடைந்தாலும், கண்டுபிடிப்புகள் எவ்வளவு பெரிதாகவும் அதிகமாகவும் காணப் பட்டாலும், அவை ஒன்றும் குர்ஆன் அறிவித்தவற்றிற்கு முரணாகவோ காணப்படவில்லை. மேலும், ஷரீஅத் கொண்டு வந்ததற்கு முரணாகவும் வரவில்லை.

எனவே ஷரீஅத் அறிவுக்குப் படாத எந்தவொன்றையும் கொண்டு வரவில்லை. மாறாக, நல்லறிவு சான்று பகர்கின்றவற்றையே கொண்டு வந்துள்ளது. அல்லது அறிவு சென்றடையாத விடயங்களை சுருக்கமாகவோ விரிவாகவோ கூறாமலும் இல்லை.

மற்றுமோர் உதாரணம் கீழே தரப்படுகிறது. அதாவது

உதாரணம் - 19

நிச்சயமாக சன்மார்க்கம், புத்தி ஏற்காததையோ சரியான அறிவுக்கு முரணானவையோ கொண்டு வரவில்லை.

இது அல்லாஹ்விடமுள்ள அனைத்து அறிவும் திட்டமிடப்பட்டதும், நிலையானதும் எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் பொருத்தமானது என்பதை அறிவிக்கும் அத்தாட்சிகளில் மாபெரிய ஒன்றாகும்.

v இந்த சுருக்கமான வார்த்தைகள் உலகில் நிகழும் அனைத்து விடயங்களிலும், சமூகவியல் நிகழ்வுகளிலும் கவனித்து, சிந்தித்து, அனுபவித்து விரிவாக அறியப்படுகிறது. அதன் பரீட்சாத்தமாவது ஷரீஆ கொண்டு வந்ததற்கேற்ப சரியான உண்மையாயிருப்பின், ஷரீஅத் அனைத்துக்கும் தெளிவாக வந்த ஒன்றென அறியப்படுவதாகும். மேலும் அது எந்தவொரு சிறியதையோ பெரியதையோ கணக்கெடுக்காமல் விட்டு செல்லாது என்பதையும் அறிவதாகும்.

உதாரணம் - 20

v வழமைக்கு மாறாக இஸ்லாம் அடைந்த பரந்து விரிந்த வெற்றிகள் பற்றிய சுருக்கமான ஒரு அவதானம். எதிரிகளின் எல்லா திட்ங்களுக்கும் சதிகளுக்கும் மத்தியில் இந்த தீன் கண்ணியமாய் நிலைத்திருப்பதும், மிக உறுதியோடு அவர்களை முகங் கொள்வதும் அவர்களே அதனை ஏற்றுக் கொள்வதும் என்பன பற்றிய ஒரு கண்ணோட்டம்.

அதாவது இந்த தீனின் ஆரம்பத்தை அவதானிக்கும் எவரும் அது எவ்வாறு அரேபியத் தீபகற்பத்திலே பிரிந்திருந்த உள்ளங்களை, கடுமையான பகையையும் விரோதத்தையும் கொண்டிருந்தோரை இணைத்து விட்டது, அண்மையில் உள்ளவனையும் தூரத்தில் உள்ளவனையும் எவ்வாறு ஒன்று சேர்த்து அவர்களது பகைமைகளை நீக்கி அவர்களது உள்ளங்களில் ஈமானிய சகோதரத்துவத்தை எப்படி ஏற்படுத்திவிட்டது என்பதையும் அறிந்து கொள்வர்.

v பின்னர் அவர்கள் இப்புவியில் பரந்து சென்று ஒவ்வொரு பிரதேசமாக வெற்றிக் கொண்டதையும் அதிலும் முதன்மையாக பாரசீக, ரோம் தேசத்தினரை வெற்றிக் கொண்டதையும் அவை இரண்டும் வல்லமை பொருந்தியவையாக இருந்த நிலையில், படைபலமும் ஆயுத பலமும் இருந்த நிலையில் எவ்வாறு அவர்களையும் அதற்கப்பால் உள்ளவர்களையும் வெற்றி கொண்டதையும் புரிந்து கொள்வர். தமது தீனின் சிறப்பின் மூலமும் ஈமானின் உறுதி மூலமும், அல்லாஹ் கொடுத்த உதவி, துணையின் மூலம் இஸ்லாம் இப்புவியில் கிழக்கையும் மேற்கையும் சென்றடைந்தது என்பதை அறிவர்.

v இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாக கணக்கெடுக்கப்படுவதாகும். அவனுடைய தீனின் ஆதாரங்களில் ஒன்றாகவும், அவனுடைய நபியின் அற்புதங்களில் ஒன்றாகவும் கணக்கெடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த தீனிலே மனிதர்கள் தெளிவோடும் நிம்மதியோடும் எவருடைய வற்புறுத்தலோ தூண்டலோ இன்றி கூட்டம் கூட்டமாக இதிலே நுழைந்தனர்.

v இவ்விடயத்தை பொதுவாக யாரேனும் அவதானித்தால் நிச்சயமாக இதுவே சத்தியம் என்பதையும், எந்த சக்தியும் அதனை அசத்தியமாக்க முடியாது என்பதையும் அறிந்து கொள்வர்.

v இது தெளிந்த புத்தியோடு நியாயமாகப் பார்ப்பவன் சந்தேகங் கொள்ளாத ஒன்றாகும். மேலும் அத்தியவசியமானதுமாகும். இக்காலத்தில் உள்ள எழுத்தாளர்களில் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு துணையாக கூறுவதற்கு மாற்றமாக மேற்சொன்ன விடயத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அவ்வெதிரிகள் பின்வருமாறு கூறுகின்றார்கள். இஸ்லாம் பரவியதும் அது அடைந்த வெற்றிகளும் வெறுமனே பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்தனவாகும் என்று தம் பிழையான கூற்றுக்கள் மூலம் விமர்சித்து உள்ளனர். பாரசீக, ரோம நாட்டின் சக்திகள் குன்றியமையும். அரபுகளுடன் பொருளாதார வளம் கூடியமையும் இந்த விமர்சனமாகும்.

v இது வெறுமனே செய்யப்பட்ட கற்பனையாகும். அது பிழையென்பதை நிரூபிக்க அவர்கள் கூற்றே போதுமாகும்.

v அக்காலத்தில் இருந்த அரசாங்கங்களில் எந்தவொரு சிறிய அரசாங்கத்தையும் எதிர்த்து நிற்கும் எந்த சக்தி அரபிகளிடம் காணப்பட்டது? பெரிய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதை விட்டும் வல்லமை பொருந்திய எண்ணிக்கையிலும், படையிலும் வல்லமை பொருந்திய நாடுகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்வதை விடவும் எந்தவொரு சிறிய நாட்டை எதிர்கொள்ளும் சக்தி அரபிகளிடம் காணப்பட்டன? அவ்வாறு ஒன்றுமே இருக்க வில்லை. எல்லா ஆட்சிகளையும் துவம்சமாக்கி அதனை அடக்கியாண்ட மன்னர்களின் சட்டங்களின் இடத்தில் குர்ஆனிய சட்டமும் நேரிய மார்க்கமும் இடம்பெற்றுக் கொண்டது. சத்தியத்தை நாடும் ஒவ்வொரு நியாயவானும் அதனை அங்கீகரித்து பெற்றுக் கொண்டனர்.

v எனவே, இவ்வாறு பரந்து விரிந்து வந்த வெற்றியை வெறுமனே பொருளாதார வல்லமை மூலம் அரேபியர் மிகைத்து வெற்றி கொண்டனர் என விமர்சனம் கூறலாமா? நிச்சயமாக புனித தீனுல் இஸ்லாத்திலே குற்றங் குறை காண விழைவோர் அல்லது சத்தியத்தை அறியாத எதிரிகளின் பேச்சால் கவரப்பட்டோரே இவ்வாறு கூறுவர்.

v எல்லாவித இன்னல்கள் தொடர்ந்த போதும், எதிரிகள் இந்த சத்திய தீனை மழுங்கடிக்கவும், அழித்து விடவும் தொடராக செய்து வரும் முயற்சிகளின் மத்தியிலும் கூட இந்த தீன் நிலைத்து நிற்பதானது இந்த தீன் அல்லாஹ்வின் சத்திய தீன் என்பதை எடுத்துக் காட்டும் அத்தாட்சியாகும். போதிய வல்லமையும் சக்தியும் துணை புரியுமாயின் எதிரிகளின் பகைமையையும், அட்டகாசம் புரிவோரின் அட்டகாசத்தையும் தடுத்து நிறுத்தி இப்புவியில் வேறெந்த ஒரு தீனும் நிலைத்து நிற்க மாட்டாது.

v எந்த வற்புறுத்தலோ, பலாத்காரமோ இன்றி சகலரும் இதனை ஏற்றுக் கொள்வர். ஏனெனில் இதுவே சத்திய சன்மார்க்கமாகும். இது இயற்கை மார்க்கமாகும். இது சீர்திருத்தத்தினதும் நலன்களினதும் மார்க்கமாகும். என்றாலும் இதனை உடையோரின் அசமந்தமும், பலயீனமும், பிரிவும், அவர்களை எதிரிகள் நெருக்கடிக்குள்ளாக்கு வதுமே இந்த தீனின் நடையை நிறுத்தியுள்ளது. அல்லாஹ்வின் உதவியின்றி தீயவற்றிலிருந்து திரும்பவோ நல்லவற்றைப் பெறும் சக்தியோ இல்லவே இல்லை.

உதாரணம் - 21

முன் சென்ற அனைத்தினதும் உள்ளடக்கம்;

v புனித தீனுல் இஸ்லாம் பயனுள்ள சரியான கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப் பட்டதாகும். அறிவையும் ஆன்மாவையும் பக்குவப்படுத்தும் நற்குணங்கள் மீது நிறுவப்பட்டதாகும். சகல காலங்களுக்கும் பொருத்தமான காரியங்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்டதாகும். அடிப்படைகளிலும் பிரிவுகளிலும் ஆதாரங்களோடு எழுப்பப்பட்டதாகும்.

v சிலை வணக்கத்தையும், படைப்புகள் மீது ஆதரவு வைத்திருப்பதையும் உதறித் தள்ளி, உலகைப் படைத்துப் போஷிக்கும் அல்லாஹ் மீதே தூய நம்பிக்கையோடிருக்க தூண்டும் ஒன்றுமாகும். மேலும், சிந்தனையைத் தடுமாறச் செய்யவும் புத்திக்கும், புலனுக்கும் முரண்பட்டதாகவும் உள்ள கற்பனைகளையும், யூகங்களையும் எடுத்தெறிகிறது. அதன் மூலம் பொதுவான நன்மைகள் ஏற்படவும், சகல தீய விடயங்களை தவிர்க்கவும், சகல வழிகளிலும் அநியாயத்தை தடுக்கவும், நீதியை நிலைநாட்டவும், சீறான கொள்கையை தூண்டுதல், நல்வழியின் பூரணத்துவத்தை அடைதல் போன்றவை மீது அது நிறுவப்பட்டுள்ளது.

v இவ்வாசகங்களை விபரிப்பதாயிருந்தால் அது நீண்டு விடும். இது ஐயமின்றி விரிவாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள ஓரளவு அறிவுள்ளவருக்கும் உதவியாக இருக்குமென நம்புகிறேன். இத்தோடு இந்த சிறிய விடயங்களை சுருக்கி கொள்கிறோம். இது பல அடிப்படைகளையும் மூலாதாரங்களையும் கூறுவன் மூலம் இஸ்லாம் சம்பூரணத்துவம் வாய்ந்தது, கண்ணியம் பொருந்தியது, அனைத்துக்கும் உண்மையான சீர்திருத்தத்தை ஆக்கித் தர வல்லது என்பதை இதிலிருந்து புரிகிறது.

v அல்லாஹ்வின் நல்லருளைக் கொண்டே இதனை முடிக்கின்றேன்.