ரமழான் எதிர்பார்ப்பது என்ன?
பிரிவுகள்
Full Description
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் (தக்வா) உடைய வர்களாக திகழ்வதற்காக உங்களுக்கு முன்பிருந்த வர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்ட வாரே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:183)
நோன்பின் பிரதானமான நோக்கத்தை இந்த வசனம் தெளிவாக குறிப்பிடுகின்றது.
அதாவது முஸ்லிம் மக்களை பக்குவப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக அல்லாஹ்வை பயந்து நடக்கக் கூடியவர்களாக மாற்றுவதே நோன்பின் பிரதான நோக்கமாகும். இதைத் தான் தக்வா என அரபியில் சொல்கிறோம்.
உமர்(ரலி) அவர்கள் உபை இப்னு கஃப் (ரலி) அவர்களிடம் தக்வா என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் முற்கள் உள்ள பாதையில் போகும் போது எப்படி போவீர்கள் என்று கேட்டார்கள். என் ஆடைகள் முற்களில் படாமல் தூக்கி சேர்த்துக் கொண்டு செல்வேன் என்று உமர் (ரலி) கூறினார். அதுதான் தக்வா என உபை(ரலி) அவர்கள் கூறினார் கள். (நூல:தப்ஸீர் இப்னு கஸீர்)
பாதையில் நடக்கும் போது, மேனியில் முற்கள் குத்தப்பட்டு விடக் கூடாது மேனி புண்பட்டு விடக் கூடாது என்பதற்காக அந்த முற்களிலி ருந்து ஒதுங்கி வேகமாக போவது போல் தீமைகளிலிருந்து ஒதுங்கி நன்மைகளின் பால் விரைந்து செல்வதே தக்வாவாகும்.
மழை காலத்தில் நடக்கும் போது சகதிகள் மேனியிலும் ஆடைகளிலும் பட்டுவிடாமல் பாதங்களை கவனமாக வைத்து ஒவ்வொரு எட்டாக நடப்பது போல் பாவங்களிலிருந்து நன்மையின்பால் எட்டிச் செல்வதே தக்வாவாகும்.
ரமழான் 30 நாட்களைக் கொண்ட ஒரு பயிற்ச்சிப் பாசரையாக தரப்பட்டிருக்கிறது. வாழ்வினை பன்படுத்தி நன்னடத்தையுள்ள வர்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இந் நோக்கத்தை அடையும் பொருட்டே அல்குர்ஆன் வழிகாட்டியாக தரப்பட்டி ருக்கிறது.
இது தவிர காலையிலிருந்து மாலைவரை பசித்திருக்கச் செய்து தாகித்திருந்து செய்து நேரத்தைப் போக்குவது நோன்பின் நோக்க மல்ல. மனிதன் எந்தளவு பசியையும் தாகத்தையும் கட்டுப்படுத்துகிறான் என்பதை பரிசோதிப்பதும் நோன்பின் நோக்கமல்ல.
சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை சாப்பிடக்கூடாது, பருகக்கூடாது, மனைவி யிடம் உறவு கொள்ளக்கூடாது போன்ற ஆகுமாக்கப்பட்ட பல காரியங்கள் தடுக்கப் படுகின்றன. தனக்கு உரிமையான இக் காரியங்களை அல்லாஹ்வுக்காக விட்டு விட்டு தியாகம் செய்ய முன்வருபவன் அடுத்த வனுடைய சொத்துக்களை அபகரிக்க மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், மானக் கேடான, பாவமான காரியங்களில், ஈடுபட மாட்டான். மோசடி செய்ய துணிய மாட்டான். இத்தகைய பயிற்சியை வழங்குவது தான் நோன்பின் அடிப்படை நோக்கம். இந்தப் பயிற்சியை பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இவனுக்கு அல்லாஹ் விடத்தில் எந்த மதிப்பும் கிடையாது.
صحيح البخاري (3ஃ 26)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
நோன்பு வைத்திருக்கும் போது பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விட்டு விட வில்லையோ அவர் தாகித்திருப்பதனாலும், பசித்திருப்பதனா லும் அல்லாஹ்வுக்கு எந்த தேவையு மில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி)
ஆன்மீக ரீதியில் மக்களை பண்படுத்தி பக்கு வப்படுத்தி உண்மையாளர்களாக, வாய்மை யுள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் பெரும் இலட்சியப் பயணத்தின் பயிற்சிப் பாசரையாக இருப்பது தான் ஒரு மாத கால நோன்பு! ஒவ்வொரு வணக்க வழிபாடுகளும் (இபாதத்களும்) இந்தப் பயிற்சியைத் தான் எங்களுக்கு வழங்குகிறது.
صحيح البخاري (3ஃ 26)
أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' قَالَ اللَّهُ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ، إِلَّا الصِّيَامَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَالصِّيَامُ جُنَّةٌ، وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ '
ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அவனுக்குரிய கூலி உண்டு. நோன்பைத் தவிர. நானே நோன்புக்கு கூலி வழங்குகிறேன். நோன்பு (தீமைகளி லிருந்து தடுக்கும்) ஒரு கேடயமாகும். எனவே உங்களில் எவரும் நோன்பு பிடித்திருக்கும் போது கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். வீண் கூச்சல் போட வேண்டாம் எவரேனும் ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளியாக இருக்கிறேன். (என்னுடன் பிரச்சினைப்படாதே) என்று கூறட்டும். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) (நூல் புகாரி.)
தற்காப்புக்காக கேடயத்தை பயன்படுத்தி உடலையும் உயிரையும் பாதுகாப்பது போல் ஆன்மாவையும் ஆன்மீகத்தையும் பாதுகாக்கும் கேடயமாகவே நோன்பு தரப் பட்டிருக்கிறது. வீண்வம்பை வளர்க்காமல் அடுத்த வரை சீண்டி பார்க்காமல் கௌரவத்துடன் நடந்து கொள்ளும் பாடத்தை கற்றுத்தருகிறது.
உலகில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அல்லாஹ் கூறும் விதத்தில் விரதத்தை கையாளும் முஸ்லிமுக்கு அது ஈடாகாது. அதுமட்டுமன்றி முஸ்லிம் நோன்புடன் இருக்கும் போது அவனுடைய வாயிலிலுந்து வரும் வாச னைக் கூட அல்லாஹ்விடத்தில் மதிப்புக்குரியதாக கணிக்கப்படுகிறது.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளிப்படும் மணம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து மேற் கொள்கின்ற ஒவ்வொரு காரியத்திற்கும் அளப்பெரிய கூலிகளை அல்லாஹ் தயார் படுத்தி கொடுக்கின்றான்.
صحيح مسلم (2ஃ 807)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ، الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ، قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي '
' لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ '
ஆதமுடைய மகன் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்குமுரிய கூலிகள் பன்மடங்காகும். ஒரு நன்மை பத்து மடங்கிலிருந்து ஏழுநூறு மடங்குகளாக வழங்கப்படு கின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு நோன்புக்கான கூலியைத் தவிர. நோன்பு எனக்குரியது அதற்கு நானே (கணக்கின்றி) கூலி வழங்குகிறேன். (ஆதமின் மகன்) எனக்காக அவனது உணவையும் இச்சையையும் விட்டு விடுகிறான் என அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
எனவே வாயை திறந்தால் தீய பேச்சுக்கள் பேசுபவர்களுக்கு, கெட்டவார்த்தைகளை பயன் படுத்துபவர்களுக்கு, வீண் கூச்சல் போடுப வர்களுக்கு, தொலைக் காட்சி (TV), சினிமாவில் மோகம் கொண்டவர்களுக்கு அதனை விட்டும் தூரமாகி தங்களுடைய நடத்தைகளை சீர் செய்து, நல்ல பண்பாடுகளை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு ஒர் அரிய சந்தர்ப்பம்.
வீண் பேச்சுக்களில், சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் நோன்பாளிகளுக்கு தொல்லை கொடுக்காமல் இரவு நேரங்களில் அரட்டை யடிக்காமல், பாதைகளில் விளையாட்டுகளில் ஈடுபடாமல், அடுத்தவர்களுக்குக் கஷ்டத்தை கொடுக்காமல் வாழப் பழகிக்கொள்ள பயிற்சி களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்காக தனது இச்சைகளை கட்டுப்படுத்தியதுடன் ஆகுமாக்கப்பட்ட (ஹலாலான) அனைத்தையும் நோன்பு நோற்றிருக்கும் போது விட்டு விடுகிறான். இத்தகைய தியாகத்துடன் பயிற்ச்சிகளை பெறக் கூடியவன் முன்மாதிரி மிக்க முஸ்லிமாக வாழ வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றி மாற்று மத நண்பர்களிடத்தில் தப்பான எண்ணங்கள் உருவாகாத முறையில் நடந்து கொள்ளவும் நோன்பின் மாண்புகளையும் இஸ்லாத்தின் தூதுத்துவத்தையும் புரியவைக்கும் செயல் பாடுகளை மேற்கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இந்த நோன்பை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுவும் ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆத்மீக, லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல் படுத்தி வைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.